முரசொலி தலையங்கம் (11-01-23)
மரபை மீறிய ஆளுநர்- – மாண்பு காத்த முதல்வர்!
தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஏதாவது ஒரு குழப்பத்தை நாள் தோறும் நிகழ்த்திக் கொண்டு இருப்பது ஆளுநர் இரவி அவர்களின் வழக்கமாக இருக்கிறது. இதனை எத்தனையோ முறை தலையங்கமாகத் தீட்டி அறிவுறுத்தி உள்ளோம். அவருக்கு அவசியமில்லாத பொருள் பற்றி, அவசரக் கோலத்தில் பொருத்தமில்லாத இடத்தில் பேசுவதுதான் அவரது வாடிக்கை ஆகும். இதே போன்று சட்டமன்றத்திலேயே நடந்து கொண்டு விட்டார். பேச வேண்டியதைப் பேசவில்லை என்பதே இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு.
ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவது என்பது பேரவை மரபு. ஆளுநர் உரை என்பது அரசின் உரையே. அரசின் சார்பில் தயாரித்து வழங்கிய உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும் என்பதே விதிமுறை ஆகும். அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை கடந்த 5 ஆம் தேதி முதலமைச்சர் அவர்கள் கையெழுத்து இட்டு, ஆளுநருக்கு அனுப்புகிறார்கள். இந்த உரையை ஏற்றுக் கொண்டதாக 7 ஆம் தேதி ஆளுநரும் தனது கையெழுத்தைப் போட்டு ஒப்புதல் தந்திருக்கிறார். ஒப்புதல் தந்த ஆளுநர், அதனைத் தானே வாசித்திருக்க வேண்டும். மாறாக, அந்த உரையில் கொள்கை சார்ந்தவை, இந்த ஆட்சி யின் உயிர்நாடியான கருத்துருக்களை தவிர்த்து விட்டு உரையாற்றியிருக்கிறார்.
ஆளுநர் உரையின் மூலமாக, ஒரு ஆட்சியின் நோக்கும் போக்கும், திட்டமிடுதலும் தீர்மானமான கொள்கைகளும் வெளிப்படும். வெளிப்பட வேண்டும். இந்த ஆட்சியின் நெறிமுறையாக ‘திராவிட மாடல்’ கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக் கிறார்கள். அந்தச் சொல்லையே தவிர்த்துவிட்டால், இது எப்படி கொள்கை அறிக்கையாக அமைந்திருக்க முடியும்? தி.மு.க. ஆட்சியின் முகம் எது என்பதையே மறைக்க முனைந்திருக்கிறார் ஆளுநர்.
‘தமிழ்நாடு’ என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பெயராகும். 500 ரூபாய் கட்டி கெசட்டில் மாற்றிய பெயரல்ல. ஆள் ஆளுக்கு பெயரை மாற்றுவதற்கு! இதனை மாற்றி ‘தமிழகம்’ என்று அழைக்கலாம் என்று சில நாட்களுக்கு முன்னால் ஆளுநர் பேசினார். ‘அகம்’ என்ற தமிழ்ச்சொல்லுக்கு வேர்ச்சொல் சொல்லும் அளவுக்கு இவர் ஒன்றும் மொழியியல் அறிஞர் அல்ல. ‘தமிழ்நாடு’ என்று சொல்லக்கூடாது என்று இவராகச் சொல்லிக் கொண்டு மாநிலத்தின் அடையாளத்தையே மாற்ற முனைந்தார். அதே காரியத்தைத்தான் தனது உரையிலும் செய்துள்ளார். தமிழ்நாடு அரசு என்று சொல்வதற்கு அவருக்கு நெஞ்சு அடைக்கிறது. அதனால், ‘இந்த அரசு’ என்று சொல்லி இருக்கிறார். எந்த அரசு என்று யாராவது கேட்டால், என்ன ஆகும்? அந்த வகையில் மாநில அடையாளத்தையே சிதைக்க முனைந்துள்ளார்.
இதுவரை பொதுமேடைகளில், ‘ஐம்பது ஆண்டுகளாக தமிழ்நாடு வளரவில்லை’ என்று சொன்னவர், இப்போது ‘வளர்ந்து இருக்கிறது’ என்பதை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு இருக்கிறார். “கடந்த ஐம்பது ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் நமது நாட்டில் உள்ள மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது” என்று சொல்லி இருக்கும் அவர் அதற்கான காரணத்தைச் சரியாகச் சொல்ல வேண்டியதை தவிர்த்திருக்கிறார்.“1960 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் மற்ற பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும் போது சமூக, பொருளாதார, கல்வி, மருத்துவக் குறியீடுகளில் பின் தங்கி இருந்த தமிழ்நாடு இன்று அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக வளர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு இங்கு கட்டமைக்கப்பட்ட ஆட்சி முறையே” என்பதைத் தவிர்த்திருக்கிறார். எதனால் வளர்ந்தோம் என்பதை அடையாளப்படுத்த வேண்டாமா? அதை அடையாளப் படுத்துவதற்குத் தானே இந்த உரை? வேறு எதற்காக இது?
திராவிட மாடல் என்ற சொல் மீது அவருக்கு ஒவ்வாமை இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்று சொல்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? “சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிறைவேற்றுவதால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இதனால் பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” என்ற வரிகள் எதற்காக அவருக்கு கசக்க வேண்டும்?
‘தமிழ்நாடு அமைதிப் பூங்கா’ என்று சொல்வதில் அவருக்கு என்ன தயக்கம்? தமிழ்நாட்டு அமைதியில் என்ன குறையைக் கண்டார்? தமிழ்நாடு அமைதியாக இருப்பதுதான் அவருக்கு கசப்பாக இருக்கிறதா? 15 நாட்களுக்குள் வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது விதிமுறையாகும். ஆனால் மூன்று நாட்களுக்குள் ஒப்படைத்தது தமிழ்நாடு அரசு. இதனைச் சொல்லி பாராட்டி இருக்க வேண்டாமா? 3,657 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதைச் சொல்லி விட்டுவிட்டு, ‘இதற்காக தமிழ்நாடு அரசைப் பாராட்டுகிறேன்’ என்பதைச் சொல்ல முடியாமல் ஆளுநரை எது தடுக்கிறது?
“சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடு களையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது” என்பதையும் தவிர்த்திருக்கிறார். பெரியார்- அண்ணா- கலைஞரைத்தான் அவருக்கு ஆகாது என்றால் அம்பேத்கர், காமராசர் பெயரும் ஆகவில்லை. பொதுவாகவே இந்த ஆட்சி சிறப்பாக நடப்பது அவருக்கு பிடிக்கவில்லை என்பதே இதன் மூலமாகத் தெரிகிறது. அதற்கு நாம் எதுவும் செய்ய இயலாது.
ஆளுநர் வேலைக்காக வந்தவர், அவையின் மரபைக் காத்தாக வேண்டும். அவர் மீறியதால், மாண்பைக் காக்க வேண்டிய கடமையை முதலமைச்சர் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதனை உடனடியாக எடுத்துக் கொண்டார்கள். தி.மு.க. அரசுக்கும் ஆளுநருக்குமான மோதல் அல்ல இது. சட்டசபை மரபை ஆளுநர் மீறியதால் மாண்பைக் காக்கவேண்டிய தனது ஜனநாயகக் கடமையைத்தான் முதலமைச்சர் அவர்கள் செய்தார்கள். இதன் மூலமாக சட்டசபை ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய நன்மையை முதலமைச்சர் அவர்கள் செய்துள்ளார்கள்.‘என்ன வேண்டுமானாலும் படித்துவிட்டுப் போகட்டும்’ என்று இருந்திருந்தால், அது மக்களாட்சியின் மாண்புக்கு இழுக்காக அமைந்திருக்கும். அதனைத் துணிச்சலாகத் துடைத்ததன் மூலமாக தமிழ்நாடு மாநில சட்டசபை மாண்பை மட்டுமல்ல; இந்தியா முழுமைக்குமான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் மாண்புக்கும் அரண் அமைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!.