முரசொலி தலையங்கம்

"இந்த காலத்தில் நூலகம் எதற்கு?" மூளையே தேவையில்லை என கருதும் கூட்டத்தின் கருத்து அது -முரசொலி விமர்சனம் !

"இந்த காலத்தில் நூலகம் எதற்கு?" மூளையே தேவையில்லை என கருதும் கூட்டத்தின் கருத்து அது -முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கலைஞர் அறிவாலயம்! ...................................

முரசொலி தலையங்கம் (18.7.2023)

ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வந்தால் மண்சோறு சாப்பிடும் கூட்டம், இப்போது எடப்பாடி பிறந்தநாளுக்கும் மண் சோறு சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறது. இந்தக் கும்பல், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு என்ன செய்தது? கடற்கரை மணலுக்கு எதிரே, அவர் பெயரால் ஒரு வளைவு திறந்தது! குனிந்தும் – ஊர்ந்தும் பிழைப்பவர்களுக்கு 'வளைவுகள்'தானே பிடிக்கும்? அதைத் தாண்டி மூளை வளராது என்பதை தமிழ்நாடு அறியும். அத்தகைய தற்குறிக் கூட்டத்தின் தலைமைக் கழகப் பிரதிநிதிகளில் ஒருவர், 'மதுரை நூலகத்துக்கு திருவள்ளுவர் பெயர் வைத்திருக்க வேண்டும்' என்கிறார். ஐம்பது ஆண்டுகளாக அவரது மூளை கோமாவில் கிடக்கிறதா என்று தெரியவில்லை.

1975 ஆம் ஆண்டே தமிழ்நாட்டின் தலைநகரில் வள்ளுவர் கோட்டம் அமைத்தவர் தமிழினத் தலைவர் கலைஞர். 2000 ஆம் ஆண்டிலேயே கடல் நகராம் கன்னியாகுமரியில் 133 அடியில் வான்புகழ் வள்ளுவருக்கு சிலை அமைத்தவர் கலைஞர். ஓடும் பேருந்துகள் அனைத்திலும் வள்ளுவர் படமும், திருக்குறளும் எழுதி வைத்த ஆட்சி தி.மு.க. ஆட்சி. குறளோவியம் தீட்டியவர் கலைஞர். திருக்குறள் உரை தீட்டியவர் கலைஞர். தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டதே அவரது தூண்டுதலால் தான். எனவே, குறளுக்கும் குறளாசானுக்கும் பெருமை சேர்க்க தி.மு.க.வுக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. இந்த தற்குறிகளின் ஆட்சியில் திருவள்ளுவருக்கு என்ன செய்யப்பட்டது என்றால் ஏதுமில்லை என்பதே பதில்.

இன்னொரு கும்பல் எழுதுகிறது... 'இந்தக் காலத்தில் நூலகம் எதற்காக?" என்பது சனாதனக் கும்பலின் கருத்தாக இருக்கிறது. மூளையே தேவையில்லை என்று நினைக்கும் கூட்டம் அது. நூலகம் எதற்காக என்றால், அது மூளை உள்ளவர்கள் தேடும் இடமே தவிர, அந்தக் கும்பல் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்கு இது அவசியமும் அல்ல.

"இந்த காலத்தில் நூலகம் எதற்கு?" மூளையே தேவையில்லை என கருதும் கூட்டத்தின் கருத்து அது -முரசொலி விமர்சனம் !

மதுரை -–- புது நத்தம் சாலையில் அமைந்துள்ள இந்த நூலகமானது 120.75 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. 3.50 லட்சம் புத்தகங்கள் அதில் வைக்கப்பட்டுள்ளன.

முதல் தளத்தில் –- கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகம், சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு -–2, அறிவியல் உபகரணங்கள் பிரிவு அமைக்கிறது.

2-–ஆம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு (குறிப்பு உதவி நூல்கள் பிரிவு) மற்றும் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப்படத் துறை தொடர்பான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவுகளும் இடம் பெறுகின்றன.

3-–வது தளத்தில் ஆங்கில நூல்கள் , ஆராய்ச்சி இதழ்கள், தமிழ் நூல்கள் அடங்கிய பிரிவுகள் அமைகின்றன.

4-–வது தளத்தில் போட்டித் தேர்வர்களுக்கான பல்வேறு துறை சார்ந்த நூல்கள் பிரிவு அமைகிறது.

5-–ஆம் தளத்தில் அரிய நூல்கள், மின் நூலகம், பல்லூடகம், நூல்கள் பாதுகாத்தல், ஒளி, ஒலி தொகுப்புகள், காட்சியகம், மின்னுருவாக்கம், பார்வையற்றோருக்கான மின் நூல், ஒலி நூல் ஸ்டுடியோ, நுண்பட அட்டை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

6–-வது தளத்தில் ஆங்கில நூல்கள் (நூல் இரவல் பிரிவு), நூல் பகுப்பாய்வு , நூல் பட்டியல் தயாரித்தல், நூலக நிர்வாகம், நூல்கள் கொள்முதல், பணியாளர்கள் உணவருந்தும் பிரிவுகளும் அமைகின்றன.

கலைக்கூடம், மாற்றுத்திறனாளி பிரிவு, மாநாட்டுக்கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கைப் பிரிவு, மின் கட்டுப்பாட்டு அறை, நகரும் படிக்கட்டுகள், அஞ்சல் பிரிவு என அனைத்து வசதிகளோடும் அமைக்கப்பட்டுள்ளது.

"இந்த காலத்தில் நூலகம் எதற்கு?" மூளையே தேவையில்லை என கருதும் கூட்டத்தின் கருத்து அது -முரசொலி விமர்சனம் !

இதில் மிக முக்கியமானது நான்காவது தளத்தில் அமைந்துள்ள போட்டித் தேர்வு பிரிவு ஆகும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தொடங்கி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வாரியத்தாலும் மற்ற அமைப்புகளாலும் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் எழுதுவதற்கான நூல்கள் இதில் இருக்கின்றன. 30 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. அரசு மற்றும் உயர் பொறுப்புகளை அடைய தென் மாவட்ட இளைஞர்களுக்கு அறிவுச் சுரங்கமாக இந்தப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்தக் கும்பலுக்கு கடுப்பாக இருக்கிறது.

படிக்கக் கூடாது -– பள்ளிகளுக்குள் நுழையக் கூடாது – - கல்லூரிகளின் படியை மிதிக்கக் கூடாது என்று காலம் காலமாகச் சொல்லி வந்த கும்பல் தான், 'நூலகங்களால் என்ன பயன்?' என்று இப்போது கேட்கிறது. யாரையும் படிக்க விடாத காலத்தில், 'படிப்புதான் முக்கியம்' என்றார்கள். எல்லோரும் படிக்கத் தொடங்கியதும், 'படிப்பால் என்ன பயன்?' என்கிறார்கள். 'பேச நா இரண்டுடையாய் போற்றி போற்றி' என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா.

'படித்துவிடு, எங்காவது போய் முன்னேறி விடு' என்றார் தந்தை பெரியார். குலக்கல்வி கொண்டு வந்து தமிழர் வீட்டுப் பிள்ளைகளைப் படிக்க விடாமல் சதி செய்த இராஜாஜியின் காலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து -– பெருந்தலைவர் காமராசர் காலத்துக்கு தொடக்கப்புள்ளி வைத்தார் தந்தை பெரியார். குலக்கல்வியை ஒழித்த காமராசர், மூடிய பள்ளிகளையும் திறந்தார். புதிய பள்ளிகளையும் திறந்தார். அந்தப் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து, கல்லூரிகளை அதிகமாகத் திறந்தார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைய திராவிட மாடல் ஆட்சியானது பள்ளி -– கல்லூரி படிக்கும் அனைவரையும் அனைத்துத் துறையிலும் தகுதி உள்ளவர் ஆக்கும் 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கி இருக்கிறது. இளைய சக்தி அனைத்தையும் தகுதியுடைய அறிவு சக்தியாக மாற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

"இந்த காலத்தில் நூலகம் எதற்கு?" மூளையே தேவையில்லை என கருதும் கூட்டத்தின் கருத்து அது -முரசொலி விமர்சனம் !

பட்டம் வாங்கினால் போதாது. அதிக மதிப்பெண் வாங்கினால் மட்டும் போதாது. அனைவரும் அனைத்துத் திறமைகளும் பெற்றாக வேண்டும் என்று நினைக்கிறார் முதலமைச்சர் அவர்கள். அதற்கு தென் மாவட்டத்து மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறிவாலயமாக அமைக்கப்பட்டுள்ளது தான் 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்' ஆகும். சென்னையில் பேரறிஞர் அண்ணா பெயரால் நூலகம் அமைத்தார் கலைஞர் அவர்கள். கலைஞர் பெயரால் நூலகம் அமைத்துள்ளார் இன்றைய முதலமைச்சர் அவர்கள்.

இவை தமிழ் அறிவின் தொடர்ச்சியாகும். தமிழ்நாட்டு மக்கள் மீதான அக்கறையின் வெளிப்பாடு ஆகும். இதனை தற்குறிக் கூட்டமோ, சனாதனக் கூட்டமோ புரிந்து கொள்ள முடியாது. இவர்கள் குறை சொல்கிறார்கள், கோபம் கொள்கிறார்கள், வயிற்றெரிச்சலை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அரசு சரியான திசையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்று பொருள்.

banner

Related Stories

Related Stories