ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையானது தாய்மொழியை வளர்ப்பதாக இருக்கிறது என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசி இருக்கிறார். அவர் எந்த புதிய கல்விக் கொள்கையைப் படித்தார் என்று தெரியவில்லை. யாராவது சொன்னதை வைத்து இப்படி அவர் பேசி வருகிறார்.
புதிய கல்விக் கொள்கையானது சமஸ்கிருத மொழிக்கு சாமரம் வீசுகிறது. இந்திக்கு லாலி பாடுகிறது. மும்மொழிக் கொள்கையை முன் மொழிகிறது. இதுதான் உண்மை என்பதை அந்தக் கல்விக்கொள்கையை முழுமையாகப் படித்தவர்கள் அனைவரும் உணர முடியும். புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் குறித்து வீசப்பட்டுள்ள சாமரத்தை படித்துப் பாருங்கள்...
“இந்தியச் செவ்வியல் / செம்மொழிகளின் முக்கியத்துவம், தொடர்பு மற்றும் அழகியல் போன்ற காரணிகள் புறந்தள்ளப்பட்டுவிடக் கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளதும் மற்றுமொரு முக்கியமான நவீன மொழியுமான சமஸ்கிருதம் - ஒன்று கூட்டப்பட்ட கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளின் இலக்கியங்களைக் காட்டிலும் செறிவு மிக்கதாகவும், கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருத்துவம், கட்டிடக் கலை, உலோகவியல், நாடகம், கவிதை, கதை சொல்லல் மற்றும் பிற (சமஸ்கிருத ஞான மரபு என்றறியப்பட்ட) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாலும், மதச் சார்புடையவர்களாலும் வாழ்வின் பலதரப்பட்ட சமூகப் பொருளாதார மற்றும் வாழ்வியல் முறைகளைச் சார்ந்த எழுத்தாளர்களாலும் எழுதப்பட்ட ஏராளமான செல்வங்களையும் உள்ளடக்கி உள்ளது.
எனவே சமஸ்கிருதம், மும்மொழிப்பாடத்திட்டத்தின் ஒரு மொழியாகப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் எல்லா நிலைகளிலும், கல்லூரிகளிலும் ஒரு முக்கியமான வளமூட்டக் கூடிய விருப்பப்பாடமாக வழங்கப்படும். இந்த மொழி சுவையுடனும், அனுபவப் பூர்வமாகவும் மட்டுமல்லாமல் தற்காலத்திற்குப் பொருந்தும் வகையில் சமஸ்கிருத ஞான மரபுகளின் வழியில் முக்கியமாக ஒலிப்பு மற்றும் உச்சரிப்பு முறைகளின் மூலமாகக் கற்பிக்கப்படும்.
ஆரம்ப மற்றும் இடைநிலை சமஸ்கிருதப் பாடப் புத்தகங்கள் எளிய தரமான சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு, மாணவர்கள் உண்மையிலேயே அனுபவித்துக் கற்கும் வண்ணம் சமஸ்க்ரித மொழியின் மூலமே கற்பிக்கப்படும்” என்று புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை எதற்காக வருகிறது தெரியுமா? இதற்காகத்தான் வருகிறது!
“மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருத மொழி ஒரு பாடமாக்கப்பட்டு பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முக்கிய திறன் வளர்ப்பு விருப்பப் பாடமாக அளிக்கப்படும்” என்று இருக்கிறது. இதுதான் தாய்மொழிக் கல்வியா? “சமஸ்கிருதப் பாடத்தை சமஸ்கிருத மொழியிலேயே ஆரம்ப மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்காக சமஸ்கிருத பாடப்புத்தகங்கள் உருவாக்கி வழங்கப்படும்” என்று இருக்கிறது. இதுதான் தாய்மொழிக் கல்வியா?
பள்ளி மற்றும் உயர்கல்வி மணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையில் ஒரு முக்கிய விருப்பப் பாடமாக சமஸ்கிருதம் உறுதியாக வழங்கப்படும்” என்று இருக்கிறது. இதுதான் தாய்மொழிக் கல்வியா?
“சமஸ்கிருதத் துறைகள் மூலமாக சமஸ்கிருதம் பற்றியும் சமஸ்கிருத அறிவு முறைகள் (Sanskrit Knowledge System) பற்றியும் மிகச்சிறந்த இடைநிலை (Inter Disciplinary) ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று இருக்கிறது. இதுதான் இந்திய மாநிலங்களில் தாய் மொழிக்குத் தரும் முக்கியத்துவமா?
“உயர்கல்வித் துறையில் முழுமையான பல்துறை (Holistic Multi disciplinary) பயிற்று மொழியாக சமஸ்கிருதம் விளங்கும். நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் உள்ள சமஸ்கிருத ஆசிரியர்கள் பாடப் புலமை பெற்றவர்களாக (Professionalized) ஆக்கப்படுவார்கள்” என்பதுதான் தாய்மொழிக்குத் தரும் முக்கியத்துவமா?
“இந்தியாவிலுள்ள சமஸ்கிருதம், இந்திய மொழி நிறுவனங்கள் மற்றும் சமஸ்கிருதத் துறைகள் மூலம் அதிக மாணவர்களுக்கு மிகச்சிறந்த பயிற்சி வழங்கப்படும் அளவிற்கு முக்கியத்துவம் மிக்கதாக சமஸ்கிருதம் பலப்படுத்தப்படும்” என்று சொல்லப்பட்டுள்ளது. இதுதான் தாய்மொழிக்குத் தரும் முக்கியத்துவமா?
அமைச்சர் முருகன் சொல்வது எந்தத் தாய்மொழியை? யாருடைய தாய்மொழியை? சமஸ்கிருதம் இந்தியாவில் எத்தனை கோடிப் பேரின் தாய்மொழி? இந்தியாவில் சமஸ்கிருதம் பேசத் தெரிந்தவர் எத்தனை பேர்? யாரை ஏமாற்றுவதற்கு இத்தகைய பொய்ப் பிரச்சாரத்தைச் செய்கிறீர்கள்.
மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்ததை நீதிக்கட்சி காலத்து அமைச்சரவை நீக்கியது. அதனால்தான் அனைவரும் படிக்கும் படிப்பாக மருத்துவம் மாறியது. மீண்டும் சமஸ்கிருதம் தேவை என்று சொல்லப்பட்டால் எத்தனை பேரால் மருத்துவக் கல்விக்குள் நுழைய முடியும்? யாராலும் முடியாது. ஒரு சிலரால் சொல்லமுடியலாம். அவர் சொல்வது சரியா தவறா என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இத்தகைய காலத்தை மீண்டும் உருவாக்க நினைக்கிறார்கள். அதற்காகத்தான் சமஸ்கிருதத்தைப் புகுத்துகிறார்கள்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரால் சமஸ்கிருதத்தை புகுத்தும் கல்வி முறைதான் புதிய கல்விக் கொள்கை. இந்த அறிக்கையில் மும்மொழிக் கொள்கை என்ற சொல் 7 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார், கல்வியாளரும் பேராசிரியருமான கிருஷ்ணசாமி அவர்கள்.
மும்மொழிக்கொள்கை நடை முறைப்படுத்தப்படும் என்றும், மாநிலங்கள் பிராந்தியங்கள், மற்றும் மாணவர்களின் விருப்பப்படி பள்ளி மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை அடிப்படையில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படும் என்றும் - மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் மும்மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் - மாணவர்களிடையே பலமொழி ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்துப்படுகிறது என்றும் - பள்ளி மற்றும் உயர்கல்வி நிலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் மும்மொழிக் கொள்கையில் ஒருமொழியாக சமஸ்கிருதம் இருக்கும் என்றும் - அதில் இருப்பதாக அவர் சொல்கிறார்.
இது எதுவும் தெரியாமல் ஒரு ஒன்றிய அமைச்சர் பேசுவது அழகா? புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்படும் மொழிக்கொள்கை என்ன என்றால். தொடரும்...