முரசொலி தலையங்கம் (08-12-2022)
இந்தியாவின் தலைமை!
ஜி20 நாடுகளுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக உலகுக்கு பல நன்மைகளை உருவாக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9,10 ஆகிய நாட்களில் ஜி20 நாடுகளின் மாநாடு இந்தியாவில் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்தியா முழுமைக்கும் 200 கூட்டங்களை நடத்துவதற்கு ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. ஜி20 மாநாட்டுக்கான இந்தியாவின் உத்திகளை தீர்மானிப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடந்துள்ளது. அனைத்து மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டு தனது கருத்தைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
‘‘இந்தியாவின் பலத்தை உலகுக்கு காட்டுவதற்கான தனித்துவமான வாய்ப்பு இது” என்று இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்தியாவின் பலம் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
‘‘இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்கை ஆற்றவேண்டியுள்ளது. ஜி20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது.” என்று சொன்ன முதலமைச்சர் அவர்கள்..
‘‘அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமர் அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று பேசி இருக்கிறார்கள்.
இந்தியாவுக்கு தலைமை வகிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி உலகம் முழுக்க நாம் விதைக்க வேண்டிய தலைமைப் பண்புகள் என்பவை அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி ஆகியவைதான். இன்றைய உலகுக்குத் தேவை யானவை இவைதான்.
தனது உரையில் இதே கருத்தை இன்னும் விரிவாகச் சொல்லி இருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள். ‘‘1999இல் தெற்கு ஆசிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் ஜி.20 அமைக்கப்பட்டது. பணக்கார நாடுகள், நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கையினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் ஆரம்பத்தில் ஜி.7 நாடுகளாக இருந்தது. பின்னர் ஜி.20 நாடுகளாக விரிவடைந்தது” என்று சொன்ன யெச்சூரி, இந்தியப் பிரதமரின் சொற்களில் இருந்தே தனது கருத்தை விரிவுபடுத்தினார்.
‘ஒரே பூமி - ஒரே குடும்பம் -ஒரே எதிர்காலம்’ என்ற இலக்கை மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்து இருந்தார்கள். இதனை வைத்து விளக்கம் அளித்துள்ளார் யெச்சூரி.
‘‘ஒரே குடும்பம் என்பதை ஒருமைப்படுத்துதலை திணிப்பதாக பொருள் கொள்ளக் கூடாது. மாறாக உலகக் குடும்பம் என்பது சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் அனைத்து வேற்றுமைப் பண்புகளையும் சமமான முறையில் கருதக்கூடிய சமூகப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதை அங்கீகரித்திட வேண்டும். அத்தகைய உலகக் குடும்பம்தான் ஒவ்வொரு நாட்டிலும் நிறுவப்பட்டிருக்கிறது.
பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுப்பொருளின் நம்பகத்தன்மையே முக்கியமாக அமைய வேண்டும். நம் அரசமைப்புச்சட்டம் அனைவருக்கும் சமூக நீதி, அரசியல் நீதி மற்றும் பொருளாதார நீதி வழங்க வேண்டும் என்பதைத் தன் முகப்புரையில் பொறித்துள்ளது. இதனைத் தகர்ப்பதாக இந்தியாவில் சிலரது நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் ஆய்வுப்பொருள் உண்மையாக வேண்டுமானால், நாட்டில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தவறுகள் சரி செய்யப்பட வேண்டும். இந்திய அரசாங்கம் ஜி.20 நாடுகளின் அறிவிக்கப்பட்டுள்ள குறிக்கோள்களை நிறைவேற்றும் விதத்தில் செயல்பட வேண்டும்” என்று சீத்தாராம் யெச்சூரி பேசி இருக்கிறார்.
ஒரு காலம் இருந்தது.. மேற்குலகம் - தெற்கு உலகம் என பிரிந்து இருந்தது. ஆனால் இன்று அது மறைந்து வருகிறது. உலகில் பெருமளவுக்கு மேற்குலக நாடுகளின் குரல்களே எதிரொலித்து வரும் நிலையை மாற்றும் வகையில்-தெற்கத்திய நாடான இந்தியாவுக்கு இத்தகைய பெருமை கிடைத்திருக்கிறது.
உலகம் இரண்டு பிரிவாக. ரஷ்யா – அமெரிக்கா எனப் பிரிந்திருந்த காலம் இருந்தது. இன்று ஆதிக்க நாடுகளே கூட பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளால் அடங்கியே இருக்கின்றன. எனவே ஒற்றை ஆதிக்க நாடு என்பது இல்லை.
பணக்கார நாடுகள் – ஏழை நாடுகள் என்பது கூட வேறுபாட்டின் தன்மையாக இருந்தது. இன்று பணக்கார நாடுகள் பொருளாதாரச் சுழலில் சிக்கி இருப்பதைப் பார்க்கிறோம். ஏழை நாடுகள், தன்னிறைவு பெற்று வருவதையும் பார்க்கிறோம்.
போர் மட்டுமே தீர்வு என்ற சிந்தனை இன்று மெல்லக் குறைந்துவிட்டது. எந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் போர் என்பது பேரழிவு என்பதையே அனைத்து விதமான போர்களும் காட்டுகின்றன.
அடக்கி ஆளுதல் - எல்லையைக் காத்தல் மட்டுமே நாட்டுத் தலைமைகளின் வேலையாக ஒரு காலத்தில் கருதப்பட்டது. இன்று மக்களைக் காத்தல் என்பதே முன்னே நிற்கிறது.
அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் - போர்கள் - ஆயுதங்கள் – அணுச்சோதனைகள் - என்பதை விட சுற்றுச்சூழலும், புவி வெப்பமடைதலும், காலநிலை மாற்றமும், உணவுத் தட்டுப்பாடும், தண்ணீரின் தேவையும், பசியும், வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி நிற்கின்றன. இவை எந்த தனிநாட்டுக்குமான தனித்த பிரச்சினையாக இல்லை. அனைத்து நாடுகளின் பிரச்சினையாக மாறிவிட்டது. மேற்குலகம் - தெற்குலகம். மேலைநாடு – கீழை நாடு.. பணக்கார நாடு - ஏழை நாடு.. என அனைத்து நாடுகளின் பிரச்சினையாக இவை மாறிவிட்டன. இந்தச் சூழலில் உலகம் தனது போக்கை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
அது அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதியாக அமைய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஜி20 நாடுகளுக்கு மட்டுமல்ல, உலகுக்கு இத்தகைய விழுமியங்களைக் கொண்டு சேர்க்கும் நாடாக இந்தியா தலைமையேற்கும் தகுதியை அடைய இவையே கைகொடுக்கும்!