முரசொலி தலையங்கம் (30-11-203)
சமூகநீதியில் அடைய வேண்டியவை
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது சிலைத் திறப்பு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூகநீதி வரலாற்றில் நாம் அடைய வேண்டிய இலக்குகளை விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்கள்.
கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு 2006-க்கு பிறகுதான் நடைமுறைக்கு வந்தது.
பல்கலைக்கழக மானியக்குழு இணை இயக்குநர் பதவிக்கு இடஒதுக்கீடே கிடையாது. எல்லாமே பொதுப்பிரிவு!
ஒன்றிய அரசின் துறைச் செயலாளர்கள் 89 பேரில் பட்டியலினப் பிரிவைச் சேர்ந்தவர் ஒரே ஒருவர்,பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 3 பேர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட கிடையாது!
ஒன்றிய அரசு துறைகளின் கூடுதல் செயலாளர்கள் 93 பேரில், பிற்படுத்தப்பட்டவர் ஒருவர் கூட கிடையாது!
ஒன்றிய அரசு துறைகளின் இணைச் செயலாளர்கள் 275 பெயரில், 19 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள்!
அசாம், உத்தரப் பிரதேசம்,சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருக்கின்ற மத்திய சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு வரை இடஒதுக்கீடே இல்லாத நிலைதான் நீடிக்கிறது.
45 மத்தியப் பல்கலைக்கழகங்களில், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்கள் 4 விழுக்காடு மட்டுமே.
2018 முதல் 2023 வரை நாடு முழுவதும் உயர்நீதி மன்றங்களில் நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில், 72 பேர் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.
உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை.
அரசுத் துறைகளின் பதவி உயர்வுகளின் போது இடஒதுக்கீடு முறைநடைமுறைப்படுத்தப்படவில்லை.
தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அந்தக் கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முழுமையாக முறையாக வழங்கப்படவேண்டும்.
பட்டியலின பழங்குடியின மக்களுடைய இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்படவேண்டும்.
சிறுபான்மையினர் இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும்.
இதையெல்லாம் அகில இந்திய ரீதியில் கண்காணித்து, உறுதி செய்ய அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கொண்ட குழு அமைக்கப்படவேண்டும். இதனையெல்லாம் அகில இந்திய அளவில் சமூகநீதியில் ஆர்வம் கொண்ட அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒற்றுமையாக இணைந்து மக்கள் நலனுக்காகச் செயல்படவேண்டும்.
- இவைதான் மாண்புமிகு முதலமைச்சர் வைத்த இலக்குகள் ஆகும். கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய இரண்டும் இதில் மிக முக்கியமானவையாக அமைந்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய இரண்டுக்குமான தடையை உடைத்தால் போதும், அதுவே அடுத்தடுத்த வெற்றியை உருவாக்கித் தரும். இதனை தான் வி.பி.சிங் சொன்னார்.
‘‘கல்வி வேறு, அறிவு வேறு. அந்த அறிவு மனிதனுக்கு அதிகாரத்தைத் தர இருக்கிறது. அப்படி அறிவு அதிகாரத்தைத் தருகிறது என்பதை ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே ‘அவர்கள்’ உணர்ந்தார்கள். அதனால்தான் அதிகாரத்தைத் தங்கள் கையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதி, ஒன்றைச் செய்தார்கள். மற்றவர்கள் படித்து அறிவு பெறக் கூடாது என்று நினைத்தார்கள். அப்படி நினைத்ததால்தான், சூத்திரர்கள் வேதத்தைப் படித்தால், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு அறிவுத் துறையைத் தங்கள் கையிலே ஏகபோகமாக வைத்துக் கொண்டார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை, தொழில் நுணுக்கங்களைக் கொடுக்க மறுத்தார்கள். இருந்த போதிலும் தானாகவே முயன்று ஏகலைவன் (வில்வித்தையைக்) கற்றுக் கொண்டான். அவனது கட்டை விரலையே வெட்டி விட்டார்கள். பணத்தை தருவார்கள், பொருளைத் தருவார்கள், கல்வியை மட்டும் தர மாட்டார்கள்” என்பதை தெளிவுபடுத்தி பேசினார் வி.பி.சிங் அவர்கள்.
‘‘ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகளிடையே பாகப் பிரிவினை நடந்தது. வீட்டில் இருந்த ஒரே மாட்டையும் இரண்டாகப் பிரித்துவிட வேண்டும் என்றார்கள். மாட்டின் தலைப்பகுதி தம்பிக்கும் பின்பகுதி அண்ணனுக்கும் பிரிக்கப்பட்டது. தம்பியின் கடமை ஒவ்வொரு நாளும் தலைப் பகுதியிலுள்ள வாய்க்கு மாட்டின் தீவனம் போட வேண்டும். அண்ணனோ ஒவ்வொரு நாளும், பின் பகுதியிலுள்ள மாட்டின் மடியிலிருந்து பால் கறந்து கொண்டே இருந்தார்.எத்தனை காலத்துக்குத்தான் இந்த அநீதியை தம்பி சகித்துக் கொண்டிருப்பான்? ஒரு நாள் அண்ணன் பால் கறந்து கொண்டிருக்கும்போது தம்பி, தலைப்பகுதியிலிருந்த கொம்பைப் பிடித்து ஆட்டி விட்டான். அவ்வளவுதான்; இத்தனை ஆண்டுகாலம் தீனி போடாமலேயே பாலை மட்டும் கறந்து கொண்டிருந்த அண்ணனை மாடு எட்டி உதைத்தது. அண்ணன் - இது அநீதி; அநியாயம் என்று அலறுகிறான். அந்தக் கொம்பைப் பிடித்து ஆட்டிய வேலையைத்தான் நான் செய்தேன்” என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.
இன்றைக்கு இடஒதுக்கீட்டுக்கு வேட்டு வைக்கத் துடிப்பது இதனால்தான். நீட் தேர்வைக் கொண்டு வந்து மருத்துவக் கனவை சிதைத்துவிட்டார்கள். புதிய கல்விக் கொள்கையானது அனைவரையும் தரநீக்கம் செய்யும் கல்வியாக மாறப் போகிறது. ‘ஒரே தகுதி முறை’ என்பதன் மூலமாக அனைவரையும் பலவீனப்படுத்தப் பார்க்கிறார்கள். இவை அனைத்தையும் உடைக்கும் ஒரே ஆயுதமாக இருக்கப் போவது சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு முறையே ஆகும்.
பட்டியலின - பழங்குடியின மிகவும் பிற்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின மகளிர் மாற்றுத்திறனாளிகள் - திருநங்கையர் - விளிம்பு நிலை மக்கள் அனைவர்க்கும் இடஒதுக்கீடு வழங்கி அதிகாரத்தை சமப்படுத்த வேண்டும். அனைத்து தரப்பட்ட மக்களும் பங்களிப்பதே அதிகாரச் சமநிலை ஆகும். அதனை நோக்கிய இலக்குகளையே முதலமைச்சர் அவர்கள் வைத்துள்ளார்கள். ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமையும் போது இவை சமூகநீதி இலக்குகளாக நிச்சயம் அமையும்.