முரசொலி தலையங்கம்

”பா.ஜ.க.வின் பாதம் தாங்கி பழனிசாமி”.. அ.தி.மு.க துரோகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!

“அண்ணாமலையைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்” என்று நிருபர்களிடம் சீறிய பழனிசாமி, டெல்லியில் பம்மிக் கிடப்பது ஏன்?

”பா.ஜ.க.வின் பாதம் தாங்கி பழனிசாமி”.. அ.தி.மு.க துரோகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (11-08-2023)

பா.ஜ.க.வின் பாதம் தாங்கி

“பா.ஜ.க.வின் பாதம் தாங்கி பழனிசாமி” – என்று சொன்னால் பழனிசாமிக்கு கோபம் வருகிறது. ஆனால் அவர் பார்த்து வரும் ஒரே வேலை அதுதானே!

டெல்லி மாநிலத்தின் அதிகாரத்தையே பறித்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு. பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் பழனிசாமிக்கு பதற்றம் வரவேண்டாமா? நேற்று காஷ்மீருக்கு நடந்தது. இன்று டெல்லிக்கு நடக்கிறது. நாளை எந்த மாநிலத்துக்கும் நடக்கலாம். ஆனால் பழனிசாமிக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.

பா.ஜ.க. சொன்னதும், டெல்லிக்கு தன்னுடைய எம்.பி. தம்பிதுரையை அனுப்பினார். தம்பித்துரை, பா.ஜ.க.வின் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டார். இந்த மசோதாவை ஆதரித்துப் பேசிய தம்பித்துரை, ‘அமித்ஷாவுக்காகத்தான் நாங்கள் ஆதரித்து வாக்களித்தோம்’ என்று பேசி இருக்கிறார். இது பாதம் தாங்கி பழனிசாமிக்குத் தெரியுமா?

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. ‘நான் யாருக்கும் அடிமை இல்லை’ என்ற படியே பா.ஜ.க.வின் பாதம் தாங்கி கொத்தடிமையாக தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதில் என்ன தவறு இருக்க முடியும்? இதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு இருக்கும் பழனிசாமியால், டெல்லி அரசுக்கு எதிரான மசோதாவை நியாயப்படுத்த முடிந்ததா?

”பா.ஜ.க.வின் பாதம் தாங்கி பழனிசாமி”.. அ.தி.மு.க துரோகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!

டெல்லி மாநிலத்தையே சிதைக்கும் சட்டத்தை பா.ஜ.க. அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதன் மூலம் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் ஆகியவற்றை அந்த மாநில அரசு செய்ய முடியாது. ‘தேசிய சிவில் சேவை ஆணையம்’ என்ற அமைப்பு தான் செய்ய முடியும். இந்தக் குழுவில் மாநில அரசுடன் இணைந்து ஒன்றிய அரசு அதிகாரிகளும் இருப்பார்கள். இவர்கள் முடிவெடுத்து துணை நிலை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். இதனை ஏற்பதும் மறுப்பதும் ஆளுநரின் விருப்பம் ஆகும்.

தனது சொந்த விருப்பத்தின் பேரில் டெல்லி சட்டசபையை ஆளுநர் கூட்டலாம். பேரவை நடக்கும் நாட்களை கூட்டலாம். குறைக்கலாம்.

அரசின் நிர்வாகத்தில் குறைபாடு இருந்தால் அதனை அமைச்சருக்குச் சொல்லாமல், நேரடியாக ஆளுநருக்கு அதிகாரிகள் கொண்டு போகலாம்.

அதிகாரிகள், வாரியங்கள், ஆணையங்கள், சட்டபூர்வ அமைப்புகள் அமைக்கும் அனைத்து அதிகாரமும் ஆளுநருக்கே உண்டு.

--– இதுதான் அந்தச் சட்டம். மொத்தமாகச் சொன்னால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ, அமைச்சரவைக்கோ எந்த அதிகாரமும் இல்லை. டம்மியாக உட்கார்ந்து இருப்பார்கள்.

ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கிறது, அரவிந்த் கெஜ்ரிவால் அசைக்க முடியாதவராக இருக்கிறார், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்து அந்தக் கூட்டணியை பலப்படுத்தி வருகிறார் என்பதற்காகவே டெல்லி மாநில அரசை டம்மி ஆக்கி இருக்கிறார்கள். இதனை விட டெல்லி மாநிலத்துக்கு துரோகம் செய்ய முடியுமா? மாநிலங்களுக்கு துரோகம் செய்ய முடியுமா? இந்திய அரசியலமைப்புக்கு துரோகம் இழைக்க முடியுமா? இந்த துரோகத்துக்கு துணை போகும் காரியத்தைத் தான் பழனிசாமி செய்து கொண்டு இருக்கிறார். இது அவருக்கு ஒன்றும் புதிதல்ல. பதவி கொடுத்த சசிகலா, காலையே வாரியவர் அல்லவா அவர்!

”பா.ஜ.க.வின் பாதம் தாங்கி பழனிசாமி”.. அ.தி.மு.க துரோகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!

குடியுரிமைச் சட்டத்தை மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்து இருந்தால் அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. பா.ம.க. உறுப்பினர் அன்புமணி மற்றும் 10 அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஓட்டுதான் குடியுரிமைச் சட்டம் நிறைவேறக் காரணம். இப்போதும் பா.ஜ.க. கொண்டு வந்த டெல்லி மாநிலத்தைச் சிதைக்கும் சட்டத்தை அ.தி.மு.க.வும் ஆதரித்துள்ளது. பா.ம.க.வும் ஆதரித்து வாக்களித்துள்ளது.

மக்களுக்கும், மக்களாட்சிக்கும் துரோகம் இழைப்பதை வழக்கமாக வைத்திருப்பவர்தான் பழனிசாமி.

* ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவு

* ‘உதய்’ மின் திட்டத்துக்கு ஆதரவு

* ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்துக்கு ஆதரவு

* பல்கலைக் கழக வேந்தர்களை ஆளுநராக நியமிப்பதற்கு ஆதரவு

* குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு

* மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு -– இப்படி பா.ஜ.க. பாதையில்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. அந்தக் கட்சி நடத்திய கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடிக்குப் பக்கத்தில் நிற்க வைக்கப்பட்டாரே பழனிசாமி. ஆனால் அவருக்கு ஏதோ – - பா.ஜ.க.வுடன் இருக்கிறோம் –- என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கமாக இருக்கிறது போலும்!

‘நானும் ஒரு விவசாயி’ என்று சொல்லிக் கொண்டே மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தாரே பழனிசாமி. அது கொத்தடிமைத் தனத்தின் வெளிப்பாடு அல்லவா? ‘அது மிக நல்ல சட்டம், அது பற்றி நான் விவாதிக்கத் தயார், என்னிடம் விவாதிக்க வாருங்கள்’ என்று நிருபர்களையே சவாலுக்கு அழைத்தாரே பழனிசாமி. அது கொத்தடிமைத் தனத்தின் உச்சம் அல்லவா?

“அண்ணாமலையைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்” என்று நிருபர்களிடம் சீறிய பழனிசாமி, டெல்லியில் பம்மிக் கிடப்பது ஏன்?

banner

Related Stories

Related Stories