முரசொலி தலையங்கம் (17-11-2022)
‘தினமணி’யின் திருகு வேலை!
உயர்ஜாதி ‘பணக்காரர்களுக்கு’ இடஒதுக்கீடு வழங்கும் பா.ஜ.க.வின் வர்ணச் சலுகைக்கு எதிராக சமூகநீதியில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் போராடத் தொடங்கிய நிலையில் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத ‘தினமணி’ தனது திருகு வேலையைக் கட்டுரையாகத் தீட்டி இருக்கிறது.
தாங்கள் யாருக்காக -– யாருடைய நலனுக்காக பத்திரிக்கை நடத்துகிறோம் என்பதை ‘தினமணி’ தினந்தோறும் காட்டிக் கொள்வது குறித்து நமக்கு ஆட்சேபணை இல்லை. அவர்கள் அப்படி எழுதவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
ஆனால், தனது திருகு வேலைக்குத் தமிழினத் தலைவர் – - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை ஆதாரமாகக் காட்டுவது தான் - – ஆரியத்திருகுதாளம் ஆகும்.
‘இப்படித்தான் வந்தது இடஒதுக்கீடு’ என்ற தலைப்பில் எஸ்.ஜி.சூர்யா என்பவர் ‘தினமணி’ இதழில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். ‘பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கலாம்’ என்பதை எம்.ஜி.ஆர்.தான் தொடங்கினார் என்றும், ‘இதனை முதலில் எதிர்த்த கலைஞர் அவர்கள், பின்னர் வரவேற்றார் ‘ -– என்கிறார் ‘தினமணி’ கட்டுரையாளர். ‘’சமூகநீதி என்று கூறிக் கொண்டு வரலாறு தெரியாமல் அரசியல் செய்யும் நோக்கத்தில் தி.மு.க. இதனை இப்போது எதிர்க்கிறது’’ என்று தி.மு.க. மீது வன்மமாகப் பாய்ந்துள்ளார் அந்தக் கட்டுரையாளர்.
இதன் மூலமாக எம்.ஜி.ஆரின் பொருளாதார இடஒதுக்கீட்டை தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டது போன்ற திசை திருப்பலை, ‘தினமணி’யும், அந்தக் கட்டுரையாளரும் பார்த்துள்ளார்கள்.
சமூகநீதி வேறு –- பொருளாதார உதவிகள் வேறு என்பதை முதலில் பிரித்து உணர்ந்துகொள்ள வேண்டும். சமூக நீதி என்பது சமூக ரீதியாகவும் – - கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களுக்குச் செய்து தரப்படும் வகுப்புரிமைதான் சமூக நீதியாகும்.
பொருளாதார உதவிகள் என்பவை இலவசக் கல்வி, கட்டணம் கிடையாது, விடுதிக் கட்டணம் இல்லை என்பது போன்றவை. இவை இரண்டையும் பிரித்துப் பார்த்து எழுத வேண்டும். பிரித்துப் பார்த்துச் சிந்திக்க வேண்டும்.
இதனைத்தான் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். ‘‘சம்பளச் சலுகை –- இலவசக் கல்வி – - பிற உதவிகளை முன்னேறிய வகுப்பு உள்பட எல்லா வகுப்பிலுமுள்ள ஏழை மாணவர்களுக்கு வருமான அடிப்படையில் வழங்குவதை கழகம் எதிர்க்கவில்லை. அதை வரவேற்கிறது” (4.8.1979 முரசொலி) என்று தலைவர் கலைஞர் அவர்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள்.
‘‘பொருளாதார அடிப்படையில் கல்விச் சலுகைகளை வழங்கலாம். எல்லாச் சாதி வேறுபாடுகளும் ஒழிந்து ஒன்றே குலம் என்ற நிலை ஏற்படும் வரையில் வகுப்பு அடிப்படையில் வழங்கப்படும் உரிமைகளில் பொருளாதார அளவுகோல் கூடாது. ஏற்கனவே இருந்த நிலையே நீடிக்க வேண்டும்” என்று கலைஞர் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
அப்படி ஏழைகள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் ‘எல்லாச் சாதி ஏழைகளுக்கும் தனியாக இடஒதுக்கீடு செய்யலாம்’ என்று கர்நாடகாவில் இருந்த தனியாக 15 சதவிகிதம் என்ற இடஒதுக்கீட்டை சுட்டிக் காட்டினார் கலைஞர் அவர்கள்.
இப்போது பா.ஜ.க. அரசு செய்துள்ள இடஒதுக்கீடு என்பது, ‘உயர்ஜாதி’ ஏழைகளுக்கான வர்ணஜாதி இடஒதுக்கீடு ஆகும். இதனைச் சொல்லவில்லை தலைவர் கலைஞர் அவர்கள். ‘அனைத்து ஏழைகளுக்கும் தனியாக இடஒதுக்கீடு’ என்று சொன்னார். உயர்ஜாதிக்காக மட்டும் ஒரு இடஒதுக்கீட்டை உருவாக்கிக் கொண்டு, இதனைக் கலைஞர் அவர்கள் ஆதரித்தார் என்று சுட்டிக் காட்டுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஆகும்.
‘‘தொழில் கல்வியில் சேருதல், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் நிர்ணயிக்கப்படும் இடஒதுக்கீடு என்பது வேறு. சம்பளச் சலுகைகளை மாணவர்களுக்கு அளிப்பது என்பது வேறு” என்றும் தெளிவுபடுத்தினார் கலைஞர் அவர்கள்.
‘‘பிற்படுத்தப்பட்டோரை நசுக்கும் வருமான வரம்பு ஆணையை உடனே திரும்பப் பெறாவிட்டால் 1965 புரட்சியைவிட பெரும் புரட்சியைச் சந்திக்க வேண்டி வரும்” என்று கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள். (7.8.1979 முரசொலி) ‘பிற்படுத்தப்பட்டவர்களுக்காகத் தரப்படும் இடஒதுக்கீட்டில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு காட்டக் கூடாது’ என்று மதுரையில் பேட்டி அளித்தார், தலைவர் கலைஞர் அவர்கள்.
‘8 ஆயிரத்து 999 ரூபாய் வாங்குபவர் பிற்படுத்தப்பட்டவர் 9 ஆயிரத்து 1 ரூபாய் வாங்குபவர் முற்பட்டவரா?’ என்று கேள்வி எழுப்பினார் கலைஞர் அவர்கள். ‘மழை பெய்யாவிட்டால் ஒருவன் பிற்படுத்தப்பட்டவன், மழை பெய்து நிலம் செழித்துவிட்டால் முற்பட்டவரா?’ என்றும் கேட்டார்.
‘‘நாங்கள் கவலைப்படுவதெல்லாம் அஸ்திவாரத்தில் கைவைத்து விட்டுஅடித்தளத்தை உருக்குலைத்துவிட்டு -வகுப்புரிமைக் கொள்கைகளுக்கு வேட்டு வைத்துவிட்டு பார் பார் ஏழைகளுக்கு உதவுகிறேன் பார் என்பது பசப்புப் பிரச்சாரமே” என்று நெய்வேலியில் பேசிய கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள். (12.8.1979 முரசொலி)
‘‘நாலரைக் கோடித் தமிழர் வாழ்வை நாசமாக்கும் வருமான வரம்பு உத்தரவைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் நாங்கள் நாசமானாலும் அஞ்சோம். சாதிகள் ஒழியும் வரை வகுப்புரிமை தேவை. வகுப்புகள் இருக்கிற வரையில் வகுப்புரிமை வேண்டும்” என்று கும்மிடிப்பூண்டியில் பேசினார் கலைஞர்.(13.8.1979 முரசொலி)
எம்.ஜி.ஆரின் உத்தரவு பற்றி கலைஞர் சொன்னதன் சுருக்கம் இதுதான்: ‘‘ஒரு கோமாளித்தனமான – விசித்திரமான - வேடிக்கையான – ஆனால் வேதனையான உத்தரவு” ( 31.8.1979 முரசொலி) இத்தகைய கலைஞரது சொல்லைத்தான் திசை திருப்புகிறார்கள்.
ஏழைகளுக்கு உதவிகள் செய்வதை கலைஞர் அவர்களும் மறுக்கவில்லை. இன்றைய முதல்வர் அவர்களும் மறுக்கவில்லை. ‘‘உயர்ஜாதி ஏழைகளுக்கு உதவி செய்வதைத் தடுப்பதாக யாரும் இதனைக் கருதத் தேவையில்லை. ஏழைகளுக்கான எந்தத் திட்டத்தையும் நாம் தடுக்க மாட்டோம். ஆனால் சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையை மடைமாற்றும் திருகுவேலையை இடஒதுக்கீடு அளவுகோலாக மாற்றக் கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள் ஆகும்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
10 சதவிகித இடஒதுக்கீடு என்பது அனைத்து ஏழைகளுக்குமானது அல்ல. அனைத்து ஜாதி ஏழைகளுக்குமானதும் அல்ல. இது உயர்ஜாதியினருக்கானது மட்டும்தான். அந்த உயர்ஜாதி ஏழைகளையும் வஞ்சிக்கும் திட்டம் இது. இதனை உயர்ஜாதியில் இருக்கும் ஏழைகளும் எதிர்க்கவே வேண்டும். இதனை எதிர்ப்பதே உண்மையான சமூக நீதியாகும்.