முரசொலி தலையங்கம்

“வெளிநாடுகளில் இந்தியாவை அவமானப்படுத்திய மோடி முதலில் கண்­ணா­டியை பார்க்கவேண்டும்” : முரசொலி விமர்சனம் !

இந்­திய நாடாளு மன்­றத்­தில் பேச அனு­ம­திக்­காத இவர்­கள்­தான் ‘லண்­ட­னில் எப்­படி பேச­லாம்?’ என்று கேட்­கி­றார்­கள்.

“வெளிநாடுகளில் இந்தியாவை அவமானப்படுத்திய மோடி முதலில் கண்­ணா­டியை பார்க்கவேண்டும்” : முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கண்ணாடியைப் பாருங்கள்!

நாடாளுமன்றத்தில் அமளி செய்து கொண்டு இருக்கிறது ஆளும்கட்சியான பா.ஜ.க. 'எதிர்க்கட்சிகள் என்ன முடக்குவது? இதோ நாங்களே அதைச் செய்து கொள்கிறோம்' என்று கூச்சல் செய்து கொண்டு இருக்கிறது பா.ஜ.க. எதிர்க்கட்சிகளைப் பேச விட்டால் அவர்கள் அதானியை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அதானியை நினைவூட்டினால் அதற்கு மோடி பதில் சொல்லியாக வேண்டும். அதானி விவகாரத்தைத் திசை திருப்புவதற்காக பா.ஜ.க. கண்டுபிடித்த வழிதான், லண்டனில் 'ராகுல் பேசியது தவறு' என்பது ஆகும்.

'வெளிநாட்டில் போய் இந்தியாவைப் பற்றி பேசக் கூடாது. ராகுல் பேசியது தவறு' என்று பா.ஜ.க. சொல்கிறது. இவ்வளவு நியாயவான்கள், இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல் பேசியதை அனுமதித்தார்களா என்றால் இல்லை. நாடாளுமன்றத்தில் அதானிக்கும் மோடிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து பக்கம் பக்கமாகப் பேசினார் ராகுல். வெளிநாட்டுக்கு எப்போதெல்லாம் பிரதமர் போகிறாரோ அப்போதெல்லாம் அந்தந்த நாட்டுடன் வர்த்தகத் தொடர்பு அதானிக்கு அதிகம் ஆகிறதே அது எப்படி என்று ராகுல் கேட்டார். தேதி வாரியாகக் கேட்டார்.

மோடியின் பயணத் திட்டத்தையும் - அதானியின் வர்த்தகப் பெருக்கத்தையும் ஆதாரங்களுடன் வைத்துக் கொண்டு கேட்டார். இவை அனைத்தும் நாடாளுமன்றக் குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்டன. மக்களவையில் ராகுல் பேச்சின் முக்கியப் பகுதிகளும், மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சின் முக்கியப் பகுதிகளும் நீக்கப்பட்டன. இந்திய நாடாளு மன்றத்தில் பேச அனுமதிக்காத இவர்கள்தான் 'லண்டனில் எப்படி பேசலாம்?' என்று கேட்கிறார்கள்.

“வெளிநாடுகளில் இந்தியாவை அவமானப்படுத்திய மோடி முதலில் கண்­ணா­டியை பார்க்கவேண்டும்” : முரசொலி விமர்சனம் !

லண்டனில் ராகுல் பா.ஜ.க.வை விமர்சித்திருந்தால்கூட விட்டு வைத்திருப்பார்கள். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கைவைத்தார். அதனால்தான் இவர்களுக்கு ஆத்திரம் தலைதூக்கி ஆட்டுவிக்கிறது. இந்தியாவின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பேசிய ராகுல், இந்திய ஜனநாயகத்துக்கு யாரால் ஆபத்து என்பதைச் சொல்லி இருக்கிறார்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிய ராகுல், 'இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது கடினம். இந்தியாவில் அரசியல் தலைவர்களே ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். என்னுடைய செல்போனில் பெகாசஸ் உளவு மென்பொருளை நிறுவியிருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிப்பது இல்லை. விவாதங்கள் நடத்த அனுமதிப்பது இல்லை' என்று ராகுல் பேசினார்.

இந்திய விவகாரங்களை வெளிநாட்டில் போய் பேசத் தொடங்கியதே பிரதமர் மோடிதான் என்பது அனைவரும் அறிந்ததுதான். 2015 ஆம் ஆண்டு மே மாதம் தென் கொரியா சென்றார் பிரதமர் மோடி. அப்போது என்ன பேசினார் தெரியுமா? இந்தியாவில் ஏன் பிறந்தோம் என ஒரு காலத்தில் மக்கள் கவலைப்பட்டார்கள்' என்று பேசினார் அவர்.

தென்கொரியாவில் உள்ள இந்திய சமூகத்தினரிடம் பேசும் போது, "இதற்கு முன்பு என்ன பாவம் செய்தோம்? இந்தியாவில் வந்து பிறந்துவிட்டோம் என கடந்த காலங்களில் மக்கள் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். இதனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. வெளிநாடுகளில் அதிக ஊதியத்துடன் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள்" என்று பேசினார்.

“வெளிநாடுகளில் இந்தியாவை அவமானப்படுத்திய மோடி முதலில் கண்­ணா­டியை பார்க்கவேண்டும்” : முரசொலி விமர்சனம் !

'போன பிறவியில் என்ன பாவம் செய்தோம், இந்தியாவில் பிறந்துவிட்டோம் என்று பலரும் வருத்தப்படுகிறார்கள்' என்று சீனாவில் பேசினார் பிரதமர். “இந்தியாவில் ஏன் பிறந்தோம்" என்று கவலைப்பட்டவர்கள்தான் இந்தியாவை விட்டு வெளியில் சென்று வாழ்கிறார்கள். பாவம் செய்துவிட்டோம் என்று நினைத்தவர்கள்தான் போனார்களா?

"கைசின்னம் இருக்கிறது, அது 85 பைசாவை உறிஞ்சியது” என்று ஜெர்மனியில் பேசினார் பிரதமர்.2017 ஆம் ஆண்டு இரண்டு நாள் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்ற பிரதமர் மோடி, “ஊழல்களை ஒழிப்பதில் எனது அரசு சாதனை படைத்துள்ளது. ஒரு கறைகூட இல்லை. ஊழல்தான் இந்தியாவில் நடந்த ஆட்சி மாற்றத்துக்குக் காரணம். இந்தியர்கள் ஊழலை வெறுக்கின்றனர்" என்று பேசினார். வர்ஜீனியாவில் கூடிய இந்திய --அமெரிக்க சமூகத்தினரிடம் இதனை அவர் தெரிவித்தார்.

“வெளிநாடுகளில் இந்தியாவை அவமானப்படுத்திய மோடி முதலில் கண்­ணா­டியை பார்க்கவேண்டும்” : முரசொலி விமர்சனம் !

'தன்னைப் பாதுகாக்க இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்காத நாடு என்பதை எல்லையில் நடந்த துல்லியத் தாக்குதல் காட்டுகிறது. இதனை எந்த நாடும் கேள்வி கேட்கவில்லை' என்றும் பேசினார். ‘இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி முறையை ஒரு ஆய்வுப் பாடமாக இங்கு வைக்கலாம்' என்று அமெரிக்க -- இந்தியா பிசினஸ் கவுன்சில் கூட்டத்தில் பேசினார். இதுமட்டுமல்ல; அமெரிக்காவுக்குப் போய் ட்ரம்ப்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதைப் போல நடந்து கொண்டார் பிரதமர் மோடி.

'அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எளிதாக அணுகக் கூடியவராக இருக்கிறார்' என்றும், 'எப்போதும் அன்புடனும் நட்புடனும் பழகுகிறார்’ என்றும், 'அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர்' என்றும் புகழ்மாலை சூட்டியது யார்? 'அப் கி பார் டிரம்ப் சர்க்கார்' என்று சொன்னதுயார்?ட்ரம்ப்பை இந்தியாவுக்கு அழைத்து வந்தது யார்? ‘அன்று டீ விற்றவர், இன்று இந்தியாவின் பிரதமராக ஆகி இருக்கிறார்' என்று ட்ரம்பை சொல்ல வைத்தது யார்?

இந்திய மருத்துவர்கள் குறித்த பிரதமரின் விமர்சனமும் சர்ச்சை ஆனது. காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி லண்டன் சென்ற போது, அங்கு அவர் செய்தியாளர்களிடம், "மருத்துவர்களுக்கும் மருந்து உற்பத்தியாளர்களுக்கும் இடையே தனி உறவு உள்ளது. பல மருத்துவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் மருந்து உற்பத்தியாளர்களின் செலவில் நடைபெறுகிறது" எனக் கூறினார்.

“வெளிநாடுகளில் இந்தியாவை அவமானப்படுத்திய மோடி முதலில் கண்­ணா­டியை பார்க்கவேண்டும்” : முரசொலி விமர்சனம் !

இது குறித்து டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் சங்கம் ஒரு கண்டனக் கடிதத்தையே பிரதமருக்கு எழுதியது. அந்தக் கடிதத்தில், "மருத்துவர்கள் அனைவரும் மருந்து உற்பத்தியாளர்களின் செலவில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறியது கண்டனத்துக்குரியது. மருத்துவச் சுற்றுலாவாக மருத்துவர்கள் வெளிநாடு செல்வதை கொச்சைப்படுத்துவது போல பிரதமர் பேசி உள்ளார். இதனால் மருந்துக் கம்பெனிகளுக்கும் மருத்துவர்களுக்கும் பெரும் மனச்சங்கடம் உண்டாகி இருக்கிறது.

ஏதோ ஒரு சில மருத்துவர்கள் இதுபோல இருப்பதால் ஒரு வெளிநாட்டு நிகழ்வில் இதுபோல மருத்துவர்களின் சேவையை கிண்டலுக்குள்ளாக்கி இருக்க வேண்டாம். வெளிநாட்டுக்குச் சென்று ஒரு பிரதமர் மருத்துவர்களை கேவலம் செய்வது உலக வரலாற்றிலேயே முதல் தடவையாக நிகழ்ந்துள்ளது. மருத்துவர்களின் சேவையைப் பற்றி அறிந்த ஒரு பிரதமர் இவ்வாறு கூறுவது மிகவும் தவறானது” என்று சொன்னார்கள் அவர்கள். ராகுலுக்கு அறிவுரை சொல்வதற்கு முன்னால் தங்களுக்கு முன்னால் இருக்கும் கண்ணாடியை பா.ஜ.க. பார்க்க வேண்டும்!

- முரசொலி தலையங்கம் (16-03-23)

banner

Related Stories

Related Stories