முரசொலி தலையங்கம் (19-10-2023)
நாற்காலிச் சண்டை
“சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் யாருக்கு எந்த இடம் என்ற நாற்காலிச் சண்டையில் ஈடுபட்டுக் கிடக்கிறது” - என்று பழனிசாமியை விமர்சித்துள்ளார் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அதுதான் முழு உண்மை ஆகும்.
சட்டமன்றத்தில் ஒரே ஒரு பிரச்சினைக்காகத்தான் வேகவேகமாக பேசுவார் பழனிசாமி. அது தனக்குப் பக்கத்தில் யார் உட்காருவது என்பதுதான். தனக்குப் பக்கத்தில் பன்னீர்செல்வம் உட்கார்ந்திருப்பது பழனிசாமிக்கு பிடிக்கவில்லை. அதற்கு என்ன செய்ய முடியும்? அவர் ஒருங்கிணைப்பாளராக இருந்த கட்சிக்குத்தானே பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார்? அவருக்கு துணை முதலமைச்சர் கொடுத்து வைத்துக் கொண்டவரும் இவர்தானே?
யாரை எங்கே உட்கார வைக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை, விருப்பம் சார்ந்தது - என்று பேரவைத் தலைவர் அப்பாவு சொல்லிவிட்டார். இதனை புரிந்துக்கொள்ளும் தன்மை பழனிசாமிக்கு இல்லை.
“உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 பேர் இந்த அவையில் இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்று வந்து, இரட்டை இலைக்கு எதிராக Floor testல் ஓட்டுப் போட்டதற்குப் பிறகு, Tenth Schedule of the Indian Constitution-படி அவர்களை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். அதை அப்போது செய்யவில்லை. அவர்கள் தேவையென்றால் வைத்துக்கொள்கின்றார்கள். தேவையில்லையென்று சொன்னால் அவர்கள் இஷ்டத்திற்கு முடிவெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு petition–ஐக் கொடுத்ததற்கு 18 எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க. ஆட்சியில் பதவி நீக்கம் செய்திருக்கின்றார்கள். ஆனால், எதிர்த்து ஓட்டு போட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை" என்று பழனிசாமி காலத்தை நினைவூட்டி இருக்கிறார் பேரவைத் தலைவர் அப்பாவு.
“அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் இருந்து பன்னீர்செல்வத்தை மாற்றிவிட்டு ஆர்.பி.உதய குமாருக்கு இடம் அளிக்க வேண்டும்’’ என்று இப்போது சட்டசபையில் எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இந்த பிரச்சினையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
’’இந்த விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு நடுநிலையுடன் செயல்படவில்லை’’ என ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருக்கிறார். நடுநிலை என்றால் என்ன? அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்து கொண்ட நடுநிலைமையின் கதையை அறிவோமா?
2001 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது ஜி.கே. மூப்பனார் தலைமையில் த.மா.கா. செயல்பட்டு வந்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது த.மா.கா. காங்கிரஸ் கட்சிக்கும் சேர்த்து ஜெயலலிதாவிடம் மூப்பனார் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்படி 47 தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கினார். அதில், 15 தொகுதிகளைக் காங்கிரஸுக்குக் கொடுத்தார் மூப்பனார்.
தேர்தலில் அ.தி.மு.க. வென்றது. த.மா.கா. 23 இடங்களிலும் காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. கொஞ்ச நாளிலேயே மூப்பனார் மறைந்தார். த.மா.கா.வுக்கு புதிய தலைவராக ஜி.கே.வாசன் நியமிக்கப்பட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு த.மா.கா.வை காங்கிரஸுடன் இணைக்க வாசன் முடிவு செய்தார். 2002-இல் மதுரையில் காங்கிரஸ் கட்சியில் த.மா.கா. முறைப்படி இணைந்தது. இரு கட்சிகளின் இணைப்புக்கு கிள்ளியூர் தொகுதி த.மா.கா. எம்.எல்.ஏவான குமாரதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அவருடன் இன்னும் சில த.மா.கா. எம்.எல்.ஏ–களும் சேர்ந்து கொண்டனர்.
காங்கிரசுடன் த.மா.கா. இணைந்தாலும் தங்களை த.மா.கா. எம்.எல்.ஏக்களாகவே கருத வேண்டும் என்று அன்றைய சபாநாயகர் காளிமுத்துவிடம் இந்த ஐந்து அதிருப்தி த.மா.கா. எம்.எல்.ஏக்களும் கடிதம் கொடுத்தனர். அதாவது அவர்களை ஆளும் கட்சியான அ.தி.மு.க. பின்னால் இருந்து இயக்கியது. ‘5 த.மா.கா. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து த.மா.கா. எம்.எல்.ஏக்களாகவே செயல்படுவார்கள். த.மா.கா. என்று ஒரு கட்சியே இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால் அப்போது இந்த 5 எம்.எல்.ஏக்களின் பதவி குறித்து முடிவு செய்யப்படும்’’ என்று சபாநாயகர் காளிமுத்து அறிவித்தார். இணைப்புக்குப் பிறகு த.மா.கா.வின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
த.மா.கா. அங்கீகாரத்தைத் தேர்தல் கமிஷன் ரத்து செய்த நிலையில், குமாரதாஸ் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்களை எக்கட்சியையும் சேராதவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் கோரிக்கை வைத்தார். இந்த விவகாரத்தில் சபாநாயகர் காளிமுத்து நடுநிலையாகச் செயல்படவில்லை. அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் கண்ணசைவுக்கு ஏற்றார் போல நடந்து கொண்டார். “குமாரதாஸ் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்களும் தனி அணியாகச் செயல்படுவர். அவர்கள் த.மா.கா. எம்.எல்.ஏக்களாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்குச் சட்டசபையில் தனி இடம் ஒதுக்கப்படும்’’ என்று சபாநாயகர் காளிமுத்து அறிவித்தார். ‘சட்டசபையைப் பொறுத்தவரை எனது முடிவே இறுதியானது’’ என்றார். ஐந்து பேரும் த.மா.கா.விலேயே நீடிப்பார்கள் என்று காளிமுத்து கூறியதன் மூலம் தேர்தல் கமிஷனால் நீக்கப்பட்ட த.மா.கா. சட்டமன்றத்தில் மட்டும் செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.
குமாரதாஸ் உள்ளிட்ட 4 பேரை கட்சி தாவல் சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மனு தாக்கல் செய்தார். விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் காளிமுத்துவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. இதே போலத்தான் 2011 – 2016 ஆட்சிக் காலத்திலும் அ.தி.மு.க. நடந்து கொண்டது.
2011 – 2016 அ.தி.மு.க. ஆட்சியில் தே.மு.தி.க–வின் 29 எம்.எல்.ஏ-களில் சிலர் தொகுதி பிரச்சினைக்காக (?) ஜெயலலிதாவைச் சந்தித்து அவரை ஆதரித்த அவலம் நடந்தது. மாஃபா பாண்டியராஜன், தமிழழகன், அருண் சுப்பிரமணியன், அருண் பாண்டியன், மைக்கல் ராயப்பன், சாந்தி, சுந்தரராஜன், சுரேஷ் ஆகியோருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சட்டசபையில் அவர்களுக்குத் தனியாக இருக்கைகளும் பேச வாய்ப்புகளும் கொடுத்தவர் சபாநாயகர் ஜெயக்குமார். பிறகு ஜெயக்குமார் சபாநாயகர் நாற்காலியில் இருந்து தூக்கப்பட்ட பிறகு வந்த தனபாலும் அதே பாதையில் பயணித்தார்.
இதுதான் அ.தி.மு.க. அன்று நடந்து கொண்ட முறை. எனவே, நடுநிலையை பற்றி யாருக்கும் பாடம் எடுக்கும் தகுதி அ.தி.மு.க.வுக்கு இல்லை.
நாளையோ – நாளை மறுநாளோ பழனிசாமியும் - பன்னீர் செல்வமும் ஓரணி ஆக மாட்டார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் விருப்பத்துக்குத் தகுந்த மாதிரி வாசலை மாற்றிக் கட்ட முடியுமா?