முரசொலி தலையங்கம்

”உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம்”... துக்ளக் இதழுக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!

‘பெரியாரியம்’ என்பது மனிதனை மனிதனாக மதிப்பது. ஒரு மனிதன் தான் யாருக்கும் அடிமையல்ல என நினைப்பது.

”உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம்”... துக்ளக் இதழுக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஏப்ரல்.09 2022) தலையங்கம் வருமாறு:

‘பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியாரின்சிந்தனைகள் தொகுக்கப்பட்டு 21 மொழிகளில் வெளியிடப்படும்’ என்று தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த பிறகுசிலருக்கு ஏற்பட்டுள்ள எரிச்சலும் வன்மமும் அளவுக்கு அதிகமானதாக மாறி இருக்கிறது. ‘துக்ளக்’ என்ற தனிச்சுற்று இதழில் வாராவாரம் திட்டி எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.

காலம் காலமாக இவர்கள் புனிதம் என்று காப்பாற்றி வைத்துள்ள ஆபாசங்கள் அத்தனையையும் அம்பலப்படுத்தி விடு வார்களே என்ற வயிற்றெரிச்சலில் இவர்கள் புளியேப்பக் கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

தங்களது ஜாதி, வர்ணாசிரம, சனாதன வன்மங்களுக்கு மதப்போர்வை போர்த்தி மறைத்து வைத்திருப்பதை தமிழ் மண்ணில் - தமிழர்கள் மத்தியில் தந்தை பெரியார் வெளிப்படுத்தியதை இனி எல்லா மொழி மக்களும் படித்தால் என்ன ஆகும் என்ற பயத்தில் பதறுகிறார்கள்.

பெரியார் சொல்லாததை எல்லாம் சொன்னதாக இவர்களே கற்பனையில் வடித்துக் கொண்டு, இதெல்லாம் மற்ற மொழிகளுக்குப் போனால் நாற்றம்எடுக்கும் என்றெல்லாம் அவர்கள் எழுதி வருகிறார்கள். ‘புராணங்கள்’ என்ற பெயரால் எழுதி வைத்துள்ள கதைகளை இவர்கள் இவர்களது பத்திரிகைகளில் தொடர் கதைகளாக வெளியிடலாமே? அதனாலாவது ‘துக்ளக்’ கூடுதலாகக் கொஞ்சம் விற்குமே? ஆபாசத்தைப் பற்றி யார் பேசுவது? அதற்கு அருகதை வேண்டாமா?

பெரியார் பேசினார். உண்மையை மட்டுமே பேசினார். உண்மையை உரக்கப் பேசினார். யாருக்கும் தயங்காமல் பேசினார். தடுமாற்றம் இல்லாமல் பேசினார். கடைசி வரைக்கும் பேசினார். கடைசி வரைக்கும் மாறுதல் இல்லாமல் பேசினார். அதனால்தான் அவர் பெரியார். அத்தகைய சுய சிந்தனையே அவரை 95 வயது வரைக்கும் வாழ வைத்தது. மரணித்த பிறகும் - அரை நூற்றாண்டு கழிந்த பிறகும் அவரை அவரது எதிரிகள் மறக்காமல் இருப்பதற்கு அந்த சுய சிந்தனைதான் காரணம்.

சுயநலச் சிந்தனை இல்லாதவராக அவர் இருந்தார். சுயநலத்தோடு செயல்பட்டு இருந்தால் அவரை வாழ்ந்தபோதே வீழ்த்தி இருப்பார்கள். “நான் அரசியலில் பல்வேறு குட்டிக்கரணங்கள் போட்டிருக்கலாம். ஆனாலும் நான் உயிரோடு இருக்கக் காரணம், பொதுவாழ்வில் அளவுக்கு மீறி நான் கடைப்பிடித்த நாணயம்தான் என்னைக் காப்பாற்றி வருகிறது” என்று சொன்னவர் அவர்.

“நான் பல முடிவுகளை மாற்றி மாற்றி எடுத்திருக்கலாம். எந்த முடிவும் சுயநலத்துக்கான முடிவுகள் அல்ல, பொதுநலத்துக்கான முடிவுகள்தான் என்பது மக்களுக்குத் தெரியும்” என்று சொன்னவர் அவர். அதனை தமிழ் மக்கள் உணர்ந்தார்கள். அதனால்தான் அவரை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் நாத்திகர்கள் அல்ல. அதில் பலரும் ஆத்திகர்களாக இருந்தார்கள். அதுதான் பெரியாருக்கும் பெருமையானதாக இருந்தது. இதனை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது. ‘பெரியாரியம்’ என்பது கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு மட்டுமல்ல; அப்படிச் சிலர் இன்றும் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.

‘பெரியாரியம்’ என்பது மனிதனை மனிதனாக மதிப்பது. ஒரு மனிதன் தான் யாருக்கும் அடிமையல்ல என நினைப்பது. தனக்கு யாரும் அடிமையல்ல என்று நினைப்பது. பெண்ணைத் தனக்குச் சமமாகக் கருதுவது. பெண்ணை மனித உயிராக மதிப்பது. தலைவிதியை நம்பாதே, உன் உழைப்பை நம்பு என்று சொல்வது.

அவர் சொன்னார், இவர் சொன்னார் என நம்பாதே- உன் மூளை என்ன சொல்கிறதோ அதன்படி நட என்று சொல்வது. தன்னம்பிக்கையை உருவாக்குவது. பழமை என்பது உனது கால் சங்கிலியாக இருந்தால் அதை உடை என்பது. சம்பிரதாயங்கள் உனது கையைக் கட்டி இருக்குமானால் அதை வெட்டி விடு என்பது. மொத்தமாகச் சொன்னால் மூளைத் தடைகளை முறிக்கும் மருந்தே பெரியாரியம். அதனால்தான் மூடர்களுக்குக் கோபம் வருகிறது.

“உண்மையில் எனது தொண்டு என்பது ஜாதி ஒழிப்புத் தொண்டுதான்”என்பதைத் திரும்பத் திரும்பச் சொன்னவர் பெரியார். அதற்கு எதெல்லாம் தடையாக வந்ததோ அவை அனைத்தையும் உடைத்தவர் பெரியார்.

“பொதுமக்களின் சுயமரியாதைக்கும் உரிமைக்கும் விடுதலைக்கும் ஆபத்தானது எது என்று எதைக் கருதினாலும் அதனை அழிக்க நான் பின்வாங்க மாட்டேன்’’ என்று சொல்லி அதன்படியே நடந்தவர் பெரியார்.

“நான் ஒரு புது மதத்தைப் போதிக்க வரவில்லை. ஒழுக்கத்துக்கு விரோதமானதைப் பின்பற்றாதீர்கள் என்கிறேன். ஒழுக்கமாகவும், உண்மையாகவும், மற்ற மக்களிடம் அன்பாகவும் நடந்துகொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம்’’ என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார் பெரியார்.

ஒழுக்கமாய் இரு- அனைவரிடமும் அன்பாக இரு - உயர்வு தாழ்வு இல்லை - மேல், கீழ் இல்லை என்று சொல்வது ‘துக்ளக்’ பாரம்பர்யத்துக்குப் பிடிக்காத கொள்கை என்பதற்கு பெரியார் என்ன செய்ய முடியும்? பெரியார் என்பவர் மொழி கடந்தவர், நாடு கடந்தவர் என்பதற்குக் காரணம்; அவர் சொன்ன தத்துவம் என்பது தமிழுக்கும் தமிழ்நாட்டுக்குமானதாக மட்டும் இல்லை. சுயமரியாதை - பகுத்தறிவு - சமதர்மம் -சமத்துவம் -விடுதலை - மானுடப்பற்று - இரத்தபேதம் இல்லை - பால்பேதம் இல்லை - ஆகிய சொற்கள் எல்லை கடந்தவை ஆகும்.

அதனால்தான் மொழி கடந்து, நாடு கடந்து ‘எங்கள் பெரியார்’ செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நினைக்கிறார்கள். இதைப் பார்த்து உங்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும்!

banner

Related Stories

Related Stories