முரசொலி தலையங்கம் (19-09-2022)
மண்டைச் சுரப்பை உலகு தொழும்!
திருச்சிக்கு அருகே ‘பெரியார் உலகம்’ அமைய இருக்கிறது. அடிக்கல் நாட்டி இருக்கிறார் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் முயற்சியால் இது உருவாக இருக்கிறது.
தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்தவர் முதலமைச்சர் அவர்கள். பெரியாரின் சிந்தனைகளை உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கத் திட்டம் தீட்டி இருப்பவர் முதலமைச்சர் அவர்கள். எனவே, ‘பெரியார் உலகம்’ அமைப்புக்கு அடிக்கல் நாட்ட அனைத்துத் தகுதியும் அவருக்கு உண்டு.
‘’தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கியது பெரியார் திடல். மானமிகு ஆசிரியர் அவர்கள் உருவாக்க இருப்பது பெரியார் உலகம். உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் சீர்திருத்த இயக்கங்கள், பகுத்தறிவு இயக்கங்கள், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பெரியார் சிந்தனைகளைத் தேடித் தேடிப் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால், தந்தை பெரியார் ‘உலகத் தலைவர்’ என்பதை, உலகம் இன்றைய தினம் ஏற்றுக் கொண்டுள்ளது” என்று முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருப்பது முழு உண்மையாகும்.
டெல்லி ஜலஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ‘பெரியார் விழா’ கொண்டாடப்பட்டுள்ளது. கேரளாவில் கொண்டாடப் பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலங்களிலும் சில இடங்களில் கொண்டாடப்பட்டுள்ளது.
‘பெரியார் ஈ.வெ.ராமசாமி : பாரதத்தின் வால்டேர்’ (Periyar E.V. Ramasami : Bharat Ke Voltaire ) - என்ற தலைப்பில் பெரியாரைப் பற்றி இந்தியில் ஒரு புத்தகம் வந்துள்ளது. ஓம் பிரகாஷ் காஷ்யப் என்பவர் எழுதியிருக்கிறார். சேது பிரகாசம் என்கிற பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூலின் மொத்தப் பக்கங்கள் 608 பக்கங்கள். ஜப்பானிய மொழியில் இரண்டு புத்தகங்கள் வெளியாகி உள்ளது. இவை அனைத்தும் நமக்குக் காட்டுவது, பெரியாரின் தத்துவங்கள் உலகளாவியவை என்பதைத்தான்.
தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால் அவர் தமிழர்களுக்கு மட்டுமான தலைவர் அல்ல;- இந்தியாவுக்கு மட்டுமான தலைவர் அல்ல; - உலகம் முழுமைக்குமான தலைவர்தான் தந்தை பெரியார் அவர்கள். அவர் முன்மொழிந்த கொள்கைகள் அனைத்தும் அனைத்து நாட்டுக்கும்-, அனைத்து மக்களுக்கும் பொதுவான சிந்தனைகள் ஆகும்.
* பெரியாரியம் என்பது மனிதனை மனிதனாக மதிப்பது. இந்தியாவில் ஜாதி வேற்றுமை இருக்கிறது என்றால், சில அயல்நாடுகளில் இருப்பது நிற வேற்றுமை. உலகம் முழுவதும் நிறத்தின்பேரால் ஒடுக்கப்பட்ட அனை வருக்குமான விடிவெள்ளியாக தந்தை பெரியார் தெரிகிறார். எனவே அவரது தத்துவம் ‘உலகப் பொதுமறை’ ஆகும்.
* ‘ஆணாதிக்கம்’ என்பது உலகம் முழுவதும் இருக்கிறது. இத்தகைய ஆணாதிக்கச் சிந்தனையை ஒழித்து பெண்ணுரிமைச் சிந்தனையை விதைத்தவர் பெரியார். எனவே, விடுதலை தேடும் பெண்களுக்கு விடிவெள்ளியாகத் தெரிகிறார் தந்தை பெரியார். அந்த வகையில் அவரது தத்துவம் ஒளிவிளக்காக இருக்கிறது.
* இன்றைக்கு சுய முன்னேற்றப் புத்தகங்கள்தான் பல லட்சம் பிரதிகள் விற்கின்றன. உலகம் முழுக்க உள்ள எழுத்தாளர்களில், சுய முன்னேற்ற எழுத்தாளர்கள்தான் கோடிகளில் சம்பாதிக்கக் கூடியவர்கள். இவர்கள் சொல்வது அனைத்தும் ஒன்றே ஒன்று தான். ‘மனிதனே, - நீ உன்னை நம்பு’ என்பதுதான் அவர்கள் சொல்வது. இதனைத் தான் 100 ஆண்டுகளாக தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். உன்னால்தான் முடியும் – ‘உன்னால் மட்டும்தான் முடியும்’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொன்ன சுய முன்னேற்றக்காரர்தான் தந்தை பெரியார். அவரது பேச்சுகளின் அடிநாதம் என்பது self development கருத்துகள் தான்.
* ‘’பொதுமக்களின் சுயமரியாதைக்கும் உரிமைக்கும் விடுதலைக்கும் ஆபத்தானது எது என்று எதைக் கருதினாலும் அதனை அழிக்க நான் பின்வாங்க மாட்டேன்’’என்று சொல்லி, அதன்படியே நடந்தவர் பெரியார்.
* ‘யாரிடமும் யாரும் பேதம் பார்க்காதீர்கள்’ என்று சொன்னார். இது உலகத்துக்கே பொதுவானது தானே!
* ‘மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ; அதே போல, நீங்கள் மற்றவர்களிடம் நடந்துகொள்ளுங்கள். இதுதான் பொது ஒழுக்கம்’ என்றார்.
அதனால்தான் இன்று உலகம் அவரை உற்றுக் கவனிக்கிறது. “எனக்கு எந்தப் பற்றும் இல்லை, மனிதப் பற்று மட்டுமே உண்டு” என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். அவர் சொன்ன தத்துவங்களை வரிசைப்படுத்திப் பாருங்கள்.
1. சுயமரியாதை - -self -respect
2. பகுத்தறிவு - rationality
3. சமதர்மம் - socialism
4. சமத்துவம் - equality
5. மானுடப்பற்று - Humanism
6. இரத்த பேதமில்லை - Non- discrimination based on blood.
7. பால் பேதமில்லை – Non -discrimination based on Gender.
8. சுய முன்னேற்றம் - self development
9. பெண்கள் முன்னேற்றம் - women empowerment
10. சமூக நீதி -social justice
11. மதச்சார்பற்ற அரசியல் - secular politics
12. அறிவியல் மனப்பான்மை - scientific temper
- – இவைதான் பெரியாரியத்தின் அடிப்படை. இவை உலகம் முழுமைக்குமான தத்துவங்கள்தான். பெரியாரின் கல்வெட்டில் இருப்பவை மட்டுமே முழுமையான பெரியார் அல்ல. ‘பெரியார் மொழி கடந்தவர். நாடு கடந்தவர்’ என்று சொல்வது இதனால்தான். ‘பெரியார் உலகமயமாக வேண்டும்’ என்று சொல்வது இதனால்தான்.
மனித மனங்களின் இழிவான குணங்களைக் கண்டிப்பதையே பெரியார் வழக்கமாக வைத்திருந்தார். இன்றைய மனவளக் கலை பேசுபவர்கள் இதனைத்தான் அதிகமாகப் பேசி வருகிறார்கள். ‘அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது’ என்று சொன்னபோது, ‘மானிடராய் பிறத்தல் இழிவு’ என்றவர் அவர். மனிதனிடம் இருக்கும் கெட்ட குணங்கள், எந்த விலங்கிடமும் இல்லை என்றவர் அவர்.
‘மற்ற ஜீவராசிகளை விடவும் ‘அதிருப்தி’ என்ற கெட்ட குணம் மனிதனிடமே அதிகமாக இருக்கிறது’ என்றவர் அவர்.
இவை அனைத்துக்கும்மேலாக, உலகத் தத்துவ ஞானிகள் அனைவரும், ‘தாங்கள் சொல்வதே சரி’ என்று சொல்லிக் கொண்டபோது, ‘நான் சொல்வது என்னைப் பொறுத்தவரை சரி, இதனை கண்ணை மூடிக்கொண்டு நம்பாதே, உன் புத்திக்குச் சரி என்றால் பின்பற்று’ என்று சொன்னவர் பெரியார்.
உலகுக்குப் பொதுவானவர் என்று மட்டுமல்ல, உலகின் ‘தனித்துவமானவர்’ என்று பெரியார் உயர்ந்து நிற்கிறார்.