முரசொலி தலையங்கம் (06-09-2023)
இந்தியாவை வழிநடத்தும் தளபதி
இந்தியாவை வழிநடத்தும் குரலை முன்மொழிந்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
இந்தியாவை வழிநடத்தும் முன்னணிப் படையாக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதுமே இருந்து வந்துள்ளது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இன்றைய முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள்.
பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு அகில இந்திய அளவில் இன்று சமூகநீதி காக்கப்பட மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்கான முதல் குரலை 1973 ஆம் ஆண்டே முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எழுப்பினார்கள்.
14.10.1973 அன்று அலகாபாத்தில் உத்தரப்பிரதேச மாநில பட்டியலின – பிற்படுத்தப்பட்டோர் மாநாடு நடந்தது. அதில் முதலமைச்சர் கலைஞர் பங்கெடுத்து உரையாற்றினார். தனது உரையின் முடிவில் இப்படிக் குறிப்பிட்டார் கலைஞர் அவர்கள்...
“பட்டியலின - பின் தங்கிக் கிடக்கின்ற சமுதாயத்திற்காக மத்திய அரசினர் இரண்டு முன்னெடுப்புகளை நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
* மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஒழுங்காக முழுமையாக நிரப்பப் பட வேண்டும்.
* அது போல மத்திய அரசாங்கத்தினுடைய வேலை வாய்ப்புகளில் - இனி மேல் பின் தங்கிய மக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு, இவ்வளவு இடம் என்று ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதையும் மத்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்” என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை தான் பிற்காலத்தில் மண்டல் ஆணையத்தின் மூலமாக இந்தியா முழுமைக்குமான பிற்படுத்தப்பட் டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைத்தது.
இந்தியாவில் மாநில சுயாட்சிக்கான முதல் குரலை ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலமாக வழிகாட்டியவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள். முதலமைச்சர் ஆனதும் நடந்த முதல் தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில், மாநில சுயாட்சிக் குரலை ஒலித்தார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். ‘முதலமைச்சர் ஆவதற்கு முன் இவர் டெல்லிக்கு வந்திருந்தாரா இல்லையா என்பதே தெரிந்து கொள்ள முடியாத ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மாநில சுயாட்சியின் குரலை எதிரொலித்ததன் மூலமாக இந்தியாவின் கவனத்தைப் பெற்றார்’ என்று 1970 ஆம் ஆண்டு ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஏட்டில் பத்திரிகையாளர் என்.எஸ்.ஜே. எழுதினார். இதுதான் மாநில சுயாட்சித் தீர்மானமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. அதற்கு முன் அப்படி ஒரு தீர்மானம் இந்தியாவில் எந்த மாநில சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்படவில்லை.
இதே போல் தான்,
அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்ட போதும், முதன்முதலாக ஒரு ஆளும் கட்சி எதிர்த்தது என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம் தான். இப்படி முன்னணிப் படையாக தி.மு.க. இயங்கியது. இப்போதும் இயங்கி வருகிறது.
நீட் விலக்கு மசோதா, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - – மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு - – என இந்தியாவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் திட்டங்களுக்கு மிகக்கடுமையான எதிர்ப்பை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவு செய்து வருகிறார்கள். இப்போது அவர், 'இந்தியாவுக்காக பேசத் தொடங்கி' இருக்கிறார்.
SPEAKING FOR INDIA -– என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது குரலானது இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது.
ஆறாவது முறையாக கழகத்தை ஆட்சியில் அமர வைத்து 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த வாக்குறுதிகளில் 75 விழுக்காட்டுக்கு மேல் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிக் காட்டி -– அறிவிக்காத பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றி வருபவர் அவர்.
இன்றைக்கு இந்தியாவே வியந்து பார்க்கும் ஆட்சியாக தமிழ்நாடு அரசு இருந்து வருகிறது.
இத்தகைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக - முக்கியக் கட்சியின் தலைவராக இருக்கும் அவர் இப்போது இந்தியாவுக்காகப் பேச வந்திருக்கிறார்.
இந்தியாவுக்காக அனைவரும் பேசியாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த குரல் பதிவுத் தொடரை அவர் தொடங்கி இருக்கிறார்.
இந்திய நாடு இப்போது ஆபத்தில் இருக்கிறது. காலம் காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தைச் சிதைப்பதன் மூலமாக இந்தியாவையே சிதைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது. 2014 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பாரதிய ஜனதாக் கட்சி - தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
* வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் தருவோம்.
* ஆண்டு தோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம்.
* விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு ஆக்குவோம்.
* இந்திய நதிகளை எல்லாம் இணைப்போம்.
* சொந்த வீடு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.
* இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும்
- – இப்படி பூமியையே புனிதமாக்கிவிடுவோம் – -
வானத்தையே வளைத்துவிடுவோம் - – என்றெல்லாம் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றைய குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடி அவர்கள் சொன்னார்கள்.பத்து ஆண்டுகள் ஆகப் போகிறது. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.ஆனால் இந்திய ஒற்றுமையை சிதைக்கப் பார்க்கிறார்கள். எனவே தான் இந்திய நாட்டைச் சேர்ந்த அனைவரும், இந்தியாவைக் காக்க - இந்தியாவுக்காக பேச வேண்டியதாக உள்ளது.அத்தகைய குரலை முன்மொழிந்திருக்கிறார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த உரை வெளியாகி இருக்கிறது. அனைத்து மொழியிலும் மாண்புமிகு முதலமைச்சரின் சிந்தனை பரவத் தொடங்கி இருப்பது தான் பலரை அதிர்ச்சி அடைய வைக்கிறது. 'இந்தி' மொழி பேசுபவர்கள் தான் அதிகம் அறிய வேண்டும். அங்கே தெளிவு பிறக்க வேண்டும். அந்த வகையில் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது குரல் என்பது இந்தியாவுக்கான குரல்.
SPEAKING FOR INDIA - இந்தியாவுக்காகப் பேசுவோம்.
இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்போம்.