முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட 10, 2022) தலையங்கம் வருமாறு:
இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுல் அவர்கள், தமிழ்நாட்டைப் போற்றிப் புகழ்ந்திருப்பது நமக்கு மிகமிகப் பெருமை அளிப்பதாக அமைந்துள்ளது.
சென்னை, பஞ்சாப், அரியானா ஆகிய மாநில உயர்நீதிமன்றங்க ளின் தலைமை நீதிபதியாக இருந்து இப்போது உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்களில் ஒருவராக சஞ்சய் கிஷன் கவுல் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
மாநில மனித உரிமை ஆணையத்தின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீதியரசர் கவுல் அவர்கள் ஆற்றிய உரை, தமிழ்நாட்டுக்கு கொடுத்த நற்சாட்சி பத்திரம் போல அமைந்தி ருந்தது. 1967 இல் இருந்து தமிழ்நாடு கெட்டுப் போய்விட்டது என்று கெட்டதுகள் சிலது நித்தமும் அர்த்தமற்ற அரிப்புப் பேச்சுகளைச் சொல்லி வருகிறார்களே, அவை அனைத்துக்கும் பதில் சொல்வதைப் போல அமைந்துள்ளது அவரது உரை. இன்னமும் பெரியாரை அடையாளம் காணத்தவறும் தற்குறிகள் தமிழ்நாட்டில் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதாக அமைந்திருந்தது நீதியரசரின் உரை.
இன்றைக்கு திராவிட மாடல் அரசை கொள்கை அரசாக வடிவமைத்து நடத்திச் சென்று கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அத்தகைய திராவிடவியல் கோட்பாடுகளின் உள்ளடக்கத்துக்கு உணர்வூட்டும் உரையாக அமைந் துள்ளது நீதியரசரின் உரை.
நமது மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ல சஞ்சய் கிஷன் கவுல் அவர்கள். காஷ்மீரைச் சேர்ந்தவர். காஷ்மீரி பண்டிட் குடும்பத்தில் பிறந்தவர்கள் ஶ்ரீநகர் தத்தாத்ரேய கவுல் குடும்பம் என்று அவர்களுக்குப்பெயர். அவரது தாத்தா ராஜா சூரஸ் கிஷன் கவுல் அவர்கள், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தின் ரேஜென்சி கவுன்சிலில் வருவாய் அமைச்சராக இருந்தவர். அவரது இன்னொரு தாத்தா சர் தயா கிஷன் கவுல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிதி அமைச்சராக இருந்தவர். அவரது இன்னொரு தாத்தா, ராஜா உபிந்தர் கிஷேன் கவுல், பொதுப்பணியில் இருந்தவரே. இப்படி அரசியல், பொதுப் பணியில் செயல்பட்டவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர் கவுல்.
அப்படிப்பட்டவருக்கு ‘திருக்குறள்’ தான் நினைவுக்கு வருகிறது. ‘மனித உரிமைப் பிரச்சினைகள் எழும் போதெல்லாம் எனக்கு கை கொடுப்பது திருக்குறள்’ தான் என்று சொல்லி இருக்கிறார் நீதியரசர். வேதத்தை மேற்கோள் காட்டுவது தான் பெரும் புத்திசாலித்தனம் என்று இங்கிருக்கும் சிலர் நினைக்கும் போது, ஒரு காஷ்மீர் பண்டிட் சொல்கிறார் - திருக்குறள்தான் மிகமிக முக்கியமானது என்று.
டெல்லி பல்கலைக் கழகத்தில் பொருளாதாரமும், சட்டமும் படித்தவர் நீதியரசர் கவுல். 2001 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதி மன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டது முதல் பல்வேறு மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து இன்று உச்சநீதி மன்ற நீதிபதியாக இருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோதுதான், உயர்வு பெற்று உச்சநீதிமன்றம் சென்றார்.
ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பில், ‘’பன்மைத்துவம் என்பது ஜனநாயகத்தின் ஆன்மா. நாம் வெறுக்கும் சிந்தனைக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். பேச்சுச் சுதந்திரம் இல்லை என்றால் பேச்சு சுதந்திரம் என்று சொல்வதற்கு பொருள் இல்லை. ஜனநாயகத்தின் உண்மைத் தன்மை என்பது சுதந்திரம் மற்றும் அதன் தங்குமிடத்தின் அளவைக் கொண்டு அளவிடப் பட வேண்டும்” என்று எழுதியவர் நீதியரசர் கவுல் அவர்கள். அவரது சிந்தனைகளின் அடிநாதமாக திருக்குறள் அமைந்திருப்பதை உணர முடிகிறது.
மகளிர் கல்வியில் முன்னேற்றம் குறித்து தான் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட நீதியரசர் அவர்கள், அதிக பெண் நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றமாக சென்னை உயர்நீதிமன்றம் விளங்கி வருவதை பாராட்டி இருக்கிறார். ‘‘இன்றைக்கு நிலவும் இந்த நிலை உடனடியாக ஏற்பட்டுவிடவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் முன்னதாகவும், பிறமாநிலங்களில் அதைத் தொடர்ந்தும் தான் மனித உரிமையை நிலைநாட்டும் நிலை உள்ளது’’ என்றும் சொல்லி இருக்கிறார் அவர். தமிழக கல்வி முன்னேற்றம் குறித்தும் அவர் பாராட்டி இருக்கிறார்.
அவரது உரையில் குறிப்பிடத்தக்க பகுதி என்பது இதுதான்..
‘’தமிழ்நாடு பல்வேறு சமுதாய சீர்திருத்த இயக்கங்களின் வளமான வரலாற்றை நமக்களித்து அதன் முன்னோடியாகவும் இருந்து வருகிறது. அதன் காரணமாக சமுதாய உரிமைகளைப் பாதுகாக்க ஏதுவாக இருக்கிறது. அதிகமாக நேசித்து அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற உயரிய கோட்பாட்டை வள்ளலார் மற்றும் பெரியார் அவர்களிடம் நாம் கற்றுக் கொண்டோம் எம்பதை பெருமையாக எடுத்துக் கொள்கிறேன். அவர்களின் கருத்துக்களில் ஒன்றிணைந்து தோளோடு தோள் நிற்கும் பெருமை நமக்குக் கிடைத்திருக்கிறது” - என்று சொன்ன அவரது ஒவ்வொரு சொல்லும் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கவை ஆகும்.
‘’சமூகப் பொருளாதார நிலைமைகளை சீர்தூக்கி செம்மையாகச் செயல்பட தமிழ்நாடு குறிப்பாக சென்னை எனக்குப் பலவகைகளில் உதவிகரமாக இருந்து வருகிறது என்று குறிப்பிடுவதில் நான் பெருமை அடைகிறேன்” என்று சொல்லி அவர் தனது உரையை முடித்துள்ளார்கள்.
கல்வி, அனைவர்க்கும் கல்வி, பெண் கல்வி, மனித உரிமைகள், சமத்துவம், வள்ளலாரின் கொள்கைகள், பெரியாரின் சீர்திருத்தங்கள், நேசித்தல், மனிதாபிமானம், சமூகப் பொருளாதாரம் ஆகிய கோட்பாடு களைக் கொண்டது தமிழ்நாடு. அது தான் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களை விட முன்னேற்ற மாநிலமாக ஆக்கிக் காட்டி இருக்கிறது என்று பாராட்டிப் போற்றிய உச்சநீதிமன்ற நீதியரசருக்கு தமிழ்ச் சமுதாயத்தின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!