கல்லூரிக் கனவு என்ற மதிப்புமிகு திட்டத்தைத் தொடங்கி வைத்திருக் கிறார் முதலமைச்சர்!
பன்னிரெண்டாம் வகுப்பை படித்து முடித்திருக்கும் மாணவக் கண்மணிகள், அடுத்து கல்லூரிகளில் என்ன படிக்கலாம் என்பதை வழிநடத்தும் திட்டமாக ‘கல்லூரிக் கனவு' திட்டத்தை வடிவமைத்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
லட்சக்கணக்கான பிள்ளைகளுக்கு வழிகாட்டும் திட்டமாக இது அமைந்துள்ளது.
* இல்லம் தேடி கல்வி
* நான் முதல்வன்
* எண்ணும் எழுத்தும் திட்டம்
* பேராசிரியர் அன்பழகனார் பெயரில் பள்ளிகள் சீரமைப்பு
* பெருந்தலைவர் காமராசர் பெயரால் கல்லூரிகள் சீரமைப்பு
- இப்படி கல்வியைச் சுற்றியே சுற்றிச் சுழன்று கொண்டு இருக்கிறது தமிழ்நாடு அரசு. அதற்குக் காரணம் என்ன என்பதையும் முதலமைச்சர் அவர்கள் விளக்கிச் சொல்லி வருகிறார்கள்.
‘கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அத்தகைய சொத்தை ஒவ்வொருவருக்கும் உருவாக்கிக் கொடுப்பதுதான் என் முதன்மையான பணி' என்பதை முதலமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள். இந்தக் கருத்தை திரும்பத் திரும்ப முதலமைச்சர் அவர்கள் சொல்லி வருகிறார்கள். திரும்பத் திரும்பச் சொல்லித்தான் ஆக வேண்டும். அதனால்தான் சொல்கிறார்கள்.
நேற்றைய தினம் தமிழக ஆளுநர் அவர்கள் கலந்து கொண்ட விழாவில் அவருக்கு முன்னால் ஒருவர் பேசி இருக்கிறார். ‘நமது கலாச்சாரமும் பண்பாடும் காப்பாற்றப்பட நமது நாட்டு ஞானிகள் தான் காரணம். பாட நூல்களோ, பள்ளி கல்லூரிகளோ, அரசோ காரணம் அல்ல' என்று அந்த அதிபுத்திசாலி பேசி இருக்கிறார்.
அவரே அடுத்துப் பேசும் போது எனக்கு தன்னம்பிக்கை ஊட்டியவர்கள் எனது ஆசிரியர்கள்தான் என்றும் சொல்லி இருக்கிறார். இத்தகைய பேச்சுகளுக்குப் பின்னால் ஒருவித மான சதியும், உள்நோக்கமும் இருக்கிறது.
இதனையே நாட்டுக்கு உணர்த்தி வருகிறார் முதலமைச்சர். கடந்த சூன் 13 ஆம் நாள் திருவள்ளூரில் எண்ணும் எழுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் அவர்கள், “கல்வி மட்டும்தான் நம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும். மாறாக படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக் காட்டினால் அதற்கு இணையாகப் படித்துச் சாதித்தவர்கள் லட்சம் பேரை நாம் காட்ட முடியும். படிக்காமலே சாதிக்கலாம் என்று யாராவது சொன்னால் அது தன்னம்பிக்கை ஊட்டுவது அல்ல.
அது வெறும் ஆசை வார்த்தை. இவர்களெல்லாம் படித்து முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில் தவறான பாதையைக் காட்டும் சூழ்ச்சி இது” என்று முதலமைச்சர் அவர்கள் பேசினார்கள். ஆளுநருக்கு முன்னால் ஒருவர் பேசியதை வாசித்து விட்டு - முதலமைச்சர் சொன்னதை வாசியுங்கள். இரண்டின் உண்மையான பொருளை உணர முடியும்.
போட்டிகள் நிறைந்த - மக்கள் தொகை அதிகமாகிவிட்ட - இக்காலத்தில் ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சியையும் தீர்மானிப்பது அவனது படிப்பும், பட்டமும், கல்வித் தகுதியும்தான். இதிலும் கூட பட்டமும், கல்வித் தகுதியும் மட்டுமே இப்போது போதாது, அதற்கும் மேலான அறிவுக்கூர்மையும், தனித்திறமையும், ஆளுமைத் திறனும் தேவை என்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவாகும்.
இன்றைக்கு லட்சக்கணக்கான பள்ளிகள், பல்லாயிரக்கணக்கான கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. கல்வி என்பது மிக எளிதில் கிடைத்துவிடும் தூரத்தில் இருக்கிறது. பணமில்லை என்பதற்காக படிக்கவில்லை என்ற சூழல் இங்கு கிடையாது. அரசு உருவாக்கி வைத்திருக்கும் கல்வி நிறுவனங்கள் அனைவருக்கும் கல்வி தரும் அமுதசுரபிகளாக அமைந்திருக்கின்றன. எனவே, அனைவரும் கற்றுவிடுவார்கள். ஏதோ ஒரு பட்டத்தைப் பெற்றுவிடுவார்கள்.
போட்டிகள் நிறைந்த - மக்கள் தொகை அதிகமாகிவிட்ட இக்காலத்தில் பட்டம் தாண்டிய தகுதி அனைவர்க்கும் தேவை, அதனை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார் முதலமைச்சர்.
ஒரு பெற்றோர் தனது பிள்ளையை எப்படி உருவாக்க வேண்டும் என்று நினைப்பார்களோ அப்படி தமிழ்நாட்டுப் பிள்ளைகளை உருவாக்க நினைக்கிறார் முதலமைச்சர். அதனால்தான் உயர்கல்வி - பள்ளிக் கல்வி ஆகிய இரண்டு துறைகளின் மீதும் தனிக்கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறார். ‘நான் முதல்வன்' என்ற திட்டத்தை தனது பிறந்தநாளான மார்ச் 1 ஆம் நாள் தொடங்க அதுதான் காரணம்.
தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் அனைவரும் தங்கள் தங்கள் துறையில் முதல்வன் ஆக வேண்டும் என்பதுதான் அவரது கனவு ஆகும். திராவிட இயக்கத்தின் தீராக் கனவு என்பதும் இதுதான். சமூக நீதி என்ற தத்துவமே கல்விக்காகத்தான் உருவாக்கப்பட்டது. ‘படிக்கக் கூடாது' - என்று சொல்லப்பட்ட சனாதனத்துக்கு எதிராக - கல்வியை உரிமை ஆக்கி, இடத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். எனவே, இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கமே எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான்.
அதனைத்தான் ‘திராவிட மாடல்' என்கிறார் முதலமைச்சர். படிக்க வராதே - என்று ஒரு காலத்தில் தடுத்தார்கள். இன்று அனைவரும் படிக்கத் தொடங்கியதும் பள்ளி, கல்லூரிகளால் பயனில்லை என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அதனால்தான் கல்வியின் - அறிவின் முக்கியத்துவம் குறித்து அதிகமாகப் பேச வேண்டி இருக்கிறது.
கல்லூரிக் கனவு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் அவர்கள், “இன்றைக்கு அறிவு என்பதுதான் ஒரு மனிதனின் சக்தியாக அளவிடப்படுகிறது. ‘knowledge is one's power' - என்பார்கள். ஏதோ ஒன்றில் உங்களது அறிவு கூர்மை பெறுமானால் அந்த அறிவு உங்களது வாழ்க்கையை வளமானதாக ஆக்கும்.
சாதி - மதம் - பணம் - அதிகாரம் - வயது - அனுபவம் - குடும்பம் - பதவி - நாடுகள் - வளர்ச்சி - ஆகிய அனைத்தின் தன்மையும் ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆனால் அறிவு மட்டும்தான் அனைத்தையும் கடந்து ஒரே அளவு கோலோடு அளவிடப்படுகிறது” என்று சொல்லி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை அறிவுச்சமூகமாக - பகுத்தறிவுச் சமூகமாக ஆக்கும் தொண்டை ஆற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!