முரசொலி தலையங்கம் (28-01-2023)
தலைநகரில் தமிழ்ப்பெண்கள்!
இந்திய நாட்டின் குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்ப்பெண்களை அணிவகுக்க வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. பெண்களின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றி இருக்கிறது தமிழ்நாடு அரசு!
அருந்தமிழ் ஒளவை மூதாட்டி, வீரமங்கை வேலுநாச்சியார், சமூகசீர்திருத்த திராவிடத் தாய் மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம், சமூக சீர்திருத்த முதல் மருத்துவர் முத்துலட்சுமி, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி, நாட்டியக் கலைஞர் பாலசரசுவதி, இன்றும் வாழும் இயற்கை விவசாயியான பாப்பம்மாள் – ஆகிய ஏழு முகங்களை தமிழ்நாட்டின் முகங்களாக எடுத்துக் காட்டி இருக்கிறது தமிழ்நாடு அரசு.
பெண் அறிவின், தமிழ் இலக்கியத்தின் அடையாளம் ஒளவை.வீரத்தின் விளைநிலம் வேலுநாச்சி. சமூக சீர்திருத்தத்தின் முகம் மூவலூரார். பெண் திறமையின் அடையாளம் முத்துலட்சுமி. கலையின் அடையாளங்கள் சுப்புலட்சுமியும் பாலசரசுவதியும். உழைப்பின் அடையாளம் பாப்பம்மாள். அதனால் தான், 'பெண் சக்தியைப் பறைசாற்றிய தமிழக அலங்கார ஊர்தி' என்று தலைப்பிட்டுள்ளது 'தினமணி'.
கடந்தகாலத்தில் நடந்ததையும் நினைவூட்டிப் பார்க்கத் தான் வேண்டும். இந்தியக் குடியரசு நாள் அணிவகுப்பில் இடம் பெறுவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஊர்தியை கடந்த ஆண்டு மறுத்தார்கள். இந்திய விடுதலை வேள்விக்காக விறகு சுமந்த மருது சகோதரர்களும், இராணி வேலுநாச்சியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும், மகாகவி பாரதியாரும் தான் அதில் இடம் பெற்றிருந்தார்களே தவிர, விடுதலைப் போராட்டத்துக்குத் தொடர்பில்லாத யாரும் இடம் பெற வில்லை. 'இவர்கள் யார்?' என்று அன்று அதிகாரிகள் கேட்டதாக டெல்லியில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ்களே செய்திகள் வெளியிட்டன.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களின் ஊர்திகளுக்குத் தான் இந்தப் பிரச்சினை வந்தது. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு எதிரான பாகுபாடாக இது அமைந்திருந்தது.
ஒன்றிய அரசு அதிகாரிகளின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக அப்போதே பிரதமர் மோடி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் அனுப்பி இருந்தார்கள். பிரதமர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் முதலமைச்சர். ''இவ்விஷயத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ் நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
“தமிழ்நாடு அலங்கார ஊர்தி தொடர்பாக, மாநில அதிகாரிகள் 3 முறை குழுவிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தனர். திருத்தங்கள் செய்து தரப்பட்ட 7 மாதிரிகளையும் ஒன்றிய அரசின் குழுவினர் மறுத்ததை ஏற்க முடியவில்லை. அதுவும் 4வது சுற்றுக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அதிகாரிகளை அழைக்காமலேயே குடியரசு தின அணிவகுப்பு பட்டியலிலிருந்து பெயரை நீக்கியிருப்பது வேதனை தருகிறது” என குறிப்பிட்டு இருந்தார். இறுதி வரை அதில் முடிவு எடுக்கவில்லை ஒன்றிய அரசு.
இந்த நிலையில் முதலமைச்சர் அவர்கள் இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்தார். இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் தமிழ்நாடு முன்மொழிந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் உருவமாதிரிகளை இந்திய பாதுகாப்புத் துறையின் உயர்நிலைக்குழு கவனத்தில் கொள்ளாத நிலையில், அந்த தலைவர்களின் விடுதலை வேட்கையைப் பறைசாற்றும் அலங்கார ஊர்தி தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் இடம்பெறும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். இந்த அலங்கார ஊர்தி தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் மக்களின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் இந்த ஊர்தி கடந்த ஆண்டில் வலம் வந்தது. அனைத்து ஊர்களிலும் சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கை எழுச்சியுடன் பறை சாற்றுவதற்கான களம் தமிழ்நாட்டில் அமைந்தது.
டெல்லியில் மறுக்கப்பட்டது கூட நல்வாய்ப்பாக அமைந்து, தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்ட கால எழுச்சியை உருவாக்க அது பயன்பட்டது. இந்த நிலையில், கடந்த காலம் போல் இல்லாமல் தமிழ்நாடு ஊர்தியை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் டெல்லி அதிகாரிகள்.
''சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறி முறையின் -– மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கி லுள்ள படி"
–- என்கிறார் ஒளவை மூதாட்டி.
ஆத்திச்சூடியும், கொன்றைவேந்தனும், மூதுரையும் உலகுக்கு அறிவுரை சொல்லும் அறநூல்கள் ஆகும்.
முத்துவடுகநாதரின் மனைவி தான் வீரமங்கை வேலுநாச்சி. காளையார் கோவில் தாக்குதலில் கணவர் கொல்லப்பட்டார். காளையார் கோவில் சூறையாடப்பட்டது. சினம் கொண்ட வேங்கையாக வெளியேறி, தன்னைப் போன்ற சுதந்திர தாகம் கொண்டவர்கள் அனைவரையும் அணிசேர்ந்து சுதந்திரப் படை அணி கட்டியவர் வேலுநாச்சி. படைகளை வெவ்வேறு முனைகளுக்குப் பிரித்து வியூகம் அமைத்த வீரமங்கை அவர். பிரிட்டிஷ் ஆட்சியின் வசம் இருந்த சிவகங்கையை எட்டு ஆண்டு போருக்குப் பின்னால் மீட்டு, மீண்டும் ராணியாக அமர்ந்தவர் நாச்சி.
அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்குலத்தின் விடுதலைக்காக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குரல் கொடுத்தவர்கள் மூவலூராரும், டாக்டர் முத்துலட்சுமியும். ‘புனிதம்’ என்று சொல்லி பெண்குலத்தை இழிவு செய்யும் நடத்தைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் இவர்கள். சட்டமன்றத்திலேயே வாதாடியவர் டாக்டர் முத்துலட்சுமி.
தங்களது திறத்தால் கலையை வளர்த்தார்கள் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி, நாட்டியப் பேரொளி பாலசரசுவதி. தமிழிசை இயக்கத்தில் மகத்தான பங்களிப்பு செய்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள். ஐ.நா.வில் பாடியவர் அவர். சாஸ்திரத்துக்குள் பரதக் கலையை அடக்க நினைத்ததை தொடர்ந்து எதிர்த்தவர் பாலசரசுவதி. இவர் குறித்த 'பாலா' என்ற குறும்படத்தை இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர் சத்ய ஜித்ரே தயாரித்தார் என்பதே இவரது பெருமையைச் சொல்லும்.
107 வயதிலும் இன்றும் வயலில் இறங்கி விவசாயம் பார்த்துக் கொண்டு இருக்கிறார் இயற்கை விவசாயி பாப்பம்மாள். பத்ம ஸ்ரீ விருதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெற்றவர் இவர்.
தமிழ் - இலக்கியம் – வீரம் - சமூகம் - சீர்திருத்தம் – கலை – உழைப்பு ஆகியவை இணைந்ததுதான் தமிழ்ப் பெண்களின் முகம் ஆகும். அந்த முகத்தை தலைநகர் டெல்லி வரை கொண்டு சென்றுள்ளது தமிழ்நாடு அரசு!