பொருளாதாரமே நிலைகுலையும்!
‘அதானி விவகாரம் பொருளாதாரத்தைப் பாதிக்காது’ என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். எதை வைத்து இப்படிச் சொன்னார்? எதை வைத்தும் இப்படிச் சொல்லவில்லை. ‘பாதிக்காது’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார். அவரால் அதற்கு மேல் எதுவும் சொல்லத் தெரியவில்லை.
நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளும், பொருளாதாரச் சூழலும் வலுவாக உள்ளன என்று சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன். அதானி விவகாரத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையாம். இந்தியப் பங்குப் பரிவர்த்தனை மையமான செபியும், இந்திய ரிசர்வ் வங்கியும் இதனை ஆராய்ச்சி செய்து வருகிறதாம். பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் வருவது வழக்கம் தானாம். அதானி விவகாரம் கிளம்பிய இரண்டு நாட்களில் கூட 800 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி இந்தியாவுக்குக் கிடைத்துவிட்டதாம். இதனால் இந்தியப் பொருளாதாரம் வலிமையாக உள்ளதாம். இதுதான் நிதி அமைச்சரின் கண்டுபிடிப்புகள்.
இந்தியப் பொருளாதாரம் பா.ஜ.க.வின் கொள்கைகளால் நிலைகுலையத் தொடங்கி இருக்கிறது என்பதன் அடையாளம்தான் அதானி விவகாரம். இதனை பா.ஜ.க. இப்போது கூட புரிந்து கொள்ளவில்லையானால் இதன் மோசமான விளைவுகளை பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் அக்கட்சி சந்திக்க வேண்டி வரும்.
ஏதோ ஒரு தனியார் ஆய்வு நிறுவனம், ஏதோ ஒரு தனியார் தொழில் நிறுவனம் குறித்து எழுப்பும் சந்தேகமாக இதனைக் கடந்துவிட முடியாது. அதானி குழுமத்தின் நிலையான தன்மையை மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தின் அடிக்கட்டுமானத்தை அசைத்துப் பார்க்கும் தகவல்கள்தான் இப்போது வெளியாகி இருக்கிறது. எந்த வகையில் அதானி நிறுவனம் செயல்பட்டுள்ளது, அதற்கு ஒன்றிய அரசு எந்த வகையில் எல்லாம் உடந்தையாக இருந்துள்ளது, அது இந்தியப் பொருளாதாரத்தை எப்படி எல்லாம் நிலைகுலைய வைத்துள்ளது, வைக்கும் என்பதை மக்கள் உணர்ந்தாக வேண்டும். மக்களுக்கு உணர்த்தியாக வேண்டும்.
கொரோனாவுக்குப் பிந்தைய இரண்டு ஆண்டுகளில் அதானி குழுமங்களின் சொத்து மதிப்பு 819 விழுக்காடு அதிகம் ஆகி இருக்கிறது. இந்த வளர்ச்சி உண்மையான வளர்ச்சி அல்ல என்பதே ஹிண்டன்பர்க் அறிக்கை ஆகும். தங்கள் நிறுவனத்தின் பங்கு மதிப்பை அதிகமாகக் காட்டி மிக அதிகமான அளவில் கடன் பெற்றுள்ளது இந்த நிறுவனம். ஒரே நேரத்தில் பங்கு சந்தையில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதன் மூலமாக முதலீட்டாளர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலியான நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளார்கள். பா.ஜ.க. சொல்லி வந்ததற்கு முரணான செயல்கள் இவை.
இந்தியாவில் கருப்புப்பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிப்பதற்காக 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக ஒருநாள் இரவில் அறிவித்தது பா.ஜ.க. அரசு. இதனை இந்தியாவின் இரண்டாவது விடுதலை நாள் என்றெல்லாம் சில ஞான சூனியங்கள் சொல்லித் திரிந்தார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கருப்புப்பணம் மீட்கப்படும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணங்கள் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று சொன்னார்கள். ‘இந்தியர்கள் ஒவ்வொருவர் தலைக்கும் 15 லட்சம் தரப்படும்’ என்றெல்லாம் மிளகாய் அரைத்தார்கள். இவை அனைத்துக்கும் விரோதமாகத்தான் அதானி விவகாரத்தில் நடந்து கொண்டுள்ளார்கள்.
2016- ஆம் ஆண்டு, ஏப்ரல் 4-ஆம் தேதி பனாமா ஆவணங்கள் விவகாரம் அம்பலமானது. ‘கடல் கடந்த வரி புகலிடங்களிலிருந்து வரும் பண வரவுகளை கண்காணிக்க பல நிறுவன விசாரணை குழுவை ஒன்றிய அரசு முடுக்கிவிட்டுள்ளது’ என்று அப்போது நிதி அமைச்சகம் அறிவித்தது.
சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘பொருளாதார குற்றவாளிகளுக்கான பாதுகாப்பு புகலிடங்களை அகற்றவும், பண மோசடி செய்பவர்களைக் கண்டுபிடித்து நிபந்தனையின்றி நாடு கடத்தவும், சிக்கலான சர்வதேச வலையை உடைக்கவும் நாம் செயல்பட வேண்டும்’ என்று கூறினார்கள். ஆனால் நடந்தது என்ன?
இதோ காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயராம் ரமேஷ் சொல்கிறார்: “கவுதம் அதானியின் சகோதரரான வினோத் அதானியின் பெயர், பனாமா ஆவண கசிவில் இடம்பெற்றது. அதில் அவர் ஹாமாஸ் மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் கடல் கடந்த நிறுவனங்களை இயக்குபவர் என கூறப்பட்டிருந்தது. அவர் கடல் கடந்த ஷெல் நிறுவனங்களின் (பெயரளவில் செயல்படும் நிறுவனங்கள்) ஒரு பரந்த தளம் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட பங்கு கையாளுதல், கணக்கு மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஊழலை எதிர்த்து போராடுவதில் உங்கள் நேர்மை மற்றும் நோக்கம் பற்றி நீங்கள் அடிக்கடி பேசினீர்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் எடுத்தீர்கள். உங்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு தொழில் நிறுவனம் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது என்கிறபோது, உங்கள் விசாரணைகளின் தரம் மற்றும் நேர்மையைப் பற்றி எங்களிடம் கூறுவது என்ன?” - என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் அவர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சொல்ல வேண்டிய கேள்வி இதுதான்.
வினோத் அதானிக்கும் கவுதம் அதானிக்குமான தொடர்புகள் குறித்துத்தான் அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. வினோத் அதானி இயக்குநராக இருக்கும் நிறுவனத்தில் இருந்து கவுதம் அதானிக்கு வந்த கடன்கள் குறித்த கேள்விகளுக்கு இதுவரை பதில் சொல்லப்படவில்லை. வினோத் அதானிக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்த கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. ‘இது குறித்து பதில் அளிக்கும் நிலையில் நாங்கள் இல்லை’ என்று கவுதம் அதானி தனது பதிலாகக் கூறி இருக்கிறார். வினோத் அதானி, அதானி நிறுவனங்களில் 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் பதவிகள் வகித்தவர். அதன்பிறகுதான் விலகி இருக்கிறார். இந்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு மாறாக வினோத்தை வெளியில் இருந்து செயல்பட வைத்திருக்கிறார்கள்.
இதனால் இந்தியப் பொருளாதார நிதிக் கொள்கை மோசடி செய்யப்பட்டதாகத் தானே பொருள்? இது இந்திய மதிப்பை குறைக்கவில்லையா? அதானி நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு சரிவு என்பது இந்திய பொருளாதார நிதிச் செயல்பாட்டின் சரிவைக் காட்டவில்லையா?
ஹர்ஷத் மேத்தாவைப் போல எத்தனை ஆண்டுகளுக்கு இது மாறாத களங்கமாக இருக்கப் போகிறது?!