மூன்றுமே தவறான தகவல்கள்- 2
இரண்டாவதாக பழனிசாமி சொல்வது, பொள்ளாச்சி வழக்கில் முறையாக நடவடிக்கை எடுத்தேன் என்பதாகும். தி.மு.க. மகளிரணி சார்பில் பொள்ளாச்சியில் போராட்டம் நடத்திய பிறகுதான் சிலரைக் கைது செய்தது பழனிசாமி ஆட்சி. இந்த விவகாரம் குறித்து அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசிய பிறகுதான், குற்றவாளிகளைக் காப்பாற்றிய போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, பழனிசாமி தானாகச் செய்யவில்லை. தி.மு.க. வலியுறுத்தியதால்தான் செய்தார். தி.மு.க. தலைவர் அறிக்கை வெளியிட்ட பிறகுதான் ‘பார்’ நாகராஜ் என்ற அ.தி.மு.க. பிரமுகரை கட்சியை விட்டு நீக்கினார்கள். ஏனென்றால் அவர் போலீஸை மிரட்டிக் கொண்டு இருந்தார். கட்சியை விட்டு அவரை நீக்கினார்களே தவிர கட்சியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு குறையவில்லை. அதனால்தான் மறுநாளே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு போய் நின்று கொண்டு துணிச்சலாகப் பேட்டி கொடுத்தார்.
அதன்பிறகு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார் தி.மு.க. தலைவர். குற்றவாளிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சில காவல் துறை அலுவலர்கள் உதவி செய்ததையும் சுட்டிக் காட்டினார். அதன்பிறகுதான் கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி.யைக் கட்டாயக் காத்திருப்பில் வைத்தார்கள். பொள்ளாச்சி துணை எஸ்.பி. ஜெயராம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடேசன் ஆகியோரை மாற்றினார்கள். தி.மு.க. தலைவரின் அறிக்கை வந்தபிறகுதான் அ.தி.மு.க. ஆட்சியில் போலீஸ் டி.ஜி.பி. அறிக்கையே கேட்டார். இது பற்றி நிருபர்கள், முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டபோது, ‘இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம்?’ என்று திருப்பிக் கேட்டார்.
அ.தி.மு.க. ஆட்சியில் முதன்முதலாக புகார் தரப்பட்ட போது, புகார் பதியப்படவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, பாதிக்கப்பட்ட தரப்பே பிடித்துக் கொண்டு வந்து காவல் துறையில் ஒப்படைத்தபோதும், அந்த குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை, தேடிப்போய் குற்றவாளிகள் தரப்பு தாக்கியதும் அ.தி.மு.க. ஆட்சியில்தான் நடந்தது. இதில் பாலியல் தொல்லை, ஆபாச படம் எடுத்தல், ஆள்கடத்தல், துன்புறுத்தல், கொலை, தற்கொலைக்கு தூண்டுதல் என அனைத்துக் குற்றங்களும் நடந்துள்ளன.
இதைவிட இன்னொரு கொடுமையும் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கும் நிலையில் அந்தப் பெண்ணின் பெயரையும் முகவரியையும் அ.தி.மு.க. அரசு வெளியிட்டது. அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணை மேலும் அவமானப்படுத்துவதும், காட்டிக் கொடுப்பதுமான காரியத்தையும் செய்தார்கள்.
பெண்களை வசியப்படுத்த பெய்டு கேங் என்ற ஒரு கும்பல் செயல்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த விவகாரம் வெளியானதும் நக்கீரன் இதழுக்கு பேட்டி கொடுத்த ஹரீஸ், அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லிதான் ‘நக்கீரன்’ நிருபரை மிரட்டினார். தனக்கு அ.தி.மு.க.வில் அரசியல் செல்வாக்கு இருப்பதாகச் சொன்னார். இந்த சம்பவத்தில் கைதான அருளானந்தம், பாபு, கரோன்பால் ஆகிய மூவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
அதனால்தான் இந்த விவகாரம் வெளியில் வந்ததில் இருந்து அதனை மறைக்க அ.தி.மு.க. அரசு முயற்சித்தது. இந்த விவகாரத்தில் உள்ள தடயங்களை மறைப்பதற்காக, அழிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் என்று சொல்லி அ.தி.மு.க. அரசு சதி வேலையில் இறங்கியது. சாட்சிகளை அழிப்பதாகவும், சாட்சிகளை பயமுறுத்துவதாகவும் அ.தி.மு.க. அரசு செயல்பட்டது. இப்போது வழக்கு சி.பி.ஐ. விசாரித்தாலும் தி.மு.க. அரசு கண்காணித்து வருகிறது. எனவே நான் நடவடிக்கை எடுத்தேன் என்று பழனிசாமி சொல்வதே தவறாகும்.
மூன்றாவதாக -– பழனிசாமி சொல்வது... தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது உண்மையில் நான் தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். அன்றைய தினம் ஏதோ ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளோடு தான் இருந்ததாக பழனிசாமி சொல்கிறார். இது பொய் என்பதை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அவர்களால் அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையே சொல்லிவிட்டது. அறிக்கையின் 2 ஆவது பாகம் -– 219 ஆவது பக்கத்தில் இடம் பெற்றுள்ள 252 ஆவது கருத்து இது:
* The then Chief Minister Tr. Edappadi K. Palaniswami is quoted as having told the reporters of the media that he came to know of the shooting in Thoothukudi only through the media just like anybody else. It may be pointed out that there are materials available before this Commission in the shape of evidence of the then Chief Secretary Tmt. Girija Vaidyanathan., I.A.S. (RW 251), the then DGP Tr. K. Rajendran I.P.S., (RW 253), the then IG Intelligence Tr. K.N. Sathiyamurthy., I.P.S., (RW 249) have been updating the Chief Minister Tr. Edapadi K. Palanisamy with minute to minute development which took place in Thoothukudi and as such to say that the then Chief Minister come to know of the shooting only through the media would be incorrect or inaccurate –- the Commission would opine” என்று தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது.
‘’தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘அந்த சம்பவத்தை மற்றவர்களைப் போல ஊடகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்து கொண்டேன்’ என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஆனால் இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், அப்போதைய உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள்.
எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் அந்த சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும்” என்று ஆணையத்தின் அறிக்கை சொல்கிறது. இதற்கு மேல் அதற்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை!
இந்தப் பச்சைப் பொய்களை இன்னும் எத்தனை காலத்துக்குச் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறாரோ?