முரசொலி தலையங்கம் (04-10-2022)
மதவாத நச்சு சக்திகள் :
வாழ்க நீ எம்மான்!
அண்ணல் காந்தியடிகள் மறைந்தபோது - ‘தென்னாட்டுக் காந்தி’ என்று போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது ‘திராவிட நாடு’ இதழில் இப்படி எழுதினார்கள்:
“முன்பு, ‘ இந்தியா என்றோர் நாடுண்டு, அங்கு ஏலம் கிராம்பு பெறு வதுண்டு, பொன்னும் பொருளும் மிக உண்டு, போக்கறியாதார் நிரம்ப உண்டு’ என்ற அளவில் பதினாறாம் நூற்றாண்டிலே உலகம் அறிந்திருந்தது.
பிறகு படிப்படியாக இந்தியா பிரிட்டிஷ் பிடியில் சிக்கிவிட்டது. அப்போது, ‘இந்தியா என்றோர் நாடுண்டு. அது ஆங்கிலேயருக்கு நல்ல வேட்டைக்காடு’ என்று உலகம், இழித்தும் பழித்தும், பேசிக்கொண்டது. திலகர் காலத்திலே விடிவெள்ளிதோன்றுவது போல, விடுதலைக்கு முயற்சி செய்யப்பட்டது என்ற போதிலும் காந்தியார் காங்கிரசுக்குள் புகுந்த பிறகே, ‘இந்தியா என்றோர் நாடுண்டு, அங்கு விழிப்பும் எழுச்சியும் உண்டு’ என்று உலகம் அறிந்து கொள்ள முடிந்தது.
காந்தியாரின் புகழொளி மூலமே உலகம் இந்தியாவைக் கண்டுவந்தது. தன்னலமற்ற, விளைவு பற்றிய கவலையற்ற, போராட்ட மனோபாவத்தை நாட்டிலே காந்தியாரால்தான் உண்டாக்க முடிந்தது. அவருடைய உருவமோ, உடலமைப்போ, பேச்சோ, நடவடிக்கையோ, ராணுவ மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடிய விதமாக இல்லை ஆனால் அவரால், ராணுவங்களையும் எதிர்த்து நிற்கக்கூடிய வீரஉணர்ச்சியை இலட்சக்கணக்கானவர்களுக்கு உண்டாக்க முடிந்தது. காந்தியாரின் புகழொளியை அல்ல, அவரது உழைத்து அலுத்த உடலைத் தான் வெறியன் சுட்டு வீழ்த்தினான்” - என்று கண்ணீர் தமிழால் தூரிகை மூலமாக துயரத்தை வடித்தார் பேரறிஞர் பெருந்தகை அவர்கள்.
அத்தகைய உத்தமர் காந்தி அடிகள் பிறந்தநாள் அக்டோபர் 2. தனக்கு இயற்கை மரணம் ஏற்படாது என்பதை உணர்ந்தே வாழ்ந்தார் அவர். ‘இனி யாராவது என்னைச் சுட்டால் உண்மையான காந்தியைக் கொல்ல முடியாது’ என்று சொல்லி வந்தவர் அவர்.
இந்திய நாட்டின் அரசியல் விடுதலை மட்டுமே அவரது இறுதி இலக்காக இல்லை. பிரிட்டிஷாரைத் துரத்துவது மட்டுமே அவரது நோக்கு. மதவேறுபாடு கள், மாறுபாடுகள் அற்ற இந்தியர்களை உருவாக்குவது அவரது நோக்கமாக இருந்தது. அதனால்தான் இந்தியா விடுதலை பெற்றபோது அதிகாரம் பொருந்திய டெல்லியில் இருக்காமல், பிரிவினையால் மக்கள் மோதிக் கொண்ட
நவகாளியில் இருந்தார் அவர். தனது காலத்தில் இந்து – முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்த முடியவில்லையே என்பதுதான் அவரது வருத்தம்.
“எனது மரணம் நிகழும் போது எனது நினைவிடத்தில், ‘ இவர் ஆகமட்டும் முயன்றார் - ஆனால் படுதோல்வியை அடைந்தார்’ என்று எழுதுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போனார் அண்ணல். அவரை ‘அடிகள்’ என்று முதலில் எழுதியவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள். அடிகள் மறைந்தபோது அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ காந்தி அடிகள் தமது இலட்சியமாகக் கொண்டிருந்த இந்து - முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்ட உறுதி கொள்வோமாக’ என்று எழுதினார்.
அத்தகைய இந்து - முஸ்லிம் ஒற்றுமையை, இந்திய ஒற்றுமையை, இந்திய ஒருமைப்பாட்டு ஒற்றுமையை சிதைக்கும் காரியங்களை சில நச்சு சக்திகள் நாளும் செய்து வருகின்றன. இந்திய அளவில் பா.ஜ.க., ஆட்சி அமைத்த பிறகு இத்தகைய சக்திகள் அதிகமான ஆட்டத்தைப் போட்டு வருகின்றன. இந்தியா முழுமைக்குமான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்ற காந்தியின் புகழைச் சிதைப்பதன் மூலமாக இந்தியத்தின் பன்மைத் தன்மையை சிதைக்க முயற்சிக்கிறார்கள். காந்தியின் பிறந்தநாளை ‘சுவச்ச பாரத் அபியான்’ என மாற்றியதில் இருக்கிறது இவர்களது அழித்தல் வேலைகள். இது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதே போன்ற காரியத்தை தான் அக்டோபர் 2 ஆம் நாள் ஊர்வலம் நடத்துவதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு திசை திருப்பப் பார்த்தது. அதனை தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை.
‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பார்த்து தி.மு.க. அரசு பயப்படுகிறது’ என்று சில ஜென்மங்கள் சொல்லித் திரிகிறது. ஆர்.எஸ்.எஸை பார்த்து பா.ஜ.க. தான் பயப்பட வேண்டும். ‘ஒரே ஒரு நபரால் இந்தியாவைக் காப்பாற்றமுடியாது’ என்று மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசி வருபவர் மோகன் பகவத் தான். மற்றவர்கள் பயப்பட எதுவுமில்லை.
ஒன்றிய அரசு ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ உள்ளிட்ட சில அமைப்புகளைத் தடை செய்துள்ள கொந்தளிப்பான நேரம் இது. இதன் மூலமாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. இது பா.ஜ.க. உள்ளிட்ட அவர்களைப் போன்ற அமைப்புகள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி இருந்தது. நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக, ‘தினமலர்’ நாளேடு செப்டம்பர் 29 அன்று பெட்டிச் செய்தியை வெளியிட்டுள்ளது. ‘ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீட்டில் இருக்கும் போதும், வெளியில் செல்லும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக ‘தினமலர்’ செய்தி சொல்கிறது. தனது கட்சிக்காரர்களுக்கு அண்ணாமலை அனுப்பிய வாட்ஸ் அப் செய்தியிலும் இது இருக்கிறது. ‘யாரும் வெளியில் செல்ல வேண்டாம்’ என்று அதில் இருக்கிறது. இப்படி பதற்றமான காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஊர்வலம் நடத்த எப்படி அனுமதி தர முடியும்? அதுவும் காந்தி பிறந்தநாளிலேயே?
சட்டம் ஒழுங்கு – பிரச்சினை மட்டுமல்ல இது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம் தவறானது என்று தமிழ்நாடு காவல் துறை சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அவர்கள் உயர்நீதிமன்றத்தில் சொன்னார்கள். ‘’ காந்திக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? ‘ என்று கேட்டார் அவர். ஏனென்றால், காந்தியார் படுகொலையைத் தொடந்து ( 1948) தடை செய்யப் பட்ட அமைப்பும் அது. ‘தாங்கள் சொல்லிக் கொள்வதைப் போல நடந்து கொள்ளா தவர்கள்’ என்று தடையாணையிலேயே பேர் வாங்கிய அமைப்பு இது.
ஜோதிராவ் பூலே, சாகு மகாராஜ் போன்றோரால் தலித், பிற்படுத்தப்பட்டோர் எழுச்சியானது மராட்டியத்தில் தோன்றிய போது இந்து, முஸ்லீம் ஒற்றுமைக்கான கிலாபத் முயற்சிகள் காந்தியால் உருவானபோது அதனைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் அது. கூட்டுத் தேசிய ஒற்றுமைகளுக்கு எதிரான வெறுப்புணர்வை விதைப்பது அதனுடைய நோக்கம் ஆகும்.
அதனால்தான் இவர்களுக்கு மரணத்துக்குப் பிறகும் காந்தியார் மிரட்சியை ஏற்படுத்தி வருகிறார்.
‘இனி யாராவது என்னைச் சுட்டால், உண்மையான காந்தியைக் கொல்ல முடியாது’ என்றார் அடிகள். உண்மையான காந்தி வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.
வாழ்க நீ எம்மான்!