அரைகுறைகளுக்கு - 1
தான் எதிலும் அரைகுறை என்பதை நித்தமும் நிரூபித்துக்கொண்டு இருப்பவர் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. எதையும் தெரிந்து கொண்டு பேசவேண்டும் என்பது கூடத்தெரியாமல் அவரது அறிக்கையும் பேட்டிகளும் அமையும். இதனால் அதிகப்படியான அவமானத்தில் தலைகுனிந்து நிற்பவர்கள் பா.ஜ.க. தொண்டர்கள்தான். பாவம்!
சுதந்திர தினத்தின் தொடர்ச்சியாக அண்ணாமலை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை, 'என்ன, சிவாஜி செத்துட்டாரா?' என்று கேட்பதைப் போல இருக்கிறது. அரசியலுக்கு ஒருசில மாதங்களுக்கு முன்பு அவர் வந்ததால், அதற்கு முன்னால் நடந்த எதுவும் அவருக்குத் தெரியவில்லை. "சுமார் 50 ஆண்டு காலக்கட்டத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. இதுவரை எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிலை வைத்திருக்கிறது?
இதுவரை எத்தனை முறை வ.உ.சி., வீரன் அழகுமுத்துக்கோன், கொடிகாத்த குமரன், வீரமங்கை வேலுநாச்சியார், கடலூர் அஞ்சலை அம்மாள் போன்றோரைப் பற்றிப் பேசி இருக்கிறீர்கள்? தங்கள் ஆட்சிக் காலங்களில் பாரதியை தமிழகத்தில் பேச மறந்தது ஏன்? முத்துராமலிங்கத் தேவர் பெயரை ஓட்டுக்காக மட்டும் உச்சரிப்பது உண்டு” - என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை.
கோட்டையில் கொடியை ஏற்றி வைத்துவிட்டு முதலமைச்சர் அவர்கள் பேசும் போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தியாகிகளுக்குச் செய்யப்பட்ட மரியாதையைச் சுருக்கமாகச் சொன்னார்கள். அனைத்தையும் நேரமில்லாத காரணத்தால் சொல்ல இயலவில்லை.
* பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு கோட்டை!
* பாரதியின் இல்லம் அரசு இல்லம் ஆனது!
* பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம்!
* மூதறிஞர் இராஜாஜி நினைவாலயம்!
* தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபமி!
* வீரவாஞ்சியின் உறவினருக்கு நிதி!
* வ.உ.சி. இழுத்த செக்கு நினைவுச் சின்னம் ஆனது!
* விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவசப் பேருந்துப்பயணம்!
* தியாகிகள் மணிமண்டபம்!
* சுதந்திரப் பொன்விழா நினைவுச் சின்னம்!
* பூலித்தேவன் நினைவு மண்டபம்!
* தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு!
* மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு!
* நேதாஜிக்கு சிலை!
* கக்கனுக்கு சிலை!
* சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூண்!
- இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இதையாவது படித்திருந்தால் அரைகுறைத்தனமாக அண்ணாமலை பேசமாட்டார்.
கடந்த ஓராண்டு காலத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் போற்றும் ஏராளமான பணிகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளன என்பதையும் முதலமைச்சர் அவர்கள் பட்டியலிட்டார்கள்.
* சுதந்திர தினத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழா கொண்டாட்டம்.
* வ.உ.சி.யின் 150 ஆவது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு - அவருக்கு 13 விதமான அறிவிப்புகள்.
* பாரதி நினைவின் நூற்றாண்டை முன்னிட்டு 14 அறிவிப்புகள்.
* காசியில் பாரதி வாழ்ந்த வீடு பராமரிக்க 18 லட்சம் நிதி.
* கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும், மருது சகோதரர்களுக்கும் சிலை.
* கடலூர் அஞ்சலை அம்மாளுக்கு சிலை வைக்க நிதி ஒதுக்கீடு.
* சிலை வைக்க 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* காந்தி மண்டபம், அருங்காட்சியகம், பெருந்தலைவர் காமராசர் மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் மண்டபம் ஆகியவற்றை மேம்படுத்த 3. 36 கோடி நிதி.
* சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் அவர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் நினைவு மண்டபம்.
* தியாகி ஈஸ்வரன் அவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் அரங்கம். இவை அனைத்தும் ஓராண்டு காலத்தில் செய்யப்பட்ட, - செய்து கொண்டிருக்கும் பணிகள் ஆகும். இதனை அறிந்திருந்தால் அரைகுறைத்தனமாக அண்ணாமலை பேச மாட்டார்.
அந்த அரைகுறைகள் இன்னொன்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். 1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. 1967க்கு முன்னதாக தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக இருந்த நினைவு மண்டபம் என்பவை மூன்று.
சென்னை காந்தி மண்டபம் 27.1.1956 அன்று அமைக்கப்பட்டது. கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபமானது 30.5.1956 அன்று அமைக்கப்பட்டது. ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி. அவர்களது இல்லம் நினைவு இல்லமாக மாறிய நாள் 7.8.1957 ஆகும். இவை மூன்றுதான் இருந்தன.
1967 ஆம் ஆண்டு கழக ஆட்சி அமைந்ததற்குப் பிறகுதான் அனைத்துத் தியாகிகளுக்கும் ஆண்டு தோறும் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியிலும் தியாகிகள் போற்றப்பட்டார்கள் என்றாலும் அதிகமான நினைவுச் சின்னங்களை எழுப்பியவர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
ஐம்பது ஆண்டு காலத்தில் எத்தனை வீரர்களுக்கு சிலை வைத்தது தி.மு.க. என்று அரைகுறைத்தனமாகக் கேட்பதை விட்டுவிட்டு, அத்தனை சிலைக்கும் கீழே போய் நின்று பார்க்கவும். யார் வைத்தது என்று தெரியும்.
பாரதியைப் பேச மறந்தது ஏன் என்கிறார் அரைகுறை. பாரதி வாழ்ந்த எட்டையபுரம் வீட்டை அரசு இல்லமாக தி.மு.க. அரசு ஆக்கி ஐம்பது ஆண்டுகள் (12.5.1973) ஆகிவிட்டது. இதை முதலில் தெரிந்து கொள்ளவும். மொத்த தியாகிகளுக்கும் சேர்த்து தியாகிகள் மணிமண்டபத்தைக் கட்டியவர் கலைஞர்.
தில்லையாடி வள்ளியம்மைக்கு நினைவகம் அமைத்த நாள் 13.8.1971. சுதந்திர தினப் பொன்விழா நினைவுத் தூணை 1997 ஆம் ஆண்டும், குடியரசு பொன்விழா நினைவுத்தூணை 2001 ஆம் ஆண்டும், சிப்பாய் புரட்சி நினைவுத் தூணை வேலூரில் 1998 ஆம் ஆண்டும் திறந்து வைத்தவர் முதலமைச்சர் கலைஞர்.
இது எதுவும் அண்ணாமலைக்குத் தெரியாது. ஏதோ, ஒன்றிய பா.ஜ.க. அரசு விடுதலை -75 கொண்டாடுவதால் தி.மு.க.வும் சுதந்திரப் போராட்டம் பற்றி பேசுவதாக மொண்ணையாக நினைத்துக் கொண்டு அறிக்கை தருகிறார் அண்ணாமலை.
பா.ஜ.க. ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இதுவரை செய்யப்பட்ட மரியாதைகளைச் சொல்ல முடியுமா? இன்னும் சொன்னால் சுதந்திரப் போராட்டத்தில் அவர்கள் பங்களிப்பு என்ன என்று பேசமுடியுமா? அதையும் தான் பார்ப்போம்! (தொடரும்)