முரசொலி தலையங்கம்

“பா.ஜ.க.வுக்கு நடந்த முதல் சறுக்கல்.. பீகாரில் பிறந்தது புதிய நம்பிக்கை” : முரசொலி தலையங்கம் பாராட்டு !

பீகாரில் நடந்த அரசியல் மாற்றத்தை மிகச் சரியாகவே கணித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

“பா.ஜ.க.வுக்கு நடந்த முதல் சறுக்கல்.. பீகாரில் பிறந்தது புதிய நம்பிக்கை” : முரசொலி தலையங்கம் பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பீகாரில் பிறந்தது !

பீகாரில் நடந்த அரசியல் மாற்றத்தை மிகச் சரியாகவே கணித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

‘’பீகார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிதிஷ் குமாருக்கும், துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தேஜஸ்விக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பீகாரில் மகா கூட்டணியின் இந்த வருகை நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்காக காலத்தே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி” - என்று கணித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

எட்டாவது முறையாக பீகார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் நிதிஷ்குமார். 2005 ஆம் ஆண்டு முதன்முறையாக பீகார் மாநில முதலமைச்சர் ஆனார். இதில் 15 ஆண்டுகள் பீகார் மாநில முதலமைச்சராக இருந்திருக்கிறார். இம்முறை அவர் முதலமைச்சர் ஆனது பீகார் எல்லையைத் தாண்டி இந்திய அரசியலாகப் பார்க்கப்படுகிறது.

முதல்வரின் கணிப்பு எந்தளவுக்குச் சரியானது என்பதை பீகார் முதலமைச்சரின் பேட்டியானது தெளிவுபடுத்திவிட்டது. ‘’நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு புத்துயிரூட்டுவேன். எதிர்க்கட்சிகளே இருக்காது என்று சொன்னவர்கள், இப்போது நிதிஷ் குமார் எதிர்க்கட்சியில் இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு புத்துயிரூட்டுவேன்” என்று சொல்லி இருக்கிறார்.

“பா.ஜ.க.வுக்கு நடந்த முதல் சறுக்கல்.. பீகாரில் பிறந்தது புதிய நம்பிக்கை” : முரசொலி தலையங்கம் பாராட்டு !

“2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். 2020 - சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் சேர்ந்து நாங்கள் போட்டியிட்ட போது எங்கள் கட்சியின் பலம் குறைந்தது. ஆனால், 2015 சட்டசபைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாவுடன் போட்டியிட்ட போது எங்கள் பலம் நன்றாக இருந்தது” என்று சொல்லி இருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “எதிர்காலம் பற்றி யாருக்கும் தெரியாது.

ஆனால் 2014 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தவர் - 2024 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்” என்றும் சூசகமாகச் சொல்லி இருக்கிறார். ‘நான் பிரதமர் வேட்பாளர் அல்ல’ என்றும் சொல்லி இருக்கிறார் நிதிஷ். நிதிஷ்குமாரை ஆதரித்துக் கொண்டே அவருக்கு குடைச்சலைக் கொடுத்து வந்தது பா.ஜ.க. இதனை சகித்துக் கொள்ள முடியாமல்தான் நிதிஷ் வெளியேறினார்.

இதனை பா.ஜ.க. எதிர்பார்க்கவில்லை. நடக்காது என்று நினைத்த கூட்டணியை நிதிஷ்குமாரே உருவாக்கினார். லாலு கட்சியுடனும், காங்கிரசுடனும் கைகோர்க்கத் தயாரானார் நிதிஷ். பீகாரில் நாங்கள் ஆளும் கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்த பா.ஜ.க.வின் எண்ணிக்கையைக் குறைத்தார் நிதிஷ். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தின் எண்ணிக்கையை உயர்த்தினார் நிதிஷ். எதிர்க்கட்சிகளுக்கும் இதன் மூலமாக புத்துணர்வு ஊட்டினார் நிதிஷ்.

“பா.ஜ.க.வுக்கு நடந்த முதல் சறுக்கல்.. பீகாரில் பிறந்தது புதிய நம்பிக்கை” : முரசொலி தலையங்கம் பாராட்டு !

நிதிஷ் குமாரை தனது கூட்டணியில் தக்க வைக்க பா.ஜ.க. எடுத்த இறுதிக்கட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவியது. நிதிக் கூட்டத்துக்கு வரும் நிதிஷை பிரதமர் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு வராமலேயே தவிர்த்து விட்டார் நிதிஷ். பா.ஜ.க. தலைமையால் முடக்கி வைக்கப்பட்ட ரவிசங்கர் பிரசாத், ஷா நவாஸ் உசைன் ஆகிய இருவரையும் டெல்லிக்கு அழைத்து ஆலோசனை செய்தார்கள்.

அதன்படி பீகார் பா.ஜ.க. தலைவர்களை நிதிஷிடம் அனுப்பி வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களுடன் நிதிஷ் முகம் கொடுத்தே பேசவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

நிதிஷ்குமாருக்கு அதிகமான நெருக்கடி தந்து வந்த பீகார் சபாநாயகர் விஜய்குமார் சின்ஹாவை நீக்கிவிடுகிறோம் என்றும் பா.ஜ.க. உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. ‘இந்த அரசை தக்கவைக்க எதுவும் செய்யத் தயார்’ என்று பீகார் மூத்தத் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான அஸ்வின் சவுபே சொல்லி இருந்தார். இவை அனைத்தையும் நிதிஷ் குமார் நிராகரித்தார்.

“பா.ஜ.க.வுக்கு நடந்த முதல் சறுக்கல்.. பீகாரில் பிறந்தது புதிய நம்பிக்கை” : முரசொலி தலையங்கம் பாராட்டு !

‘எங்கள் கட்சியை ஒழித்துக் கட்ட பா.ஜ.க. சதி செய்கிறது’ என்பதுதான் நிதிஷ் குமாரின் குற்றச்சாட்டு. மராட்டியத்தில் செய்ததை பீகாரிலும் செய்யப் பார்த்திருக்கிறார்கள் என்பது இதன் மூலமாகத் தெரிகிறது. மக்களின் தயவைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பதை விட - மக்களின் தயவைப் பெற்றவர்களின் தயவைப் பெற்று ஆட்சியைப் பல்வேறு மாநிலங்களில் பிடித்து வைத்திருந்தது பா.ஜ.க.

18 மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதாக பா.ஜ.க. சொல்லிக் கொண்டாலும் தனித்து ஆட்சி அமைத்திருப்பது சில மாநிலங்களில்தான். குஜராத், இமாசலப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகியவற்றில் மட்டும்தான் தனித்து ஆட்சி அமைத்துள்ளது பா.ஜ.க. மற்ற மாநிலங்களில் கூட்டணியின் தயவுடன்தான் ஆட்சி நடக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்தியாவே எங்கள் வசம் என்று பேசுவதே பம்மாத்துதான்.

மராட்டிய மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டவர்களைத் தன் வசப்படுத்திக் கொண்டு ஆட்சியை அமைத்துள்ளது பா.ஜ.க. இதனைத் தான் ஒரு மாதத்துக்கு முன்னால் பார்த்தோம். சிவசேனா, காங்கிரசு, - தேசியவாத காங்கிரசு கூட்டணியைக் கவிழ்த்து பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ளது அந்த மாநிலத்தில். இதுபோன்ற சூழல் நடக்க விடாமல் - அதே அஸ்திரத்தை நிதிஷ்குமாரே பா.ஜ.க.வை நோக்கிப் பயன்படுத்தி விட்டார் நிதிஷ்குமார்.

மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 119 உறுப்பினர்கள் தேவை. ஆனால் பா.ஜ.க.வுக்கு 115 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். நிதிஷ்குமார் அக்கூட்டணியில் இருந்து விலகியதன் மூலமாக 5 உறுப்பினர்களின் எண்ணிக்கை பா.ஜ.க.வுக்குக் குறைகிறது. இதன் மூலமாக பெரும்பான்மையைப் பெற பா.ஜ.க.வுக்கு 9 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இது முதல் சறுக்கல் ஆகும்.

பீகாரில் நடந்த ஆட்சி மாற்றமாக மட்டுமே இதனைப் பார்க்க முடியாது. அடுத்து நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் அணிச்சேர்க்கைக்கு பீகாரில் உற்சாகம் பிறந்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories