முரசொலி தலையங்கம் (21-07-2023)
ED உருவாக்கிய NDA
பிரதமர் நரேந்திர மோடியுடன் கைகோர்த்து நிற்பவர்கள் யார்? யார்? அவர்களது முகம் என்ன என்று பார்ப்போமா? 38 கட்சிகளின் கூட்டணியாம் அது. அந்த 38 கட்சிகளுக்கும் என்ன பலம் என்பதை தேடிப் பாருங்கள்.
* 24 கட்சிகளுக்கு நாடாளுமன்ற மக்களவையில் ஒரு இடம்கூட இல்லை. அதாவது லோக்சபாவில் ஒரு எம்.பி.கூட இல்லாத கட்சிகள் அவை.
* 27 கட்சிகளுக்கு மாநிலங்களவையில் ஒரு இடம்கூட இல்லை. அதாவது ராஜ்யசபாவில் ஒரு எம்.பி.கூட இல்லாத கட்சிகள் இவை.
* 9 கட்சிகளுக்குத்தான் மக்களவையில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
* ஒரே ஒரு எம்.பி.யைக் கொண்ட கட்சிகள் - – 9
* இரண்டு எம்.பி.களைக் கொண்ட கட்சிகள் -– 3
* 7 கட்சிகளுக்கு எந்த மாநிலத்திலும் ஒரே ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லை.
– இதுதான் பா.ஜ.க. கூட்டி இருக்கும் கட்சிகளின் இலட்சணம் ஆகும்.
இந்தக் கூட்டத்துக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே வந்திருந்தார். இவர், சிவசேனாவை உடைத்துவிட்டு தனியாக தனக்கென சிவசேனா கட்சியை ஆரம்பித்துக் கொண்டவர். பி.ஜே.பி. தயவில் மகாராஷ்டிரா முதலமைச்சராக இருக்கிறார்.
இந்தக் கூட்டத்துக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த அஜித் பவார் வந்திருந்தார். இவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துவிட்டு தனியாக ஒரு கோஷ்டி சேர்த்து உள்ளவர். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டு துணை முதலமைச்சர்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பீகாரைச் சேர்ந்த ஜித்தன்ராம் மாஞ்சி வந்திருந்தார். இவர் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து சென்றவர். தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
‘லோக் ஜனசக்தி’ என்ற கட்சி இரண்டாக உடைந்தது. இப்போது இரண்டு பிரிவும் பா.ஜ.க.வை ஆதரிக்கிறது. இத்தகைய கலவைதான் பா.ஜ.க. கூட்டணி ஆகும். ஒரு எம்.பி., ஒரு எம்.எல்.ஏ. இல்லாத கட்சிகளை விட்டுவிடுவோம். விரல் விட்டு எண்ணக் கூடிய சில கட்சிகள் பா.ஜ.க.வில் மிரட்டல் அரசியலுக்கு பணிந்தவைதான்.
'அண்ணாமலையைப் பற்றி என்னிடம் கேட்காதே' என்று சில நாட்களுக்கு முன்னால் சீறிய பழனிசாமி இப்போது பெட்டிப்பாம்பாக அடங்கி, பா.ஜ.க.விடம் பதுங்கத் தொடங்கி இருக்கிறார். 'நிலக்கரி'யை வைத்து கரி பூசிவிடுவார்கள் என்று பயந்தா?
ஓ.பன்னீர்செல்வத்தை முதலில் மிரட்டியது பா.ஜ.க. பின்னர் பழனிசாமியை மிரட்டியது. இருவரையும் பிரித்தது. பின்னர் சேர்த்தது. இதற்காகவே அப்போது மும்பையில் இருந்து பசை கொண்டு வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
சசிகலா சொத்துகளை முடக்கினார்கள். டி.டி.வி. தினகரன் மீது வழக்குப் போட்டு முடக்கினார்கள். அன்றைய அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். பணியாவிட்டால் பன்னீர் அணியை ஆதரித்துவிடுவோம் என்று சொல்லி பழனிசாமியை பணிய வைத்தார்கள். பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க சி.பி.ஐ.க்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதும் டெல்லியில் சரணடைந்தார் பழனிசாமி.
சும்மா முறுக்கிக் கொள்வது போல பழனிசாமி காட்டிக் கொள்கிறார். ஆனாலும் பழைய வழக்குகளைக் காட்டி அடக்கி வைத்திருந்தது பா.ஜ.க. 'இதோ அங்கீகாரம் தருகிறோம்' என்று சொல்லி தேர்தல் ஆணைய கடிதத்தைக் காட்டி மிரட்டி, டெல்லிக்கு பழனிசாமியை வரவைத்து விட்டது பா.ஜ.க.
வருமான வரி – அமலாக்கம் - சி.பி.ஐ –தேர்தல் ஆணையம் ஆகியவை சேர்ந்துதான் அ.தி.மு.க.வை இந்தக் கூட்டணிக்குள் கொண்டு வந்தது.
ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்கியது யார்? பா.ஜ.க.தான். சிவசேனாவுக்குள் இருந்த அவரைப் பிரித்தது பா.ஜ.க. சிவசேவா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை 2022 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றது பா.ஜ.க.வைச் சேர்ந்த தொழிலதிபர் மோஹித் கம்போஜ் என்பது அப்போதே வெளியானது. பா.ஜ.க.வின் இளைஞரணித் தலைவர் சஞ்சய் குட்டே, ஷிண்டே கூட்டத்தை குஜராத்துக்கு அழைத்துச் சென்றவர்களில் முக்கியமானவர். எனவே, ஆபரேஷன் தாமரையின் அங்கம் தான் ஷிண்டே கட்சி உருவாக்கமும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
கடந்த 2021, அக்டோபர் 7ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அவரது மூன்று சகோதரிகளின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மும்பை, புனே, கோவா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அஜித் பவாருக்குச் சொந்தமான, நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில், 180 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரிக்கணக்கில் காட்டப்படாத கருப்புப்பணம் கண்டறியப்பட்டதாகவும், 2.13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், 4.32 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும், அஜித் பவாருக்கு, அவர் பெயரிலும் அவரது பினாமிகள் பெயரிலுமாக மொத்தம் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து மதிப்பு உள்ளதாக வருமான வரித்துறை செய்தியை கசியவிட்டது. பயந்துவிட்டார் அஜித்பவார். அவர் மீது ரெய்டு நடத்திய பா.ஜ.க. கட்சி, அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்கி மகிழ்ந்துள்ளது.
அஜித் பவாருக்குச் சொந்தமான 65 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை. இப்போது அவர் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் துணை முதலமைச்சராக இருக்கிறார். அதனால்தான் இது அமலாக்கத்துறையால் உருவாக்கப்பட்ட அணி எனப்படுகிறது.
'டெக்கான் க்ரானிக்கல்' நாளேடு எழுதிய தலையங்கத்தில், ''எதிர்க்கட்சிகள் கூட்டம் பாட்னாவில் நடக்கும் போது அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். பெங்களூரில் கூடிய போது அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியை இப்படித்தான் வழிக்குக் கொண்டு வந்தார்கள்" என்று எழுதி உள்ளது. அதாவது பா.ஜ.க.வின் பாணியை அம்பலப்படுத்தியது அந்த நாளிதழ்.
''இவ்வளவு உதவி செய்திருந்தும் பா.ஜ.க.வின் டெல்லி கூட்டத்தில் அமலாக்கத்துறையை அழைக்கவில்லை, நன்றி கெட்டவர்கள்" என்று கிண்டலடித்திருந்தார் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. இது கிண்டல் அல்ல, உண்மை !