“தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள் தேசத்தின் நலன்கருதி பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்து, மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கருணை வடிவாகக் காட்சி அளித்து அறிவுரை கூறி இருக்கிறார்.
இதனை அடுத்தவர்க்குச் சொல்வதற்கு முன்னதாக மதிப்புக் கூட்டு வரியை ஒன்றிய அரசு மொத்தமாக எடுத்துவிட்டு முழு தேசபக்தத் திலகமாகக் காட்சி அளிக்கலாமே? யார் தடுத்தது?
இதனை மற்றவர்க்குச் சொல்வதற்கு முன்னதாக, தானே குறைத்து, மக்களின் சுமையைக் குறைத்து மக்கள் திலகமாகவே காட்சி அளிக்கலாமே? யார் குறுக்கே நிற்பது?
2014 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி ‘மக்களுக்கு சுமையைக் கூட்டியது' யார்?
2014 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி ‘தேசநலனைக் கெடுத்தது' யார்? யாராவது வெளிநாட்டில் இருந்து இந்தச் சதியைச் செய்து விட்டார்களா? அன்னியச் சதியா இது?
சர்வதேசச் சதியா இது? அல்லது இதற்கும் ஜவஹர்லால் நேரு அவர்கள்தான் காரணமா? ஆவியாய் நடமாடி, நேருவே இப்படிச் செய்ய வைக்கிறாரா? பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவே உயர்த்தாத ஒருவர் தான் “தேசத்தின் நலன் கருதி” என்ற வார்த்தையையோ, “மக்களின் சுமை” என்ற சொல்லையோ பயன்படுத்த வேண்டுமே தவிர, அதே வேலையை இன்று வரை பார்த்துக் கொண்டு இருக்கும் பிரதமர் அப்படிச் சொல்லக் கூடாது. சொல்வதற்கான உரிமை இல்லை.
இந்தக் குற்றச்சாட்டுகளை எங்கே வைத்துச் சொல்கிறார் பிரதமர்? சொன்ன இடமே தவறானது. கொரோனா தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களின் கூட்டம் நடக்கிறது. மீண்டும் கொரோனா பரவுமானால் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுப்பது என்பது தொடர்பான கூட்டம் அது. அதில் பெட்ரோல், டீசல் விலை குறித்துப் பேசியதே தவறு. அதுவும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயரைச் சொன்னது அடுத்த தவறு.
தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைக் குற்றம் சாட்டி உள்ளார் பிரதமர். கொரோனாவுக்காக கூட்டி வைத்துக் கொண்டு அதில் பெட்ரோல், டீசல் விலையைப் பற்றி பேசுவானேன்? இது முதலில் தார்மிக நெறிமுறையும் அல்லவே!
அப்படிச் சொல்லும் குற்றச்சாட்டில் குறைந்தபட்ச நியாயம் இருக்க வேண்டும். அதுவும் இல்லை. அதனால்தான், ‘முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது' என்று ஒற்றை வரியில் பிரதமர் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
‘நாங்கள் குறைத்துக் கொண்டோம்' என்றார் பிரதமர். அது சில மாநில சட்டமன்றத் தேர்தலுக்காகச் செய்யப்பட்ட அரசியல் நாடகம் அல்லாமல் வேறு என்ன? நான்கு மாத காலம் இதன் விலைகள் உயராமல் இருக்க என்ன காரணம்? உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்தான் காரணம். அந்த தேர்தல்கள் முடிந்ததும் மீண்டும் விலைகள் உயர்ந்து விட்டதே?
அப்படியானால் பெட்ரோல், டீசல் உயர்வு என்பது கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்ததாக இல்லை, பா.ஜ.க.வின் கட்சி நிலைமையைப் பொறுத்ததாக இருந்தது. இருக்கிறது. 2014 முதல் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதும் அதற்கு ஏற்றாற்போல் விலையைக் குறைக்காமல், கிடைத்த வருவாயைத் தனதாக்கிக் கொண்டது யார்? என்று முதலமைச்சர் அவர்கள் கேட்ட கேள்விக்கு பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டும்.
மத்திய கலால் வரி, ஒன்றிய தல வரி, தலமேல் வரி ஆகியவற்றை மாநில அரசுகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த வருவாயில் கை வைத்தது யார் என்று முதலமைச்சர் கேட்ட கேள்விக்கு பிரதமர் அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தை வைத்தே நாம் நமது கேள்வியை எழுப்பலாம். 2020-21 ஆம் ஆண்டு மட்டும் பெட்ரோல், டீசல் மூலமாக ஒன்றிய அரசுக்கு 3 லட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது 2019-20 ஆம் ஆண்டைவிட 63 சதவிகிதம் அதிகம். அப்படியானால் மக்கள் முதுகில் 63 சதவிகித சுமையை வைத்தது யார்? 63 சதவிகித அளவுக்கு தேசத்துரோகத்தைச் செய்திருப்பது யார்? 2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த போது இருந்த பெட்ரோல், டீசல் விலை என்ன? இன்றைய விலை என்ன? பெட்ரோலுக்கான ஒன்றிய அரசின் வரி 3 மடங்கு உயர்ந்துள்ளது.
அப்படியானால் இது 3 மடங்கு தேசத்துரோகம் ஆகாதா? டீசலுக்கான ஒன்றிய அரசின் வரி 7 மடங்கு உயர்ந்துள்ளது. அப்படியானால் இது 7 மடங்கு தேசத் துரோகம் ஆகாதா? திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலையை குறைப்போம் என்று சொல்லி இருந்தது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. எந்த பிரதமரும் உத்தரவிட்டு இதனை தி.மு.க. அரசு செய்ய வில்லை. தேச நலன் கருதி செய்யப்பட்டதுதான் இந்த விலைக் குறைப்பு. மக்கள் சுமையைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டதுதான் இந்த விலைக் குறைப்பு.
கர்நாடக, குஜராத் மாநிலங்கள் வரியைக் குறைத்துள்ளதால் ஏற்பட்டுள்ள இழப்பை பிரதமர் சுட்டிக் காட்டி உள்ளார். அப்போது, தமிழ்நாடும் குறைத்துள்ளதைச் சொல்லி இருந்தால் அவர் அனைவர்க்குமான பிரதமராக காட்சி அளித்திருப்பார்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை மட்டும் சொல்லி, தன்னை பா.ஜ.க. பிரதமராகக் காட்டிக் கொண்டுள்ளார். கர்நாடகாவுக்கும், குஜராத்துக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதே நேரத்தில் தமிழ்நாடு அரசுக்கும் 1,600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதே, அதைச் சொல்லி இருக்க வேண்டாமா பிரதமர்?
தி.மு.க. அரசு தனது தேசநலனை, மக்கள் நலனை வெளிப்படுத்திவிட்டது. ஒன்றிய பா.ஜ.க. அரசு, தனது வரிகளை எடுத்து விட்டு முழுத் தேசபக்தர்களாக முகம் காட்ட வேண்டும். அதுதான் இந்திய மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு ஆகும். உங்கள் தேசபக்தியின் அளவு என்ன? காட்டுங்கள்!