பாட்னாவும் வாசிங்டனும் - 2
குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வரத் துடித்து - பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வரத் துடிக்கும் பிரதமர் மோடிதான் இந்தியாவில் மதப்பாகுபாடு இல்லை என்று சொல்கிறார். மணிப்பூரில் இன்று மோதிக்கொள்ளும் இரண்டு இனக்குழுக்களும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். இந்த மதப் பாகுபாட்டை யார் தூண்டி இருப்பார்கள் எனச் சொல்லத் தேவையில்லை!
“நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே பலிபீடத்தில் வைக்கப்பட்டுள்ளது போல் உள்ளது. அதிகரித்து வரும் வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்” என்று பிரதமர் மோடி அவர்களுக்கு 108 பேர் கையெழுத்திட்டு அனுப்பி இருந்தார்கள். முன்னாள் நீதியரசர்கள், முன்னாள் துணை நிலை ஆளுநர்கள், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், முன்னாள் வெளியுறவுச் செயலாளர்கள் - இக்கடிதத்தில் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். “இங்கு பலிபீடத்தில் இருப்பது சிறுபான்மையினர் மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டமும்தான்” என்று அவர்கள் சொல்லி இருந்தார்கள்.
வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கையை கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் விடுத்திருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த 50 பொதுக்கூட்டங்களில் வெறுப்புப் பேச்சு பேசப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி, உ.பி., உத்தரகாண்ட் மாநிலங்களில் வெறுப்புப் பேச்சு குறித்தும் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
''வெறுப்புப் பேச்சுகள் பேசாமல் ஒவ்வொருவரும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் அரசியலை மதத்துடன் கலக்கும் போது பெரிய பிரச்சினை எழுகிறது. அரசியலையும் மதத்தையும் பிரிக்கும் தருணத்தில் இது முடிவுக்கு வரும். அரசியல்வாதிகள் மதத்தை பயன்படுத்துவதை நிறுத்தினால் இதெல்லாம் நின்றுவிடும். மதத்துடன் அரசியலை கலப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று சமீபத்தில் தீர்ப்பில் கூறியுள்ளோம். டி.வி. மற்றும் பொது இடங்களில் கூட வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்துவிட்டன. நாம் எங்கு செல்கிறோம் என்று பார்க்க வேண்டும்? பேச்சுக்களில் கொஞ்சம் கட்டுப்பாடு இருக்க வேண்டாமா? இல்லையெனில் நாம் விரும்பும் இந்தியாவாக உருவாக்க முடியாது. இந்தப் பேச்சுகளால் நாம் என்ன வகையான இன்பங்களை பெறுகிறோம்" என்று நீதிபதிகள் கேட்டார்கள்.
''தொடர்ந்து மற்றவர்களை இழிவுபடுத்தும் வகையில் 'பாகிஸ்தானுக்கு போ' என்று பேசி வருகின்றனர். ஆனால் பிற சமூகத்தினரும் இந்த நாட்டைத் தேர்வு செய்துள்ளனர். அவர்களும் உங்கள் சகோதர – சகோதரிகள் போன்றவர்கள். அவர்களை அவமதித்து நாட்டின் சட்டத்தை மீற உங்களுக்கு உரிமை இருக்கிறதா? நாட்டின் சட்டத்தை மீறினால், அது செங்கற்கள் போல உங்கள் தலையில் விழும். உண்மையான வளர்ச்சி என்பது நமது நாட்டை வல்லரசாக மாற்ற வேண்டும். அதற்கு நாம் சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டை சிறந்த வாழும் இடமாக மாற்ற முடியும்" என்றும் நீதிபதிகள் அப்போது சொன்னார்கள். இதுதான் வாசிங்டனில் பிரதமர் மோடி மீதான கேள்வியாக எழுந்தது. அவரால் எந்தப் பதிலையும் சொல்ல முடியவில்லை.
மாறுபட்ட இந்தியாவை வாசிங்டனில் காட்ட முயற்சித்தார் இந்தியப் பிரதமர் மோடி. உண்மையான இந்தியா எது என்பதை பாட்னா காட்டி இருக்கிறது.
* நிதிஷ்குமார்: பா.ஜ.க. தேச நலனுக்கு எதிராகச் செயல்படுகிறது.வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறது.
* மம்தா: வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறது பா.ஜ.க. நாங்கள் வரலாறு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வோம். மீண்டும் இந்த சர்வாதிகார அரசு வந்தால் எதிர்காலத்தில் தேர்தல்களே நடக்காது.
* டி.ராஜா: பா.ஜ.க.வின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியானது சட்டத்துக்கு தீங்கானதாக அமைந்துவிட்டது.
* மெகபூபா முக்தி: காந்தியின் இந்தியா, கோட்சேவின் இந்தியாவாக ஆக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
- என்று இந்த தலைவர்கள் சொல்லி இருப்பதுதான் பா.ஜ.க.வின் இன்றைய இந்தியா ஆகும். இதனை மாற்றி அமைப்பதற்கான பாதையை பாட்னா வகுத்துவிட்டது.
இவர்கள் எப்படியாவது பிரிந்துவிட மாட்டார்களா என நப்பாசையில் பலரும் இருக்கிறார்கள். இந்தத் தலைவர்கள் வேறுபாடுகளை உணர்ந்து, அதனைக் களையும் எண்ணத்தோடே ஒன்று சேர்ந்துள்ளார்கள். ''எங்களிடையே சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் விட்டுக் கொடுத்து செயல்பட முடிவெடுத்துள்ளோம்" என்பதை ராகுல் காந்தி வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். ''ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி திட்டம் வகுக்கப்படும். அதேநேரத்தில் ஒன்றிய ஆட்சியில் பா.ஜ.க.வை தூக்கி எறிய இணைந்து செயல்படுவோம்" என்கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே. ''நாட்டைக் காக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் இந்தக் கூட்டம் விடுக்கும் செய்தி" என்கிறார் அகிலேஷ்.
* எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.
* கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால் தொகுதிப் பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம்.
* அதுவும் முடியவில்லை என்றால் பொதுவேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம். - என்று படம் போட்டு பா.ஜ.க.வை வீழ்த்த பாட்னாவில் பாதை அமைத்துக் கொடுத்துவிட்டுத் திரும்பி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அனைத்துக்கும் முன் மாதிரியாய் இருக்கிறது தமிழ்நாடு.
பாட்னா பாதை வெல்லும் என்பதை இந்தியா சொல்லும்!