கடந்த வாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்த இரண்டு முக்கியமான நிலைப்பாடுகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் இந்த அரசு எத்தகைய கவனத்துடனும் அக்கறையுடனும் இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
* நியூட்ரினோ
* கூடங்குளம்
- ஆகியவைதான் அந்த இரண்டு பிரச்சினைகளும்!
நியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பது மிக முக்கியமான சூழலியல் நிலைப்பாடு ஆகும்.
தேனி மாவட்டம் தேவாரம் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில், பல்லாயிரக்கணக்கான டன் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி, இலட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி எடுத்து, தரைக்கு உள்ளே 1.5 கிலோமீட்டர் ஆழத்தில் நீளவாட்டிலும், குறுக்குவாட்டிலும், சுமார் 3 கிலோ மீட்டர் நீளம் உள்ள இரண்டு குகைகளைக் குடைந்து, அங்கே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சித்து வருகின்றது.
வெடிமருந்து வைத்து பாறைகளை உடைப்பதால் ஏற்படும் அதிர்வுகளால், 30 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கி அணை, 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்படலாம் என்றும், நிலம், நீர், காற்று மண்டலத்துக்கும் பெரும் தீங்கு ஏற்படும் என்றும் சூழலியலாளர்கள் தொடர்ந்து சொல்லிவந்தார்கள். மக்களின் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு பிரதமர் மோடியிடம் திட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தார்கள்.
இத்திட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய ஒன்றிய மற்றும் மாநில அரசுளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை உறுதியுடன் கூறி இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதே முக்கியமானது என்பதால், நியூட்ரினோ திட்டத்தை அனு மதிக்க முடியாது எனத் தமிழக அரசு தெரிவித்து விட்டது. இத்திட்டம் அமையவுள்ள மதி கெட்டான் சோலை, புலிகள் இடம் பெயர்வுப் பாதையில் அமைந்துள்ளதால், இத்திட்டத்துக்கான வன உயிரியியல் வாரிய அனுமதி வழங்க முடியாது என மாவட்ட வனத்துறை அதிகாரி பரிந்துரைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், இந்தப் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும் என்றும், இந்த மலையில் மனிதச் செயல்பாடுகளால் சிறு அதிர்வுகள் ஏற்பட்டால்கூட புலிகளின் நடமாட்டம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இந்த மலைப்பகுதியை புலிகள் தவிர்க்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டு விடும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக அமைக்கப்படும் குகையானது மேற்பரப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டர் ஆழத்துக்கு பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டாலும் கூட அக்குகை அமைப்பதற்கான சுரங்கம் அமைக்கும் பணிக்கு வெடிபொருள் மற்றும் பிற பொருட்களை எடுத்துச் செல்லும் போக்குவரத்து, பெரிய பெரிய இயந்திரங்கள், மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் புலிகள் உள்ளிட்ட பல்வேறு வன உயினங்களின் நடமாட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, திட்டத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை மட்டுமல்ல, அதனைச் சுற்றியுள்ள மக்களையும் காக்கும் மகத்தான நிலைப்பாடாகும் இது. அடுத்தது, கூடங்குளம் அணுக்கழிவு விவகாரம் ஆகும். கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணு எரிபொருள் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தை அமைத்திடும் நடவடிக்கையைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தின் கீழ், அணு உலைகளிலிருந்து வெளியேறும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொதுமக்களிடையே உள்ள கவலையை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட ஆறு அணுமின் உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர், அந்த ஆறு அலகுகளில், அலகுகள் 1 மற்றும் 2 ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளதாகவும், அலகுகள் 3 மற்றும் 4 கட்டுமானத்தில் உள்ளதாகவும், அலகுகள் 5 மற்றும் 6 இன்னும் நிறுவப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆறு அணுமின் உலைகளிலிருந்து உருவாகும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே, அணு உலைக்கு அப்பால் சேமித்து வைப்பதற்கான வசதிகளை அமைக்க இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டிருப்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, தற்காலிகமாக அணுமின் நிலைய வளாகத்திற்குள் சேகரித்து, பின்னர் அதன் சொந்த நாடான ரஷ்யாவிற்கே திருப்பியனுப்பிட ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்துள்ளார் முதலமைச்சர்.
பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத் திற்குள், அணு உலைக்கு அப்பால் சேமித்து வைப்பதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் ஆபத்துகள் குறித்தும் எச்சரித்துள்ளார் முதலமைச்சர். பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் அதில் சொல்லி இருக்கிறார்.
“முதல்வர் அவர்களே! நீங்கள் எடுத்துள்ள முடிவு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென் இந்தியாவுக்கு, ஏன் இந்திய நாட்டுக்கே மிகப்பெரிய வழிகாட்டுதல் ஆகும்” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பாராட்டி உள்ளது. ஒப்பந்தத்தில் இருப்பதைத்தான் நிறைவேற்றச் சொல்கிறார் முதலமைச்சர். அதனையே நாம்தான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. வளர்ச்சி என்பது மக்களைப் பாதிக்காததாக இருக்க வேண்டும் என்பதையே தமிழக அரசின் இத்தகைய இரண்டு நிலைப்பாடுகளும் காட்டுகிறது.