முரசொலி தலையங்கம்

“உலகளாவிய அளவில் தனது கொடியை ஏற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..வரலாறு பதிக்கும் முயற்சி”: முரசொலி பாராட்டு!

மாநில முதலமைச்சர்களை ‘நாடுகள்' வரவேற்பது இல்லை. ஆனால் மு.க.ஸ்டாலினை நாடு வரவேற்றுள்ளது. காரணம், தமிழ்நாட்டில் முதலமைச்சர் என்பதால்.

“உலகளாவிய அளவில் தனது கொடியை ஏற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..வரலாறு பதிக்கும் முயற்சி”: முரசொலி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘துபாய் செல்ல இருக்கிறார் முதலமைச்சர்' - என்பது முதல் கட்டச் செய்தி! ஆனால் செய்தியை வரலாறு ஆக்கிவிட்டுத் திரும்பி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இன்றைய செய்தி இன்றே வரலாறு ஆகிறது. அதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தனி முத்திரை ஆகும். துபாய் செல்வதும், தொழிலதிபர்களைச் சந்திப்பதும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதும் எனபதுமான செய்திகளைத் தாண்டி செய்திகள் இன்று வலம் வரத் தொடங்கி இருக்கின்றன.

அதுதான், உலகளாவிய தனது கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவிட்டார் என்பது! துபாய் நாடு அவருக்குக் கொடுத்த மரியாதை என்பது எந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கும் சாதாரணமாகக் கிடைத்துவிடும் மரியாதை அல்ல.

மாநில முதலமைச்சர்களை ‘நாடுகள்' வரவேற்பது இல்லை. ஆனால் மு.க.ஸ்டாலினை நாடு வரவேற்றுள்ளது. காரணம், தமிழ்நாட்டில் முதலமைச்சர் என்பதால். உலகம் முழுவதும் பரந்து விரிந்த தமிழ்ப் பேரினத்தின் தலைவர் என்பதால் இத்தகைய வரவேற்பை அந்த நாடு வழங்கியது.

ஒரு மாநிலத்தின் எல்லையைக் கடந்து ஒரு இனத்தின் தலைவராக அவரை அடையாளம் கண்டதால் இத்தகைய வரவேற்பை அந்த நாடு வழங்கி இருக்கிறது. தமிழ்ப்பேரினத்தின் தலைவராக அவரை அடையாளம் காட்டும் நிகழ்ச்சி ஒன்றும் துபாயில் நடந்துள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசிய ஒவ்வொரு சொல்லும் தமிழினத்தின் தலைவரின் முழக்கமாக அமைந்திருந்தது.

* தமிழர்கள், தமிழ்நாட்டில் மட்டுமல்ல - உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சியம் ஆகும். அப்படித் தலை நிமிர்ந்து துபாய் நாட்டில் வாழ்ந்து வரும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

* உங்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த நாட்டையும் வளப்படுத்துங்கள்.

* இந்த நாட்டின் குடிமக்களாக நாட்டுப்பற்றுடன் வாழுங்கள். அதேநேரத்தில் நாம் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடாமல் வாழுங்கள்.

* நீங்கள் வாழும் நாட்டை முன்னேற்றுங்கள். இந்த நாட்டின் வளத்தையும், அறிவையும், தொழில் நுட்பத்தையும் தமிழ்நாட்டுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

* கடல் கடந்து வாழ்ந்து வரும் நீங்கள் அனைவரும் மொழியால் தமிழர்கள், இனத்தால் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக வாழ வேண்டும். சாதியோ, மதமோ உங்களை பிளவுபடுத்தக் கூடாது. இத்தகைய பிளவுபடுத்தும் சக்திகளை உங்களுக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.

* எது நம்மை ஒற்றுமைப்படுத்துகிறதோ அதற்கு முக்கியத்துவம் தாருங்கள். எது நம்மை பிளவுபடுத்துகிறதோ அவை அனைத்தையும் உதறித்தள்ளுங்கள்.

* பேதமற்ற சமூகமே, அனைத்திலும் வளர்ச்சியைப் பெறும் என்பதை மனதில் வையுங்கள். அதனால்தான் அனைவர்க்குமான வளர்ச்சி, அனைத்துக்குமான வளர்ச்சி என்ற இலக்கை முன்வைத்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

* நம்மை நாடுகள் பிரிக்கிறது. நிலங்கள் பிரிக்கிறது. ஆனாலும் மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு.

* நான் நம்பர் ஒன் என்பதை விட தமிழ்நாடு நம்பர் ஒன் ஆக வேண்டும் என்று நான் உழைத்து வருகிறேன். அதற்கு கடல் கடந்து வாழக் கூடிய தமிழர்கள் உதவி செய்ய வேண்டும்.

* தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வளர்கிறது என்றால் அந்த வளர்ச்சியில் உங்களுக்கும் பங்கு இருக்க வேண்டும்.

* தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு அமைந்துள்ளது என்றால் -அது ஒரு கட்சியின் அரசு அல்ல, ஒரு இனத்தின் அரசு.

* பேரறிஞர் அண்ணா சொன்னதைப் போல யாரையும் தாழ்த்தாமல் - யாருக்கும் தாழாமல் - யாருக்கும் அடிமையாக இல்லாமல் -யாரையும் அடிமைப்படுத்தாமல் - வாழ வேண்டும். ஒரு தாய் மக்களாக வாழுங்கள்.

* கல்வியிலும் வேலை வாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணுங்கள்.

* எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை என்பதைப் போல தமிழை - தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள்.

* தமிழால் இணைவோம். தமிழராய் இணைவோம்! தமிழை வளர்ப்போம். தமிழரை வளர்ப்போம்! - இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் - தமிழ்நாட்டின் முதலமைச்சர் - தமிழினத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள உலகளாவிய முழக்கத்தின் உள்ளடக்கம் ஆகும்.

தமிழினத்தை சாதியின் பேரால், மதத்தின் பேரால் பிளவுபடுத்தும் சக்திகள் அதிகமாகி வரும் சூழலில் இத்தகைய தமிழினக் குரலை முன்னெடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். பேதமற்ற சமுதாயமே அனைத்திலும் வளர்ச்சி பெறும் என்கிற கருத்துதான் இன்றைய தினம் முன்னேற்றத்துக்கு வழி வழிக்கும் கருத்தாகும்.

தமிழினம் கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னேறிய இனமாக மாறி வருகிறது. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு மேன்மை அடைந்து வருகிறது. தமிழ் மொழியைப் போற்றும் அரசாக தமிழ்நாடு அரசு இருப்பதால் இலக்கியம் செழிக்கத் தொடங்கி இருக்கிறது. இலக்கியவாதிகளை அவர்கள் வாழும் காலத்திலேயே அரசு போற்றிப் பாராட்டி வருகிறது. இதனைச் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களது அண்டசாரங்களும் எரிகிறது. அதனால் தான் தமிழினத்தை சாதியை, மதத்தைச் சொல்லி பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள். அத்தகைய பிளவுபடுத்தும் சக்திகளைத்தான் தனது உர மேற்றிய முழக்கத்தால் அம்பலப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

துபாயில் ஐந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் - 2600 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் - 9700 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது மாபெரும் சாதனை என்றால் - அதனையும் தாண்டிய சாதனையாக இந்த முழக்கம் அமைந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துபாய் சென்றார். அபுதாபி சென்றார். அங்கிருந்து உலகக் கொடியை ஏற்றி விட்டு வந்திருக்கிறார் என்பதே வரலாறு பதிய வைக்கும் வரலாறு ஆகும்! தமிழ்நாட்டு முதலமைச்சரே வருக! - என்பதைத் தாண்டி உலகத் தமிழினத்தின் தலைவரே வருக வருக என்று அவரை வாழ்த்தி வரவேற்போம்!

banner

Related Stories

Related Stories