“முதலமைச்சர் என்பவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுவதைப் போல பயம் காட்டி இருக்கிறார் பன்னீர்செல்வம்.
இறுதியில் ‘சந்திரமுகியாகவே' மாறியதைப் போல பா.ஜ.க.வாகவே மாறிவிட்டார் பன்னீர். அவர்களது அவதூறுப் பிரச்சாரத்தை இவர் கையாளத் தொடங்கி இருக்கிறார். தி.மு.க. ஆட்சி மீது ஏதும் குறை கூற முடியாதவர் முன்வைக்கும், அவதூறுகளில் ஒன்றுதான் இது போன்ற விமர்சனங்கள். பன்னீர்செல்வம் இது போன்ற அறிக்கை விடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ஆத்தூர் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதற்கான முழு விளக்கத்தை தனது பேச்சில் எடுத்துரைத்து விட்டார்.
“இந்த ஆட்சிமீது எதை வைத்தும் குறை சொல்ல முடியாத சிலர் ஆன்மிகத்தின் பேரால் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். எவரது பக்திக்கும் - எவரது உணர்வுக்கும் தடையாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்ததும் இல்லை. இனியும் இருக்காது. ‘பக்திப் பிரச்சாரம் ஒரு பக்கம் நடக்கட்டும்- பகுத்தறிவுப் பிரச்சாரம் அதுவாகத் தொடரட்டும்' என்றுதான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எங்களுக்குக் காட்டிய பாதையாகும்.
ஆட்சி என்பது அனைவர்க்கும் பொதுவானது ஆகும். எல்லாத் துறைகளும் வளரவேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன். அதில் இந்து சமய அறநிலையத் துறையும் ஒன்றுதான். அந்தத் துறையையும் உள்ளடக்கிய ஆட்சிதான் கழக ஆட்சி” என்று சொல்லி இந்த ஓராண்டு காலத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் முதலமைச்சர் அவர்கள் பட்டியலிட்டுக் காட்டி இருக்கிறார்கள்.
“உண்மையான ஆன்மிகவாதிகள் என்றால், நியாயமாக நீங்கள் இதை ஆதரித்திருக்க வேண்டும். அதற்கு நேர்மாறாக மதத்தை வைத்து - மத வெறியைத் தூண்டி அரசியல் செய்யும் நிலையில் இருப்பவர்கள்தான் அவதூறு செய்கிறார்கள்” என்பதையும் விளக்கி இருக்கிறார்.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற மூன்று மாதத்தில் ஏராளமான கோவில்கள் இடிக்கப்பட்டதாக ஒரு அவதூறு வீடியோவைத் தயாரித்துப் பரப்பினார்கள். அதில் சொல்லப்பட்டது மாதிரி எங்கும் கோவில்கள் இடிக்கப்படவில்லை. அதாவது கோவிலைச் சொன்னால் அது பரவும் என்ற மலிவான எண்ணத்துடன் அத்தகைய அவதூறுகள் பாய்ச்சப்பட்டன. ஆனால் கடந்த ஓராண்டு காலத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் - அமைச்சர் சேகர்பாபு முன்னெடுப்பில் செய்யப்பட்ட பணிகள் என்பவை மகத்தானவை. அத்தகைய பணிகளை இத்தகைய சக்திகள் விரும்பவில்லை என்றே தெரிகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை இந்த அரசு மீட்கிறது. இதுவரை ரூ.2500 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனை விரும்பாத சக்திகள்தான், கழக ஆட்சி மீது அவதூறு கிளப்புகிறார்கள். கோவில்களில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி வருகிறது இந்த அரசு. இதனை மொத்தமாக சென்னை அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்கிறார்கள். இது சிலருக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆட்கள்தான் இத்தகைய அவதூறுக்கு துணை போகிறார்கள்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அவதூறு செய்கிறார்கள். அன்னைத் தமிழில் வழிபாடு செய்யப்படுவதும், தமிழில் போற்றிப் புத்தகங்கள் வெளியிடுவதும் சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் இத்தகைய அவதூறுகளைத் தூண்டி விடுகிறார்கள். திருக்கோவில் ஆவணங்கள் அனைத்தையும் இணையதளத்தில் ஏற்றியதும், மீட்கப்பட்ட சொத்துகள் அனைத்தையும் வெளிப்படையாக புத்தகமாக வெளியிட்டு இருப்பதும் சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்களே இத்தகைய அவதூறுகளுக்குப் பின்னணியாக இருக்கிறார்கள். இவை அனைத்தும் புரிந்துகொள்ள முடியாத மர்மங்கள் அல்ல.
இதேநேரத்தில் இன்னொரு அவதூறும் சொல்லப்படுகிறது. அமைச்சர் சேகர்பாபு எந்த அறிவிப்பு செய்தாலும் அதனை எடுத்துப் போட்டு, ‘இது திராவிட மாடல் அரசா? ஆன்மிக அரசா?' என்றும் ஒரு கூட்டம் கிண்டல் அடித்துக் கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு திராவிடத்தையும் தெரியவில்லை. ஆன்மிகத்தையும் புரியவில்லை.
அதற்கும் ஆத்தூர் கூட்டத்தில் முதலமைச்சர் அவர்கள் தெளிவான விளக்கத்தை அளித்தார்கள்.
திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது! உருவாக்கும்!
திராவிட மாடல் என்பது எதையும் சிதைக்காது! சீர் செய்யும்!
திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது! அனைவரையும் ஒன்று சேர்க்கும்!
திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது! அனைவரையும் சமமாக நடத்தும்!
திராவிட மாடல் என்பது யாரையும் புறக்கணிக்காது! தோளோடு தோள் நின்று அரவணைக்கும்!
- என்று முதலமைச்சர் அவர்கள் கல்வெட்டைப் போன்ற விளக்கத்தை அளித்துள்ளார்கள்.
‘இது திராவிட மாடல் அரசா? ஆன்மிக அரசா?' என்று கேட்பவர்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை என்பதே நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் என்பது தெரியாது. கோவில்கள் கேட்பாரற்றுப் போய்விட்டன, அதனைக்காப்பதற்கு அரசு முயலவேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த இரண்டு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில்தான் இந்து சமய அறநிலையச் சட்டமே உருவாக்கப்பட்டது.
எனவே, கோவில்களை எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காத வகையில் காக்கும் கடமை என்பது அரசுக்கு உண்டு. ‘அரசர்களால், மன்னர்களால் உருவாக்கப்பட்ட கோவில்கள், அரசுக்கோவில்கள்தான்' என்று ஒற்றை வரியில் விளக்கம் அளித்தார் இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராசன் அவர்கள்.
‘கோவிலைச் சார்ந்த மக்கள் - மக்களைச் சார்ந்த கோவில்கள்' என்று சொன்னார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். அந்த அடிப்படையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்தத் துறையைக் கவனித்து வருகிறார். ஆன்மிகத்தை வைத்து வோட்டு அரசியல் செய்பவர்களுக்கு எல்லாம் இந்த உயரிய நோக்கங்கள் புரியாது.