முரசொலி தலையங்கம் (15-10-2022)
பா.ஜ.க.வின் பாதாளப் பொருளாதாரம்!
பா.ஜ.க.வின் பொருளாதாரக் கொள்கை என்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதாளத்தில் இறக்குவதாக இருக்கிறது என்பதைத்தான் இரண்டு நாட்களாக வெளியாகும் தகவல்கள் அடிப்படையில் தெரிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய இரங்கத்தக்க நிலையில் இந்தியப் பொருளாதாரம் போய்க்கொண்டு இருப்பதைப் பற்றிய எந்தக் கூச்சமும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
‘பத்தாவது இடத்தில் இருந்தது இந்தியப் பொருளாதாரம், அதனை ஐந்தாவது இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டோம்’ என்று பீற்றிக் கொள்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் போது பத்தாவது இடத்தில் இல்லை. ஐந்தாவது இடத்தில் தான் இருந்தது. அது அப்படியேதான் இருக்கிறது.
‘நான் இரண்டாவது பரிசு வாங்கி இருக்கிறேன்’ என்று பாட்டியிடம் சொன்னானாம் பேரன். ‘எத்தனை பேர் ஓடினீர்கள்?’ என்று கேட்டார் பாட்டி. ‘ரெண்டு பேர்தான் ஓடினோம்’ என்று சொல்லிவிட்டு ஓடினானாம் பேரன். அப்படி இருக்கிறது இவர்களது பொருளாதாரச் சாதனைகள் எல்லாம்!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.8 சதவிகிதமாக சர்வதேசச் செலாவணி நிதியமான ஐ.எம்.எஃப். குறைத்துவிட்டது. இது கடந்த ஜூலை மாதக் கணிப்புடன் ஒப்பிடும்போது 0.6 சதவிகிதம் குறைவாகும். 2021 – -22 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவிகிதமாக இருந்தது. அதாவது 8.7 சதவிகிதத்தில் இருந்து 6.8 சதவிகிதமாகக் குறையப் போகிறது இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்று கணித்துள்ளார்கள்.
இன்னொரு பக்கத்தில் சில்லறைப் பணவீக்கமானது அதிகரித்து வருகிறது. பணவீக்கமானது 6 சதவிகிதத்துக்குள் இருந்தால் மட்டுமே மக்களால் அனைத்துப் பொருள்களையும் சரியான விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்த முடியும். நாட்டின் பணவீக்கம் 2 முதல் 6 சதவிகிதத்துக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால் கடந்த ஒன்பது மாதங்களாக இந்தியாவில் பணவீக்கமானது 6 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. கடந்த மாதம் எடுக்கப்பட்ட புள்ளிவிபத்தின்படி சில்லறை விலை பணவீக்கமானது 7.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ( 2021) இதே செப்டம்பர் மாதம் சில்லறைப் பணவீக்கமானது 4.3 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இதனை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் எத்தகைய உயர்வை அடைந்துள்ளது என்பதை உணரலாம்.
இந்தியா முழுமைக்கும் (இதில் தமிழகம் விதிவிலக்கு) உணவுப் பொருள்களின் விலை அதிகமாகி வருகிறது. இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ‘தினமணி’ இதழ், ‘’இந்தியாவில் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. உற்பத்தித் துறை மற்றும் சுரங்கத் துறையில் ஏற்பட்ட சுணக்கமே இதற்குக் காரணமாகும்” என்று சொல்லி இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளாக, கொரோனாவைக் காரணமாகக் காட்டி வந்தார்கள். இப்போது சொல்வதற்கு பா.ஜ.க.விடம் ஏதுமில்லை. மூலப்பொருள்களின் விலை உயர்வு, இடுபொருள்களின் செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் சிறு – குறு நடுத்தர நிறுவனங்கள் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றன. கடந்த 11 மாதங்களில் உற்பத்தி நடவடிக்கைகள் இந்திய அளவில் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.
இது ஏதோ பத்திரிக்கைச் செய்தி மட்டுமல்ல, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே ஒப்புக் கொண்ட உண்மையாகும்.
‘’எரிசக்தி, உரம், உணவுப் பொருள்கள் மீதான விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை இந்திய அரசு மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகிறது” என்று அமெரிக்காவில் அளித்த பேட்டியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். பணவீக்கமானது கவலை அளிக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார். அதனைச் சரிசெய்வதாக வருங்கால நிதிநிலை அறிக்கை அமையும் என்றும் சொல்லி இருக்கிறார். ‘இந்தியப் பொருளாதாரம் சந்தித்துவரும் மிகப்பெரிய பிரச்னைகளில் எரிசக்தி விலை உயர்வும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது’ என்றும் சொல்லி இருக்கிறார். ‘விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்பதையும் ஒப்புக் கொண்டு இருக்கிறார். அதாவது, இந்தியாவில் நாம் சொல்லி வருவதை –- அமெரிக்காவில் ஒப்புக் கொண்டுள்ளார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
‘’இந்தியாவில் உள்ள சில ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இடம் பெயர்வதாக நானும் கேள்விப்பட்டேன். அவர்கள் அரசுடன் பேசத் தயாராக இருந்தால், அவர்களுடன் பேச்சு நடத்தி, அவர்களது கவலைகளைத் தீர்த்து, அவர்களை இந்தியாவில் செயல்பட வைப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது” என்றும் சொல்லி இருக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதாவது இந்தியா பற்றிய உண்மைகள் அமெரிக்காவில் வைத்து வெளியாகி உள்ளது.
இந்தியாவில் இதனை நாம் சொன்னால் தேசவிரோதிகள். அமெரிக்காவில் போய் அவர்கள் சொன்னால் தேசபக்தர்கள். இவர்களது தேசபக்தி புல்லரிக்க வைக்கிறது.
பணவீக்கம் அதிகரிப்பு, - ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஆகிய இரண்டும் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதாளத்துக்குத் தள்ளி உள்ளது. இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது பா.ஜ.க. அரசே! ஆனால் அவர்களுக்கு இதைவிடப் பெரிய வேலைகள் நிறைய இருக்கின்றன.