யாரால் ஆபத்து?
புல்வாமா தாக்குதல் என்பது, இந்தியாவின், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதல் ஆகும்.
இந்தத் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையின் ராணுவ வீரர்கள் 40 பேர் பலியான சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதைவிடப் பெரிய அதிர்ச்சியை அப்போது ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் கொடுத்திருக்கிறார். ஒன்றிய பா.ஜ.க. அரசின் அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்பதை சத்ய பால் மாலிக் சொல்லி இருப்பதை சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது.
புல்வாமா தாக்குதல் நடந்தபோது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர் அவர். இந்தத் தாக்குதல் நடந்தபிறகு சில மாதங்களில் அவர் அங்கிருந்து மாற்றப்பட்டு மேகாலயாவின் ஆளுநராக ஆக்கப்பட்டார். அவரை எதற்காக அப்போது மாற்றினார்கள் என்ற சந்தேகம் பொதுவெளியில் அதிகம் ஏற்பட்டது. இந்த சந்தேகங்களுக்கான விடையை இப்போது அவரே தெளிவுபடுத்தி விட்டார்.
"புல்வாமா தாக்குதல் நடந்தபோது உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இருந்தார். புல்வாமா தாக்குதலுக்கு உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமும் சி.ஆர்.பி.எஃப் படையின் பொறுப்பற்ற நடவடிக்கையுமே காரணம். நெடுஞ்சாலை வழியே வீரர்கள் வந்தனர். அந்த நெடுஞ்சாலையைத் தொடும் இணைப்பு சாலைகளும் மூடப்படவில்லை. சாலையும் பாதுகாக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க உளவுத் துறையின் தோல்வி.
சுமார் 300 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகளுடன் அந்தக் கார் 10, 12 நாட்களுக்கு முன்பே பாகிஸ்தான் எல்லையிலிருந்து பல சோதனைச் சாவடிகளைக் கடந்து வந்து அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தது. அதை யாருமே கண்டுபிடிக்கவில்லை. சம்பவம் நடந்தபோது பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் இருந்தார்.
அங்கிருந்து வெளியில் வந்ததும் என்னிடம் பேசினார். 'வீரர்களுக்கு விமானங்களை வழங்கியிருந்தால் இது நடந்திருக்காது. நம்முடைய தவறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்தது' என்று பிரதமரிடம் கூறினேன். ஆனால் பிரதமர் மோடி, 'அதுபற்றிப் பேசாமல் அமைதியாக இருக்குமாறு' என்னைக் கேட்டுக்கொண்டார்.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இதையே சொன்னார்" என்று சொல்லி இருக்கிறார் மாலிக். இந்த தேசத்துக்கு யாரால் ஆபத்து என்பது இதன் மூலமாகத் தெரியவில்லையா?
“இத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்தாலும், ஜம்மு காஷ்மீரின் சூழல் குறித்து பிரதமர் மோடி இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. அதன் மாநில அந்தஸ்தைப் பறித்தது தவறு. உடனடியாக மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும்” என்கிற அவர், ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றும் முடிவைக் கடைசி நிமிடம் வரை கவர்னரான தனக்குச் சொல்லாமல் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டுகிறார்.
சத்ய பால் மாலிக் அளித்துள்ள அந்தப் பேட்டி அரசியல் ரீதியான அதிகாரப் போட்டியால் விளைந்தது அல்ல. அவர் அரசியல் பேசவும் இல்லை. இந்த நாட்டின் பாதுகாப்பு எத்தகைய அலட்சியமானவர்களால் கையாளப்படுகிறது என்பதையே காட்டுகிறது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு எத்தனையோ தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.
* 2016 சனவரி 2 ஆம் நாள் நடந்தது பதான்கோட் தாக்குதல். இதில் 7 பாதுகாப்பு படை வீரர்களும் 6 தீவிரவாதிகளும் இறந்தார்கள். தீவிரவாதிகள் இந்திய ராணுவ உடையில் வந்தார்கள். மறுநாள் கைவினை குண்டு வெடித்து மேலும் ஒரு வீரர் இறந்தார். அதற்கு மறுநாள் வான்படைத் தளத்தை மீட்கும் நடவடிக்கை நடந்தது.
* 2016 பிப்ரவரியில் பொம்பொரியில் - எட்டு ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
* 2016 செப்டம்பரில் - உரியில் இருக்கும் இந்திய ராணுவத் தலைமை யகத்தில் நடந்த தாக்குதலில் 19 படைவீரர்கள் பலியானார்கள்.
*2017 ஏப்ரல் 24 அன்று இந்தியப் பாதுகாப்புப் படையினர் மீது சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்கு தலில் 24 வீரர்கள் பலியானார்கள்.
* 2017 போபால் உஜ்ஜைனி தொடர் வண்டியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் எட்டுப் பேர் காயம் அடைந்தார்கள்.
* 2017-அமர்நாத் கோவில் தாக்குதலில் ஏழு பேர் பலியானார்கள்.
* 2017 - லெத்திபோரா கமாண்டோ பயிற்சி நிலைய தாக்குதலில் 5 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.
* 2019 பிப்ரவரி 14 - புல்வாமா தாக்குதல் நடந்தது. ஒரு தற்கொலை தீவிரவாதி தாக்கியதில் 40 படைவீரர்கள் பலியானார்கள்.
* 2021 அக்டோபர் மாதத்தில் பொதுமக்கள் 11 பேர் பலியானார்கள்.
* 2022 ஆகஸ்ட் 11 இரஜோரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்துள்ளார்கள். இவைகளில் எல்லாம் எந்த அளவுக்கு பாதுகாப்பு குளறுபடிகள் நடந்திருக்குமோ என்ற அச்சத்தை உருவாக்குவதாக சத்ய பால் மாலிக் பேட்டி அமைந்துள்ளது.