முரசொலி தலையங்கம்

“கூட்டாட்சியை உருவாக்க வலுவான கூட்டணிகளால்தான் முடியும்” : கூட்டணி முக்கியத்துவத்தை வலியுறுத்திய முரசொலி!

கூட்டாட்சியை இந்தியா முழுமைக்கும் உருவாக்குவது என்பது வலுவான கூட்டணிகளால்தான் முடியும் என்பதையும் பல ஆண்டுகளாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

“கூட்டாட்சியை உருவாக்க வலுவான கூட்டணிகளால்தான் முடியும்” : கூட்டணி முக்கியத்துவத்தை வலியுறுத்திய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கூட்டாட்சியும் கூட்டணியும்!

திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீட்டியுள்ள மடலில், அகில இந்தியாவுக்குமான ஒரு கருத்தை ஆணித்தரமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

“மாநில உரிமைகளைக் காப்பதற்கும் நம் மக்களுக்கான திட்டங்களைத் தடையின்றி நடத்துவதற்கும் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஒன்றிய அரசு அமைந்தாக வேண்டும். அதற்கான களமாக நாடாளுமன்றத் தேர்தல் அமையவிருக்கிறது.

அந்தக் களத்திற்கு நாம் இப்போதே ஆயத்தமாக வேண்டும். மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் இரட்டை ஆட்சி முறைக்கு முடிவு கட்டிட, மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டிட, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பாற்றிட நாடு முழுமைக்கும் 'திராவிட மாடல்' தேவைப்படுகிறது.

“கூட்டாட்சியை உருவாக்க வலுவான கூட்டணிகளால்தான் முடியும்” : கூட்டணி முக்கியத்துவத்தை வலியுறுத்திய முரசொலி!

அதற்கான முழக்கமாகத்தான் 'நாற்பதும் நமதே - நாடும் நமதே' என்று விருதுநகர் மேடையில் உங்களின் குரலாக நான் முழங்கினேன்” என்று அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள். இதற்கான முழக்கத்தை விருதுநகர் முப்பெரும் விழா மேடையிலேயே எடுத்தியம்பி விட்டார் தலைவர்.

''தமிழகத்தை திராவிட மாடல் கொள்கைகளோடு வளப்படுத்தும் நமக்கு இந்தியா முழுமைக்குமான சில கடமைகள் இருக்கின்றன. கூட்டாட்சியை, - மாநில, சுயாட்சியை, மதச்சார்பின்மையை, - சமத்துவத்தை, - சகோதரத்துவத்தை, சமதர்மத்தை,- சமூக நீதியை - இந்தியா முழுமைக்கும் நாம் நிலைநாட்ட வேண்டும். வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை ஆகும். வலிமையான - அதிகாரம் பொருந்திய - தன்னிறைவு பெற்ற மாநிலமாக நாம் இருந்தால் மட்டும் போதாது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அப்படி ஆகவேண்டும். மாநிலங்கள் வலிமை அடைவதன் மூலமாக வலிமையான கூட்டாட்சி இந்தியாவை உருவாக்க முடியும். மாநிலங்கள் சுயாட்சி உரிமை கொண்டவையாக இருக்க வேண்டும். இந்திய அரசானது கூட்டாட்சி தத்துவம் கொண்டதாகச் செயல்பட வேண்டும்.- இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கொள்கை ஆகும்." என்பது அவரது அழுத்தம் திருத்தமான நிலைப்பாடாக அமைந்துள்ளது.

“கூட்டாட்சியை உருவாக்க வலுவான கூட்டணிகளால்தான் முடியும்” : கூட்டணி முக்கியத்துவத்தை வலியுறுத்திய முரசொலி!

கூட்டாட்சித் தத்துவம் என்கிற முழக்கத்தை திராவிட முன்னேற்றக் கழகம் தனது அரசியல் முழக்கமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதன்முதலாகப் போட்டியிட்ட 1957 தேர்தல் அறிக்கையில் இருந்து இது வலியுறுத்தப்பட்டு வருகிறது. “இன்றைய அமைப்பில் அதிகாரங்களும், வருவாய்களும் மத்திய ஆட்சிக்கே, பெரிதும் அளிக்கப்பட்டுள்ளன. மாநில ஆட்சியில் வருவாய் பெருக வழியின்றியும், சாதாரணப் பிரச்சினைகளில் கூட முடிவெடுக்க முடியாமலும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாநிலங்களில் அதிகார வரம்பும், வரி விதிப்பு உரிமைகளும் வெகுவாக அதிகரித்து, மத்திய ஆட்சியில் அதிகாரங்களுக்கும் வரிவிதிப்பு உரிமைகளுக்கும் வரம்பு கட்டப்படுதல் வேண்டும்” என்று சொல்லப்பட்டுள்ளது.

இதைத்தான் அனைத்து நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகளிலும் கழகம் சொல்லி வருகிறது. இத்தகைய கூட்டாட்சியை இந்தியா முழுமைக்கும் உருவாக்குவது என்பது வலுவான கூட்டணிகளால்தான் முடியும் என்பதையும் பல ஆண்டுகளாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

'தமிழகத்தில் அடைந்த வெற்றி என்பது உடன்பாட்டுச் சிந்தனைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி வைத்துச் செயல்படுவதன் மூலமாகத்தான். அதே போல அகில இந்திய அளவிலும் அமைய வேண்டும்' என்பதை சேலத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசி இருக்கிறார்கள். இதனை அகில இந்தியக் கட்சிகள் அனைத்தும் உணர்ந்தாக வேண்டும்.

“கூட்டாட்சியை உருவாக்க வலுவான கூட்டணிகளால்தான் முடியும்” : கூட்டணி முக்கியத்துவத்தை வலியுறுத்திய முரசொலி!

இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் செயற்குழுக் கூட்டம் முன்மொழிந்திருக்கிறது. 'இடது மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை ஒருமுகப்படுத்திட' அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். “இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திடவும், ஜனநாயகத்தைப் பாதுகாத்திடவும், மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகளைப் பாதுகாத்திடவும், இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தைப் பாதுகாத்திடவும், அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொள்வோம்” என்று அக்கட்சி தீர்மானித்துள்ளது.

தத்துவம் எவ்வளவு வலிமையானதாக இருக்கிறதோ, அதேபோல அதற்கான திட்டமிடுதலும், வழிமுறையும் வலிமையானதாக இருக்க வேண்டும். வலிமையான தத்துவம் மட்டுமே, வெற்றியைத் தந்து விடாது. வலிமையான வழிமுறையும் மிகமிக முக்கியமானது ஆகும். அத்தகைய வழிமுறையை ஜனநாயக சக்திகள் உருவாக்க வேண்டும். அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும். கூட்டணியின் இலக்கானது கூட்டாட்சியாக அமையுமானால் வேறுபாடுகளோ, மாறுபாடுகளோ வராது.

1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முயற்சிகளில் ஈடுபடும் போது, வாக்குகள் சிந்தக் கூடாது, சிதறக் கூடாது என்பதை மட்டுமே மனதில் வைத்து முடிவுகள் எடுத்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள். "கரும்புச் சாறு பிழிகின்ற தொழிலாளி - ஒரு சொட்டு கூட இல்லாமல் இயந்திரத்தில் பிழிந்தெடுப்பதைப் போல நான் பிழிந்து எடுத்துச் சேர்த்துவிட்டேன்” என்று பேரறிஞர் பெருந்தகை சொன்னார். அத்தகைய கூட்டணி அகில இந்திய அளவில் அமைய வேண்டும். கூட்டாட்சி அமைய முதலில் அடிப்படையானது கூட்டணிதான்!

banner

Related Stories

Related Stories