மணிப்பூர் மீண்டும் எரிகிறது !
மே - சூன் - சூலை - ஆகஸ்ட் - செப்டம்பர் என ஐந்து மாதமாக எரிந்து கொண்டிருக்கிறது மணிப்பூர் மாநிலம். ஒன்றிய பா.ஜ.க. அரசின் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு இது. அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசின் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு இது.
ஒரே ஒரு மாநிலத்தின் பிரச்சினையைக் கூடத் தீர்க்க முடியாமல் - கூச்சமே இல்லாமல் நாடாளுமன்றத்தில் எப்படித்தான் பிரதமரும் - உள்துறை அமைச்சரும் தலைநிமிர்ந்து பேசுகிறார்கள் என்றே தெரிய வில்லை? அவர்களுக்கு இது ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லையா? மணிப்பூரை வேறு நாடு என்று நினைத்துக் கொள்கிறார்களா?
மணிப்பூர் மாநிலத்தை கலவர பூமியாக அறிவித்து அம்மாநில ஆளுநர், நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். மணிப்பூரில் மே மாதம் முதல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. செப்டம்பர் 23-ந் தேதிதான் முழுமையாக இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது. தற்போது மாணவர்கள் படுகொலை காரணமாக வன்முறை பரவாமல் இருக்க அடுத்த 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய சேவை துண்டிக்கப் பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளை மீண்டும் மூட உத்தரவிட்டுள்ளது மாநில அரசு. அதாவது மே மாதம் முதல் ஐந்து மாதங்களாக எரிகிறது மணிப்பூர். எரிந்து கொண்டே தான் இருக்கிறது.
கடந்த மே மாதம் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்கள் பற்றிய விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. மற்றும் விசாரணைக்குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன மாணவர், மாணவிகளில் ஹிஜம் மற்றும் பிஜம் என்ற இருவரும் முகாம் ஒன்றில் புல்வெளி தரையில் உட்கார வைத்து இருப்பது போன்ற காட்சியும், அவர்களுக்குப் பின்னால் ஆயுதம் ஏந்தி சிலர் நிற்பது போன்ற காட்சியும் வெளியாகியுள்ளது.
அதே வீடியோவில் அடுத்த சில நிமிடங்களில் அந்த 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இது தொடர்பாக, மணிப்பூர் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “இணைய சேவை பயன்பாட்டுக்கு வந்த பின்னர் இரண்டு மாணவர்களின் புகைப்படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இறந்துபோன மாணவர்கள் ஹிஜாம் லின்தோயின்காம்பி (17), பிஜாம் ஹேம்ஜித் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாணவர்களும் கடந்த ஜூலையில் காணாமல் போனவர்கள். மணிப்பூர் வன்முறை வழக்கு ஏற்கெனவே சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மக்கள் விருப்பத்தின் பேரில்தான் வழக்குகள் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டன.
தற்போது வெளியான புகைப்படம் தொடர்பாக உறுதியான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும். இந்த கொடுங் குற்றத்தைச் செய்தவர்களுக்கு நிச்சயமாகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது அந்த இரண்டு மாணவர்களும் ஏதோ ஓர் ஆயுதக் குழுவின் வனப்பகுதி கூடாரத்தில் இருப்பது புலப்படுகிறது. அந்த மாணவர்கள் படுகொலையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து மத்திய பாதுகாப்பு அமைப்புகளுடன் மணிப்பூர் காவல்துறையினரும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என விளக்கம் அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் மணிப்பூர் மாநில அரசு சொன்னதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தலைநகர் இம்பாலில் முதல்வர் பிரேன்சிங்கின் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலரும் காயமடைந்தனர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. இந்தப் போராட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தை கலவர பூமியாக அறிவித்து அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். 19 மாவட்டங்கள் தவிர பிற பகுதிகள் அனைத்தும் பதற்றத்துக்குரிய பகுதியாகத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இந்தச் சட்டம் அமலில் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதைத் தவிர அந்த மாநில அரசால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒன்றிய அரசாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
இவ்வளவு நடந்த பிறகும் அந்த மாநிலத்தின் முதலமைச்சரை மாற்றக் கூட பா.ஜ.க. தலைமையால் முடியவில்லை. அந்த நடவடிக்கையைக் கூட எடுக்கவில்லை. முதலமைச்சர் பிரேன் சிங் மீதான நம்பிக்கை யின்மைதான் இந்தக் கலவரங்களுக்குக் காரணம். அவரை நீக்குவதன் மூலமாக போராட்டக் காரர்களை அமைதிப்படுத்தலாம். அதனைக் கூட பா.ஜ.க. தலைமையால் செய்ய முடியவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி, இது வரை மணிப்பூர் பக்கமே போகவில்லை. செப்டம்பர் முதல் வாரத்தில் கலவரம் கொஞ்சம் அடங்கியது போலத் தெரிந்தது. அப்போதாவது பிரதமர் மோடி போய் மக்களைச் சந்தித்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தனியாக விவாதம் கூட நடத்தத் தயாராக இல்லை. மற்ற பிரச்சினைகளைப் பற்றி எல்லாம் பேசி விட்டு – ஒப்புக்கு கடைசியாக ஐந்து நிமிடம் பேசினார் பிரதமர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவருக்குத் தொடர்பு இல்லாத அரசியல் பிரச்சினைகளுக்கு எல்லாம் விளக்கம் அளிப்பார். ஆனால் அவர் பொறுப்பேற்க வேண்டிய மணிப்பூர் கலவரங்களை மட்டும் மறந்துவிடுவார்.
மணிப்பூரில் நடப்பது இனவாதப் படுகொலைகள். மாநில பா.ஜ.க. அரசும் ஒன்றிய பா.ஜ.க. அரசும் – கைகட்டி வேடிக்கை பார்க்கவே நடக்கிறது. இவர்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள் என்பதால் நடக்கிறது.