முரசொலி தலையங்கம்

கிராமப்புற மேம்பாட்டின் மிக முக்கிய நகர்வு.. தத்துவார்த்த மூவேந்தர்களின் கனவுகளை நிறைவேற்றும் முதல்வர்!

‘திராவிட மாடல்' முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது தத்துவத்தை ஒற்றை வரியில் விளக்கினார்: ‘எல்லார்க்கும் எல்லாம்' என்பதுதான் அவரது கொள்கை முழக்கமாக இருக்கிறது.

கிராமப்புற மேம்பாட்டின் மிக முக்கிய நகர்வு.. தத்துவார்த்த மூவேந்தர்களின் கனவுகளை நிறைவேற்றும் முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“இந்தியா என்பதே கிராமங்களில்தான் வாழ்கிறது” என்றார் தேசத்தந்தை காந்தி. கிராம ராஜ்யத்தையே தனது ராமராஜ்யம் என்று சொன்னார் அவர்.

கிராமப் புற பஞ்சாயத்துகளை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளாக மாற்ற வேண்டும் என்ற போது அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஏனென்றால் அவை சாதியால் பிளவுபட்டுக் கிடக்கிறது, தீண்டாமையை வளர்க்கிறது, மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறது என்றார் அம்பேத்கர்.

தந்தை பெரியாரின் கருத்தும் இதுதான்!

‘கிராமங்களை மேம்படுத்த வேண்டுமானால் அதனை சிறுசிறு நகரங்களைப் போல மாற்றியாக வேண்டும். கிராமங்களை அப்படியே வைத்திருப்பது கிராமங்களைக் காப்பாற்றுவது ஆகாது' என்றார் பெரியார். அவரது முழுமையான உரை, ‘கிராம சீர்திருத்தம்' என்ற தலைப்பில்தான் வெளியானது.

காந்தி, அம்பேத்கர், பெரியார் ஆகிய மூன்று முக்கியமான ஆளுமைகளின் கருத்துக்களையும் ஒருசேரப் பார்த்து ஒரு கருத்தை உருவாக்கியாக வேண்டும். கிராமங்களுக்கு முக்கியத்துவம் தந்தாக வேண்டும், அதே நேரத்தில் கிராமங்களை அப்படியே வைத்துக் கொண்டு இருக்க முடியாது. கிராமப்புறங்களுக்கு முக்கியத்துவம் என்பது, அதனை வளப்படுத்துவதாக அமைய வேண்டும். அந்த வளம் என்பது அனைவருக்குமான வளமாக அமைய வேண்டும். எல்லாருக்குமான வளர்ச்சியாக அது அமைய வேண்டும்.

‘திராவிட மாடல்' முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது தத்துவத்தை ஒற்றை வரியில் விளக்கினார்: ‘எல்லார்க்கும் எல்லாம்' என்பதுதான் அவரது கொள்கை முழக்கமாக இருக்கிறது. அனைத்துத் துறையிலும் வளர்ச்சி - அனைத்து சமூக வளர்ச்சி - அனைத்து மாவட்ட வளர்ச்சி - அனைத்து ஊரின் வளர்ச்சி என்பதை திரும்பத்திரும்ப முதலமைச்சர் அவர்கள் சொல்லி வருகிறார்கள். இந்த இடத்தில்தான் காந்தியும், அம்பேத்கரும், பெரியாரும் ஒரு சேரப் பொருந்திப் போகிறார்கள்.

கிராமங்களைக் காப்போம் - அதேநேரத்தில் கிராமங்களை அனைத்து வகையிலும் மேம்படுத்தியதாக மாற்றுவோம் என்பதுதான் முதலமைச்சரின் சிந்தனையாக இருக்கிறது. வேளாண்மை உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளைப் பாதுகாக்கவும், முதல்முறையாக வேளாண்மைக்கென்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத மாபெரும் முயற்சி இது.

வேளாண்மையை உயிர்காப்புத் துறையாகவும், அதனை அதிக லாபம் தரும் தொழிலாகவும் மாற்றுவதற்கு அரசு முயற்சிகள் எடுத்துள்ளதன் அடையாளம் இது. இது கிராமப் புற மேம்பாட்டின் மிக முக்கியமான நகர்வு ஆகும். இதன் தொடர்ச்சியாக பல முக்கியமான அறிவிப்புகளை முதலமைச்சர் அவர்கள் செய்துள்ளார்கள். கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திடவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும், நவம்பர் 1 அன்று உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும்.

 ஆண்டுக்கு நான்கு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இனி ஆறு முறை நடத்தப்படும். ஜனவரி 26, மார்ச் 22, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, நவம்பர் 1 ஆகிய நாட்களில் கிராம சபைக்கூட்டங்கள் நடக்கும். குடியரசு தினம், உலகத் தண்ணீர் தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி பிறந்தநாள், உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடக்க இருக்கிறது.

ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாதாந்திர அமர்வுப் படி உயர்த்தித் தரப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் தங்களின் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகளைக் கண்காணித்திட வாகனங்கள் வழங்கப்படுகிறது.

கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக்கொணரும் வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், சிறப்பாக நிர்வகிக்கும் கிராம ஊராட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து உத்தமர் காந்தி பெயரில் விருது வழங்கப்படும்.

இவை அனைத்துக்கும் மேலாக ‘கிராம செயலகம்' அமைக்கப்பட உள்ளது. இதுதான் மிகமிக முக்கியமானது.. கிராம அளவில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு மட்டுமே அலுவலகங்கள் தனித்தனியே செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், பிற துறைகள் மூலம் கிராமங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து, அதனைக் கண்காணிக்க கிராம அளவில் கிராமச் செயலகங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த புதிய முன்னெடுப்பின் முதற்கட்டமாக, இந்த ஆண்டு 600 புதிய கிராமச் செயலகக் கட்டடங்கள், ஒவ்வொன்றும் சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். - இவைதான் முதலமைச்சர் வெளியிட்ட கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமாகும். காந்தி, அம்பேத்கர், பெரியார் ஆகிய மூவரின் சிந்தனைகளும் உள்ளடக்கிய முன்னெடுப்புதான் இது.

பேரூராட்சித் தலைவர்கள் பயிற்சி முகாமில் பேசும் போது முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள்:

“என்ன செய்கிறோம் என்பதை விட எப்படிச் செய்கிறோம் என்பதே முக்கியம் என்றார் மகாத்மா காந்தி அவர்கள். இந்தியாவே கிராம ராஜ்யமாக ஆக வேண்டும் என்று கனவு கண்டவர் காந்தி அவர்கள். தந்தை பெரியார் அவர்கள் கிராமம் - நகரம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் - கிராமங்கள் அனைத்தும் சிறுசிறு நகரங்களாக மாற வேண்டும் என்று சொன்னார்கள். அதனைத் தான் அனைவருக்குமான வளர்ச்சி - திராவிட மாடல் வளர்ச்சியாக தமிழக அரசு முன்மொழிந்து செயல்பட்டு வருகிறது. இத்தகைய திராவிட மாடல் வளர்ச்சியை உங்களது ஒவ்வொரு பேரூராட்சியும் அடைய வேண்டும்.

ஒவ்வொரு பேரூராட்சியும், மாதிரி பேரூராட்சி என்று சொல்லத்தக்க வகையில் அமைய வேண்டும். நீங்கள் அதனை அமைக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கான வீடுகளைக் கட்டி இருப்பீர்கள். அதனை உங்கள் கனவுகளுக்கு ஏற்ப கட்டி இருப்பீர்கள். இப்போது உங்கள் கையில் ஒரு பேரூராட்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை உங்களது கனவுகளைச் செயல்படுத்தும் பேரூராட்சியாக மாற்றிக் காட்டுங்கள்” என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இதனை நோக்கிய முன்னெடுப்புகளாக இவை அமைந்துள்ளன. தத்துவார்த்த மூவேந்தர்களின் கனவும் நிறைவேறட்டும்!

banner

Related Stories

Related Stories