முரசொலி தலையங்கம் (06-10-2023)
மகளிர் இடஒதுக்கீட்டில் சதி அரசியல்
“என் பெயரில் வீடு எதுவும் இல்லை. ஆனால் நாட்டின் லட்சக்கணக்கான மகள்களை வீட்டு உரிமையாளர் ஆக்கியுள்ளது பா.ஜ.க. அரசு” என்று தனக்குத்தானே பாமாலை சூட்டிக் கொண்டிருக்கிறார் மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள்.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி வழங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு அவருக்கு குஜராத் மாநிலத்தில் பெண்கள் சார்பில் பாராட்டு விழா நடந்துள்ளது. குஜராத் மாநிலம் வதோராவில் பா.ஜ.க. சார்பில் இந்த பாராட்டு விழா நடந்துள்ளது. இதில் பேசும்போது, பெண்கள் இடஒதுக்கீடு குறித்து தவறான பிம்பத்தைக் கட்டமைக்கிறார் பிரதமர்.
“பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் இருக்க கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு தந்திர வேலைகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வந்தனர். இப்போதும் கூட, பெண்கள் மீதான அச்சத்தால் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு தயக்கத்தில்தான் மசோதாவை ஆதரித்துள்ளனர். அவர்களின் அணுகுமுறை ஒருபோதும் மாறாது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நிறைவேற்றப்பட்டு விட்டதால் ஜாதி, மத ரீதியில் பெண்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அவர்களின் சதி குறித்து மகளிர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார். இவை அனைத்தும் பொய் முலாம் பூசப்பட்டவை அல்ல, மொத்தத்தில் பொய் மூட்டை ஆகும்.
அகில இந்திய மஜ்லிஸ் என்ற கட்சியைத் தவிர ஒட்டுமொத்தமாக இந்திய மக்களவையிலும் –- மாநிலங்களவையிலும் இருந்த அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து வாக்களித்ததுதான் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் ஆகும். எந்த முக்கியக் கட்சியும் எதிர்த்து வாக்களிக்கவும் இல்லை. அதனைத் தடுத்து சதி செய்யவும் இல்லை. அந்த மசோதாவுக்கு எதிராகப் பேசவும் இல்லை.
எந்தக் கட்சிகளுக்கும் அந்த மசோதாவை ஆதரிப்பதற்கான தயக்கம் இல்லை. நடுக்கம் இல்லை. தடுமாற்றம் இல்லை. எனவே பயந்துதான், அதனை ஆதரித்தார்கள் என்பதும் பொய்யாகும். ஏதாவது முக்கியக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தால், அதனை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு விடலாம் என்று பா.ஜ.க. தலைமை நினைத்தது. அதன் நினைப்பில் எதிர்க்கட்சிகள் சேர்ந்து மண்ணைப் போட்டு –- நிறைவேற்ற வைத்து விட்டார்கள். அதுதான் முழு உண்மை.
இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரையில் –- 33 விழுக்காடு பெண்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடுதான் பா.ஜ.க. கொண்டு வந்துள்ளது. ‘இனி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற –- சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு’ என்று இந்தச் சட்டம் சொல்லவில்லை. பிரதமர் மோடி அவர்கள், தடையே இல்லாமல் நிறைவேற்றும் வகையில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவில்லை.
•மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு
•அதை வைத்து தொகுதி மறுவரையறைகள் முடிந்த பிறகு –- என்ற இரண்டு மாபெரும் தடுப்புச் சுவர்களை எழுப்பி இருக்கிறார். இதுதான் பெண்களுக்கு எதிரான சதிச் செயல் ஆகும்.
பெண்களுக்கான உரிமையை பா.ஜ.க. எப்போதும் வழங்காது. பிரதமராக இந்திரா காந்தி அம்மையார் பொறுப்பேற்றபோது, அவர் பெண் என்பதற்காகவே கண்டித்து எழுதியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ இதழான ‘ஆர்க்கனைசர்’. இன்றும், குடியரசுத் தலைவராக இருக்கும் திரவுபதி முர்மு அவர்களை எப்படி எல்லாம் அவமானப்படுத்தி வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். சூத்திரர்களையும் பெண்களையும் இழிவான தன்மையில் அடையாளப்படுத்தியவர்கள் இவர்கள். அதனால், பெண்களுக்கான உரிமையை அவ்வளவு சீக்கிரம் தூக்கிக் கொடுத்து விடமாட்டார்கள் பா.ஜ.க.வின் தலைமையினர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பும் –- தொகுதி வரையறையும் முடிந்த பிறகு என்றால் 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் 33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைக்கும். 2029 ஆம் ஆண்டு –- அதாவது இன்னும் 6 ஆண்டுகள் கழித்து நிறைவேறப்போகிற சட்டத்தை –- இன்று நிறைவேற்றி விட்டதாக கணக்குக் காட்டி -– கண்கட்டி வித்தை காட்டுகிறார் பிரதமர்.
2029 ஆம் ஆண்டுகூட இது நிறைவேறாது என்று சொல்லி இருக்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். ‘இந்தச் சட்டமே கேலியான மாயை. இது கிண்ணத்து தண்ணீரில் தெரியும் நிலவின் பிரதிபலிப்பு’ என்று அவர் சொல்லி இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு எடுக்கவேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பே இன்னும் எடுக்கப்படவில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது மிகப்பெரிய வேலை. அதன் முடிவுகளை வெளியிடவே இரண்டு ஆண்டுகள் ஆகும். இன்னும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான தேதியையே இவர்கள் வெளியிடவில்லை. தொகுதி வரையறையை 2026 வரைக்கும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு நடந்த தொகுதி வரையறையே 6 ஆண்டுகள் ( 2002-–2008) நடந்தது. எனவே, இந்தச் சட்டத்தை 2029 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த இயலாது -– என்று மிகத் தெளிவாக, மோடி ஆட்சியின் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் முகத்திரையைக் கிழித்திருக்கிறார் ப.சிதம்பரம்.
1996 ஆம் ஆண்டு -– 2010 ஆம் ஆண்டு –- கொண்டு வரப்பட்ட சட்டங்களில் இதுபோன்ற தடைச்சுவர்கள் இல்லை. என்றால் இப்போது இத்தடைகளை உருவாக்கியது யார்? எதிர்க்கட்சிகள் அல்ல. இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள்தான் இந்த தடைச்சுவரையும் எழுப்பியவர்கள்.
எந்தத் தடையும் இல்லாமல் பா.ஜ.க. இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருந்து –- எதிர்க்கட்சிகள் இந்த நிபந்தனையைச் சேர்க்கச் சொல்லி இருந்தால் -– பிரதமர் குற்றம் சாட்டலாம். அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே பெண்களுக்கு உரிமை கிடைக்கக் கூடாது என்பதே பிரதமர் மோடியின் சதித் திட்டம் ஆகும்.
அதிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுப்பது என்பதும், பா.ஜ.க.வின் உயர்வகுப்பு எண்ணத்தின் வெளிப்பாடுதான். அரசியல் அதிகாரத்தை மேல்மட்டத்திலேயே வைத்துக் கொள்ள நினைக்கும் சதிச் செயல்தான் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.