முரசொலி தலையங்கம்

நீட் தேர்வு மூலமாக பிழைப்பவர் யார்? பலியாகுபவர்கள் யார்?.. உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!

ஒரு மாணவருக்கு ரூ.1,50,000 வரை கட்டணமாக வசூலித்ததாகச் சொல்லப்பட்டது. தோராயமாக கணக்கிட்டாலே 22 கோடி ரூபாய் ஓராண்டுக்கு ஒரே ஒரு பயிற்சி மையத்துக்கு மட்டும் கிடைத்துள்ளது

நீட் தேர்வு மூலமாக பிழைப்பவர் யார்? பலியாகுபவர்கள் யார்?..  உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (17-08-2023)

பலி வாங்கும் நீட் - 2

பயிற்சி மையங்கள் பிழைக்கவே இந்த நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்பதை ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய சேலம் மாணவியின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமியே விளக்கிவிட்டார். “நான் சேலம் இரும்பாலையில் பணியாற்றுகிறேன். என்னுடைய மகள் மாநில அளவில் நீட் தேர்வில் 878-வது இடத்தில் உள்ளார். முதல்முறை தேர்வெழுதி 623 மதிப்பெண் பெற்றுள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் எனது மகள் நேற்று சேர்க்கைப் பெற்றுள்ளார்.

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக, தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்று கூறி வருகிறோம். ஆனால், அந்த தேர்வை எப்படி அணுகுவது என்று தெரியாமல்தான், தமிழக மாணவர்கள் திணறிக் கொண்டிருந்தனர். இன்றைக்கும் பள்ளிக்கூடங்களில் சொல்லித் தரப்படும் பாடங்களின் அடிப்படையில், நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சிப் பெறவே இல்லை. அதன் பின்னணியில் ஒரு சதி இருக்கிறது.

நீட் தேர்வுக்குப் பின்னால், ஒவ்வொரு பள்ளியும், தனியார் நிறுவனங்களுடன் இணைந்துதான், நீட் தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்து வருகின்றனர். இப்படி நடப்பதால், மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். காரணம், இந்தத் தேர்வில் எந்தப் பாடத்தில் இருந்து என்ன கேள்வி கேட்கப்படும் என்பது தெரியாமல், குழந்தைகள் சிரமத்தை சந்திக்கின்றனர். நீட் தேர்வால், தமிழகத்தில் இதுவரை 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் என்று பார்த்தால், 720 மதிப்பெண் தமிழக மாணவர் பிரபஞ்சன்தான் பெற்றுள்ளார். 715 மதிப்பெண் எனது மகள் படித்த பள்ளியைச் சேர்ந்த மாணவி பெற்றுள்ளார். எனது மகள் சைதன்யா பள்ளியில்தான் படித்தார். அந்தப் பள்ளியில் இருந்து 35 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். பள்ளியில் நிறைய உதவிகள் செய்தனர். ஆனால், இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

நீட் தேர்வு மூலமாக பிழைப்பவர் யார்? பலியாகுபவர்கள் யார்?..  உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு மாணவர் தான் நீட் தேர்வுக்காக 15 மணி நேரமாக படித்ததாகக் கூறினார். 12–-ம் வகுப்பு படித்தாலும் அவன் குழந்தைதான். 15 மணி நேரம் படித்துத்தான் இந்த நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டுமா? கடந்த 1965–-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, அத்தனை உள்கட்டமைப்பு வசதிகள் அங்கு உள்ளது. இன்று அந்தக் கல்லூரி தரமாக பராமரிக்கப்படுகிறது. இந்திய அளவில் முதல் 5 இடங்களில் இருக்கிறது. இதையெல்லாம் உருவாக்கியவர்கள், அவர்களுக்கு கற்றுத் தந்தவர்கள் எல்லாம் எந்த நீட் தேர்வை படித்தனர்.

என் மகள் ஜெயித்துவிட்டார். அதேபோல் ஜெயித்த நூறு பேரை அழைத்து இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வோர் பெற்றோரிடமும் எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று கேளுங்கள். அந்தச் செலவு யாருக்கு செய்யப்பட்டது என்று கேளுங்கள். அரசுப் பள்ளி மாணவர்கள் 652 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டதாக ஆளுநர் கூறுகிறார். அவர்கள் எப்படி சேர்க்கைப் பெற்றனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டால்தான் சேர்ந்தார்களே தவிர நீட் தேர்வால் சேர்க்கை பெறவில்லை” என்று அவர் கூறினார். இந்த ஒவ்வொரு சொல்லும் 100 விழுக்காடு உண்மையானது ஆகும். இதனைப் புரிந்துகொள்ள முடியாமல், ‘நான் கையெழுத்துப் போட மாட்டேன்’ என்று சிலுப்புவது என்ன நியாயம்?

ஓராண்டு படிக்க 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்.

இரண்டு ஆண்டுகள் படிக்க மூன்று லட்சம் ரூபாய்.

மூன்று ஆண்டுகள் படிக்க 4 லட்சம் ரூபாய் -– என்று இந்த பயிற்சி மையங்கள் வசூல் செய்கின்றன. இதில் படிக்கிறவர்களுக்கே பெரும்பாலும் இடம் கிடைக்கிறது.

முதல் முறை தேர்வு எழுதியவர்களுக்கு இடம் கிடைப்பது இல்லை. தொடர்ச்சியாக தேர்வு எழுதுபவர்களுக்கே கிடைக்கிறது. மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக தகுதி பெற்றுள்ள 28,849 பேரில் வெறும் 31 விழுக்காட்டினர், அதாவது 9,056 பேர் மட்டும்தான் முதல் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் ஆவர். மீதமுள்ள 19,793 (69%) இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் – என்கிறது புள்ளிவிபரம். இங்கேதான் பயிற்சி மையங்களின் வருமானம் இருக்கிறது.

2019 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி தமிழ்நாட்டில் நீட் கோச்சிங் சென்டர்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதை ஆளுநருக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக் கிறோம். நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு கல்விக் குழுமத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இந்த ரெய்டு நடந்தது. இந்தப் பள்ளியில் இயக்குநர்கள், பணியாளர்களிடம் விசாரணை நடத்தியும், பள்ளியின் வங்கிக் கணக்குகள் உள்ள வங்கிகளுக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்தினார்கள்.

நீட் தேர்வு மூலமாக பிழைப்பவர் யார்? பலியாகுபவர்கள் யார்?..  உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!

இந்தத் தனியார் பள்ளியில், ஆசிரியர்களை வெளியே விடாமல், இரண்டு நாள்களாகத் தீவிர விசாரணை நடத்தினார்கள். பள்ளி மாணவர்கள் வெளியே வந்து சொன்ன பிறகுதான் ரெய்டு விஷயமே வெளியே தெரிய வந்தது. நீட் பயிற்சிக்காக எத்தனை மாணவர்கள் சேர்ந்தனர்? எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது? அதற்கான கணக்குகள் எனப் பலவற்றையும் வருமான வரித்துறையினர் அலசினார்கள். இந்த கோச்சிங் சென்டரின் சென்னை, நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய கிளைகளில் ஒவ்வொரு வருடமும் சுமார் 1500 மாணவர்கள் நீட் பயிற்சி பெற்றிருக்கின்றனர். ஒரு மாணவருக்கு ரூ.1,50,000 வரை கட்டணமாக வசூலித்ததாகச் சொல்லப்பட்டது.

தோராயமாக கணக்கிட்டாலே 22 கோடி ரூபாய் ஓராண்டுக்கு ஒரே ஒரு பயிற்சி மையத்துக்கு மட்டும் கிடைத்துள்ளது. மற்ற மையங்கள் எவ்வளவு திரட்டி இருக்கும்? இப்படி தமிழ்நாடு முழுவதும் திரட்டப்பட்டது எவ்வளவு? இந்தியா முழுவதும் திரட்டப்பட்டது எவ்வளவு? என்பதை கணக்கிட்டால்தான் இதற்குள் விளையாடும் பணத்தின் மதிப்பு தெரியும்.

நீட் தேர்வு மூலமாக பிழைப்பவர் யார்? அதற்காக பலியாகுபவர்கள் யார் என்பதை இதன் மூலமாக அறியலாம்.

banner

Related Stories

Related Stories