முரசொலி தலையங்கம் (28-11-2023)
உத்தரகாண்ட் சோகம்
தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. போர் விமானத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பிரதமர், விமானி உடுத்தும் உடைகளை அணிந்திருந்தார்.
“தேஜஸ் போர் விமானத்தில் வெற்றிகரமாக நான் பறந்தேன். விமானத்தில் பறந்தது நம்ப முடியாத செழுமையான அனுபவத்தையும், நமது நாட்டின் உற்பத்தித் திறனில் நான் வைத்துள்ள நம்பிக்கையையும் உறுதிப்படுத்தியது. நமது நாட்டின் திறன் குறித்த எனது பெருமிதம் மற்றும் நம்பிக்கையைப் புதுப்பிக்க உதவியது” - - என்று பிரதமர் அவர்கள் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
உண்மைதான். பெருமைப்படக் கூடிய தயாரிப்புதான் தேஜஸ் விமானம். அதில் அய்யமில்லை. அதே நாளில் இன்னொரு செய்தியையும் ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன.
‘உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பணியின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 13 நாட்களாகியும் இன்னும் மீட்கப்படவில்லை’ என்பதுதான் அந்தச் செய்தி. இது இந்தியாவின் இன்னொரு உண்மையும் ஆகும். ‘அவர்களை மீட்க இன்னும் ஒரு மாதம் வரை ஆகலாம். கிறிஸ்துமஸ்க்கு அவர்கள் வீடு திரும்புவார்கள்’ என்று சர்வதேச சுரங்க மீட்பு நிபுணரான அர்னால்ஸ்ட் டிக்ஸ் சொல்லி இருக்கிறார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா என்ற பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 12 ஆம் தேதி எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கத்தின் உள்ளே 41 தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களை மீட்பதற்கான பணி உடனடியாக தொடங்கியது. பேரிடர் மீட்புப் படையினர், சுரங்க நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் என அனைத்துத் தரப்பினரும் வரவழைக்கப்பட்டார்கள். தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் உள்ளே இருக்கிறார்கள். ஆனால் அவர்களை மீட்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. மீட்புப் பணி தொடங்கியதில் இருந்தே தடங்கல் ஏற்பட்டு வந்தது.
மீட்புப் பணிகள் நடக்கும் போதே நிலச்சரிவு ஏற்படும் வகையில் அந்தப் பகுதி உள்ளது. கனமான –- கடினமான பாறைகளாக இல்லாமல் லேசான –- உடைத்தால் தூசாக ஆகும் தன்மை கொண்டதாக அவை உள்ளன. அதனால் நிலச்சரிவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தப் பாறைகளை கையில் எடுத்தாலே உதிரியாய் பெயர்ந்து வரும் அளவுக்கு மென்மையாக இருக்கிறது. நுழைவு வாயில் வழியாக உள்ள இடிபாடுகளை அகற்றும்போது மேலும் மண், பாறை சரிவுகள் ஏற்படுகின்றன. இதைப் பொருட்படுத்தாமல் மேலும் மேலும் தோண்ட தொடங்கினால் சுரங்கம் முழுமையாக இடிந்து விழும் அபாயம் ஏற்படும்.
சுரங்கத்திற்குள் துளையிடுவதற்காக அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணிகள் கடந்த 25 ஆம் தேதி துவங்கின. சுரங்கத்தின் மேல்புறத்தில் இருந்து செங்குத்தாக துளை போட்டு மீட்கும் பணியையும் செய்ய முடியவில்லை. மீட்புப் பணிக்கான ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள், கான்கிரீட் கம்பிகளில் சிக்கிக் கொள்கிறது. கான்கிரீட் கம்பிகளை அகற்றுவதே பெரிய பிரச்சினையாக உள்ளது.
இயந்திரத்திற்கு இடையூறாக இருந்த உலோக கர்டர்கள் மற்றும் குழாய்களை அகற்றவே பல மணிநேரங்கள் ஆனது.இதையடுத்து அதை இயந்திரம் மூலம் தோண்டவே முடியாது என்ற சூழல் ஏற்பட்ட நிலையில், மீட்புப் படையினர் அவர்களே துளையிடும் பணிகளில் இறங்கி வருகின்றனர்.
சுரங்கபாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். “இது மலைப்பகுதியில் நடக்கும் மீட்புப் பணி என்பதால் மிகவும் பிரச்சினையாக உள்ளது. இதில் அவசரப்படக்கூடாது. தொடக்கத்தில் இருந்தே இந்தப் பணி என்பது வேகமாக நடக்கும் என உறுதியளிக்கவில்லை. மாறாக இந்தப் பணி சவால் நிறைந்ததாகத் தான் இருக்கும் என கூறினேன். அது தொடர்கிறது. ஆனால் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்’’ என்று சொல்லி வருகிறார். உலகப் புகழ் பெற்ற இவராலேயே எப்போது தொழிலாளர் மீட்கப்படுவார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
இதுவரை இரண்டு துளையிடும் முறைகள் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதனால் பயனில்லை. கிடைமட்டமாக துளையிட்டு 47 மீட்டர் போன பிறகுதான் ஆக்கர் இயந்திரம் உடைந்தது.
“தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கத்தின் மேல் ஓடு பகுதியை சென்றடைய 86 மீட்டர் அளவுக்கு செங்குத்தாக துளையிட வேண்டியுள்ளது. அதன்பிறகு சுரங்கப் பகுதி உடைக்கப்பட்டு தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள். இது கடினமான பணி” என்று தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். தொழிலாளர்களது குடும்பங்கள் தவித்துக் கொண்டு இருக்கின்றன. ‘இதோ மீட்புப் பணி முடிந்துவிடும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் அதிகாரிகள். ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டு இருக்கிறது. பணிகள் தேக்கமடைந்து கொண்டே போகின்றன’ என்று தொழிலாளர்களது குடும்பத்தினர் பேட்டி அளித்துள்ளார்கள்.
இது போன்ற பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்கான தொழில் நுட்பத்தில் எவ்வளவு பலவீனமாக இருக்கிறோம் என்பதற்கு உதாரணமாக ஆகிவருகிறது உத்தரகாண்ட் சோகம்.