முரசொலி நாளேட்டின் இன்றைய (பிப்.23 2022) தலையங்கம் வருமாறு:
உத்தரப்பிரதேசம் என்ற மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்துகொண்டு இருக்கி றது. ஏதோ இந்தியாவின் ‘தலையில் பிறந்த மாநிலம்' போல அதற்கு அனைவரும் மகுடம் சூட்டுவார்கள். உ.பி.யைப் பிடிப்பது இந்தியாவைப் பிடிப்பது போலச் சொல்லப்படும். ஆனால் அந்த மாநிலம் எத்தகைய வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று பார்த்தீர்களா? எதற்கெடுத்தாலும் தமிழ் நாட்டைக் குறைசொல்லும் குறைவேக்காடுகள் உத்தரப்பிரதேசத்தின் யதார்த்தமான நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
மனித வள மேம்பாட்டில் 35 ஆவது இடம். மேனிலைக் கல்வியில் 24 ஆவது இடம்.பள்ளிக் கட்டமைப்பில் 27 ஆவது இடம். பிறக்கும் குழந்தைகள் மரணத்தில் 35 ஆவது இடம். குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டில் 20 ஆவது இடம். தனிநபர் சராசரி உற்பத்தியில் 31 ஆவது இடம். பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்திருப்பதில் 30 ஆவது இடம். அலைபேசி வசதியில் 33 ஆவது இடம்.கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பில் 16 ஆவது இடம்.
(நன்றி: தீக்கதிர் 15.02.2022) - இதுதான் இன்றைய உ.பி.
இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையும், வேலையின்மையும் உயர்ந் துள்ளது. சாதி, மத மோதல்கள் அதிகமாகி உள்ளன. இதுதான் இன்றைய உ.பி. பிளவுபடுத்தும் சக்திகள் அதிக மானதுதான் இன்றைய உ.பி. இசுலாமியர்களும், தலித்துகளும் அச்சத்தில் வாழ்வதுதான் இன்றைய உ.பி.
2020 அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு அப்பாவிப் பெண், நான்கு பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இறந்த அந்த பெண்ணின் உடலை அவர்களது குடும்பத்துக்குக் கூட காட்டாமல், தராமல் போலீஸே எரித்துவிட்டார்கள். அந்தப் பெண்ணின் தந்தையை கடத்தி வைத்துவிட்டு இதனை செய்திருக்கிறார்கள்.
அந்த குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் அந்த ஊருக்குள் அனுமதிக்கவில்லை உ.பி.யை ஆளும் பா.ஜ.க. அரசு. பிரியங் காவை போலீஸார் பிடித்து தள்ளினார்கள். கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தையாரும் பார்க்க அனுமதிக்கவில்லை. அந்தப் பெண்ணின் குடும்பத்தை வீட்டுச் சிறையில் வைத்தார்கள். இது ஏதோ ஒரு சம்பவம் அல்ல. இப்படி எத்தனையோ சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கும் மாநிலம் அது.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிக்கை யாளர் சித்திக் காப்பான் கைது செய்யப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரை உ.பி அரசு சிறுநீர் கழிக்கக் கூட விடாமல் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளது. இந்நிலையில் சித்திக் காப்பானின் மனைவி ரைகாந்த் காப்பான், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு கடிதம் எழுதி, சித்திக்காப்பானை சித்திரவதையில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
பொதுவாகவே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் அது. பாலியல் பலாத்காரம் அதிகம் நடக்கும் மாநிலங்களில் முதலாவது இடத்தில் உத்தரப்பிரதேசம் இருக்கிறது. சிறுமிகள் பாலியல் பலாத்காரம் நடக்கும் மாநிலத்திலும் உ.பி. முதலாவது இடத்தில் இருக்கிறது. யோகி ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம்தான் பெண்களுக்கு அச்சம் தரும் முதல் மாநிலம். பாலியல் வன்முறைகள் அதிகம் நடக்கும் மாநிலம் என்று ஒன்றிய அரசின் புள்ளிவிபரமே சொல்கிறது.
2021 ஏப்ரல் மாதத்தில் ஒரு செய்தி வந்தது. உத்தரப்பிரதேசத்தில் உடலை எரிக்கும் கட்டைகளின் விலை மூன்று மடங்காகியுள்ளதோடு, உடலை எரிப்பதற்காக 5-6 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.ரேசன் கடையில் பொருள்களை வாங்க நிற்பது போல உடல்களை எரிக்க வரிசையில் காத்திருக்கிறார்கள் மக்கள் என்பதுதான் அந்தச் செய்தி.
உத்தரப்பிரதேசம் ஷாம்லியில் உள்ள காந்தலா சமூக சுகாதார மையத்தில் சரோஜ், அனார்கலி, சத்தியாவதி ஆகிய வயதான மூதாட்டிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதில் ஒரு பெண்ணுக்கு திடீரென உடல் நிலை மோசம் அடைந்தது. உடனே தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்ததை பின்னர் மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள்.
உத்தரப்பிரதேச அரசின் அலட்சியம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநலவழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரப்பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்கக்கேடானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழந்து வரும் நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளது என யாராவது கூறினால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். உத்தரப்பிரதேச கொரோனா நிலவரம் மோசமாக உள்ளது என செய்திகள் பரப்பப்பட்டால் அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருந்தார். மரணத்தோடு போராடிக் கொண்டிருந்ததன் தாத்தாவுக்காக, ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட இளைஞர் மீது, உத்தரப்பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கொரோனா மரணங்கள் மறைப்பு, மோசமான சுகாதார கட்டமைப்பு இருப்பதால் உத்தரப்பிரதேசம் இந்தியாவின் மோசமான கொரோனா பரப்பும் ஹாட் ஸ்பாட் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத், தனது மாநிலத்தைகேரளாவுடன் ஒப்பிட்டு இருந்தார். இதற்கு கடுமையான பதிலடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் கொடுத்து இருந்தார். “உத்தரப்பிரதேசம், கேரளாவாக மாறினால் மக்களுக்கு சிறந்த கல்வி, சுகாதாரம், சமூக நலன் ஆகியவை பெற முடியும். மதம் மற்றும் சாதியின் பெயரால் கொல்லப்படாத ஒரு நல்லிணக்க சமுதாயமாக மாறும்” என்று சொல்லி இருந்தார் பினராயி. அப்படியானால் அத்தகைய நல்லிணக்கமற்ற மாநிலமாக உ.பி. இருக்கிறது என்பதை இதன் மூலமாக உணரலாம்.
உடன்பிறப்புகளால் ஆளப்படும் ‘திராவிட மாடல்' ஆட்சியையும் உ.பி. பா.ஜ.க. ஆட்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!