தாயுமானார் தந்தையுமானார்
‘இது உதவித் தொகையல்ல - உரிமைத் தொகை’ என்று சொன்னார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். உரிமைத் தொகையானது உரியவர்களுக்கு போய்ச் சேரத் தொடங்கி விட்டது. இந்த மாதம் மட்டுமல்ல, இனி மாதம் தோறும் கிடைக்கப் போகிறது. இந்த ஆண்டு மட்டுமல்ல, இனி ஆண்டு தோறும் கிடைக்கப் போகிறது. பெண்ணினத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கி இருக்கும் மாபெரும் கொடையாகும் இது.
‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ என்பது திராவிட மாடல் ஆட்சியின் கொடை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடை. தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டின் கொடை. தி.மு.க.வுக்கு இது பவள விழா ஆண்டு. இந்த பவள விழாவின் கொடை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பரந்த உள்ளத்தின் விரிந்த பரப்பைக் காட்டுவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளார்கள். ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தரப்படும் திட்டம் தொடங்கி விட்டது. விடுபட்டவர்கள் அனைவர்க்கும் அதற்கான காரணத்தை அறிவிக்கிறார்கள். ஒருவேளை, அவர்கள் மறுபடியும் விண்ணப்பித்தால் அதையும் அரசு ஆய்வு செய்ய இருக்கிறது. ஒருவேளை, அவர்களுக்கு மீண்டும் கிடைக்கலாம். இவ்வளவு நெகிழ்வுத் தன்மையுடன்தான் இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிலருக்கு கொடுத்து கணக்குக் காட்ட நினைத்திருந்தால், இது போல் எல்லாம் சொல்ல மாட்டார்கள். ‘விடுபட்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம்’ என்றெல்லாம் வாய்ப்பை வழங்க மாட்டார்கள். மாறாக, உரியவர்கள் யாரும் விடுபட்டு விடக் கூடாது என்பதில் முதலமைச்சர் அவர்கள் கருத்தாக இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் அறிவிக்கப்பட்டது.
‘யாருக்கெல்லாம் கிடைக்கும்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் தேவையோ - அவசியமோ அவர்கள் அனைவருக்கும் கிடைக்கும்’ என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள்.
நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரேநாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய விளிம்பு நிலையில் வாழும் பெண்கள் என பல்வேறு வகையில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் பெண்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறவுள்ளார்கள் - என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள்.
இத்தகைய பெண்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கிடைப்பது என்பது சாதாரணமானது அல்ல. ‘நம்மிடம் ஆயிரம் ரூபாய் கூட இல்லையே. நம்மிடம் கையில ஒரு நூறு ரூபாய் கூட இல்லையே’ என்ற ஏக்கம் இனி அவர்களுக்கு இருக்காது. அந்த ஏக்கத்தைத் துடைத்து விட்டார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்றால் அது வெறும் பணம் மட்டுமல்ல. மகளிருக்கு ஆயிரம் ரூபாயின் மூலமாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது. மதிப்பும் மரியாதையும் வழங்கப்படுகிறது. தன்னம்பிக்கை வழங்கப்படுகிறது. ஒரு விதமான அதிகாரம் வழங்கப்படுகிறது. இதனுடைய மதிப்பை ஆயிரம் ரூபாய் என்று அளவிட முடியாது. இது ஆயிரம் விதமான உணர்வுகளை ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கத்தான் போகிறது. “ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கப் போகிறது.
இது பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும். தந்தை பெரியாரிடம், பேரறிஞர் அண்ணாவிடம், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களிடம் நாங்கள் கற்ற பாடங்களின் அடிப்படையில் இந்தத் திட்டத்தை தீட்டி இருக்கிறோம்.” என்று முதலமைச்சர் அவர்கள் சொல்வதற்குள் மாபெரும் சமூக நோக்கம் இருக்கிறது.
ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட - பட்டியலின - பழங்குடியினர் நல்வாழ்வையும் - பெண்ணினத்தின் பெருவாழ்வையும் எப்போதும் கவனத்தில் வைத்தே செயல்பட்டு வந்திருக்கிறது திராவிட இயக்கம். அந்த இயக்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் - 1921 ஆம் ஆண்டு பெண்களும் வாக்களிக்கலாம் என்ற சட்ட உரிமை தரப்பட்டது. தந்தை சொத்தில் மகளுக்கும் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்தான் 1989 ஆம் ஆண்டு பிறப்பித்தார்கள். பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு தரப்பட்டது. மகளிர் சொந்தக் காலில் நிற்கவும், அவர்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றவர்களாக வலம் வரவும் மகளிர் சுய உதவிக் குழுக்களை தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கில் தொடங்கி வைத்தவர் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். இப்போது ஆட்சிக்கு வந்ததும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இட்ட முதல் கையெழுத்து என்பது மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தரும் விடியல் பயணம் திட்டம் தொடங்கப்பட்டது.
‘புதுமைப் பெண்’ என்ற திட்டப்படிப் அரசுப் பள்ளியில் படித்து,கல்லூரிக் கல்வியை அடையும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைத்து வருகிறது. இதோ இப்போது கலைஞர் அவர்கள் பெயரிலான மகளிர் உரிமைத் தொகையை ஒரு கோடி பெண்கள் பெற இருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் தாயுமானவராய் - தந்தையுமானவராய் உயர்ந்து நிற்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஒரு கோடி குடும்பங்களின் சார்பில் முதலமைச்சரை வாழ்த்துகிறோம். கிராமப்புறப் பெண்கள் பாணியில் சொல்வதாக இருந்தால், “மவராசன் வாழ்க!”