முரசொலி தலையங்கம் (16-12-2022)
நிறுத்தப்படவில்லை!
சேலம் -ஆத்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய பழைய பழனிசாமி, ‘அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை நிறுத்துவதே தி.மு.க. அரசின் வேலை’ என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி இருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் என்னென்ன நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பாராட்டலாம். அப்படி எதுவாவது இருந்தால்தானே அவரால் பட்டியல் போடமுடியும்?
தி.மு.க. ஆட்சியில் என்னென்ன நல்ல திட்டங்களை நிறுத்திவிட்டார்கள் என்பதையும் அவர் பட்டியல் போட்டிருந்தால் பாராட்டலாம். அப்படி எதுவாவது இருந்தால்தானே அவரால் பட்டியல் போடமுடியும்?
இவை இரண்டையும் பட்டியல் போட்டால் தனது ஆட்சிக் காலத்தின் யோக்கியதை சந்தி சிரித்துவிடும் என்பது பழனிசாமிக்குத் தெரியும். அதனால்தான் அவர் அப்படி எந்த முயற்சியிலும் இறங்கவில்லை.
‘அம்மா உணவகத்தை மூடப் போகிறார்கள்’ என்று அவர்களாக ஒரு வதந்தியைக் கிளப்பிக் கொண்டு இருந்தார்கள். ‘அம்மா உணவகம்’ பெயர் பலகையைச் சேதப்படுத்தியவர் மீதே நடவடிக்கை எடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ‘அம்மா உணவகம்’ சிறப்பாகவே நடந்து வருகிறது.
தாலிக்குத் தங்கம் திட்டம் காலத்தின் தேவைக்கு ஏற்ப மாறுதல் செய்யப்பட்டுள்ளது. கல்வித் திட்டமாக உயர்வைப் பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சியில் மூவலூர் மூதாட்டி பெயரிலான திட்டத்தைத்தான் தங்கம் வழங்கும் திட்டமாக ஜெயலலிதா மாற்றினார்.
மூவலூர் மூதாட்டி பெயரிலான திருமண நிதி உதவித் திட்டத்தைத் தொடங்கியவரே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான். 1989 ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் அவர்கள் தொடங்கி 5 ஆயிரம் நிதி என அறிவித்தார். அ.தி.மு.க. ஆட்சியில் 2002 இல் அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். அதனை 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர் உயிரூட்டினார். நிதியை அதிகப்படுத்தினார். அ.தி.மு.க. ஆட்சியில் பணம் தருவதை தங்கம் என மாற்றினார்கள். அதையாவது முறையாகக் கொடுத்துள்ளார்களா என்றால் இல்லை.
கடந்த 2018-21 ஆகிய மூன்று ஆண்டு காலத்தில் இந்த திருமண உதவித் திட்டம் உரிய பயனாளிகளுக்குச் சென்றடையவில்லை என்பதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக அலங்கோலம் ஆகும். இந்தத் துறையில் இந்த திட்டத்துக்கான உதவி கேட்டு சுமார் 3 லட்சத்து, 34 ஆயிரத்து, 913 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தது. திருமணத்தன்று தாலிக்குத் தங்கம் கேட்டால் – -திருமணம் முடிந்து – -குழந்தையும் பெற்று –- குழந்தை பள்ளிக்குப் போகும் வரை தங்கம் தராத ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. கழக ஆட்சி அமைந்த பிறகு ரூ.762 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 94 ஆயிரம் பேருக்கு நிதி உதவியும் தங்கமும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இத்திட்டம் ஆராயப்பட்டது.
‘’தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் திருமண உதவித் திட்டம், உயர்கல்வித் திட்டமாக மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள்.
எனவே, தாலிக்குத் தங்கம் திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியே மூன்று ஆண்டுகளாகச் செயல்படுத்தவில்லை. விண்ணப்பித்த யாருக்கும் தங்கம் தரவில்லை. இதுதான் உண்மையே தவிர, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறுத்திவிட்டோம் என்பது தவறான தகவல்.
மூவலூர் ராமாமிர்தம் அவர்கள் பெயரிலான திருமண உதவித் திட்டம்தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர – ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதி உதவித் திட்டம் –டாக்டர் முத்துலட்சுமி கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம் - டாக்டர் தருமாம்பாள் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அது தொடர்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை பழனிசாமி அறிவாரா?
தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டது என்று அவர் மனதில் வைத்துச் சொல்வது மினி கிளினிக் ஆகும். பழனிசாமி நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும்... அது முறையாக அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டதா என்று? மினி கிளினிக் அமைப்பதற்காக பழனிசாமி போட்ட அரசு ஆணையிலேயே, இது தற்காலிகம் என்றும் ஓராண்டுக்குத்தான் என்றும் இருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக நானும் ஏதாவது செய்தேன் என்று காட்டுவதற்காக இந்த மினி கிளினிக்கை அவசர அவசரமாகத் திறந்தார்கள்.
இதற்காக மருத்துவர், செவிலியர், சுகாதாரப்பணியாளர் என யாரையும் புதிதாக வேலைக்கு எடுக்கவில்லை. பக்கத்து மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்து உட்கார வைத்தார்கள். இத்திட்டத்தை, சென்னையில், ராயபுரம், வியாசர்பாடி, மயிலாப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்று பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியில் மட்டும் 200 மினி கிளினிக்குகள் செயல்பட உள்ளதாகவும், 1,400 மினி கிளினிக்குகள் கிராமப்புறங்களிலும், 200 மினி கிளினிக்குகள் நகர்ப்புறங்களிலும் அமையப் போவதாகச் சொன்னார். சும்மா ஒப்புக்கு ஒரு இடத்தில் பச்சை வண்ணம் பூசி இதுதான் மினி கிளினிக் என்றார். அது ‘மினி’ தான். ஆனால் ‘கிளினிக்’ ஆ என்றால் இல்லை!
சென்னை சைதாப்பேட்டை பாரதி நகர் சுடுகாட்டின் ஒரு பகுதி அம்மா கிளினிக்காக மாற்றப்பட்டது. விருகம்பாக்கத்தில் சுடுகாட்டு காரிய மண்டபத்தில் அம்மா கிளினிக் அமைக்கப்பட்டது. இதுதான் பழனிசாமி தொடங்கிய திட்டங்கள் ஆகும். இதனைத்தான் தனது சாதனையாகச் சொல்லிக் கொள்கிறார்.
இப்படித்தான் ஆட்சி முடியும் போது இன்னொரு அறிவிப்பையும் பழனிசாமி அறிவித்தார். 1100 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் உங்கள் குறை அனைத்தும் தீரும் என்று சொன்னார். 1100 எண்ணுக்குப் போன் செய்யலாம் என்பது 19.1.2016 அன்று ஜெயலலிதா தொடங்கி வைத்த திட்டம். அது அப்படியே கிடப்பில் கிடந்தது. போன் வேலை செய்யவில்லை. இவரது நான்காண்டு ஆட்சியிலும் போன் வேலை செய்யவில்லை. இவர்தான் இப்போது ஆத்தூரில் பொய்ப்பூ சுத்துகிறார்.