முரசொலி தலையங்கம்

"முதல்ல ஏ.கே.இராஜன் குழுவின் அறிக்கையை முழுமையா படிங்க".. முரசொலி தலையங்கம் !

நீட் தேர்வுதான் ஏழை எளிய மக்களுக்குச் சாதகமானது என்றும் - அதில் தான் அரசுப் பள்ளி மாணவர்களால் உள்ளே நுழைய முடிகிறது என்றும் - இது சமூக நீதிக்கு ஆதரவான தேர்வு என்றும் ஆளுநர் ரவியும் சொல்லி இருக்கிறார்.

"முதல்ல ஏ.கே.இராஜன் குழுவின் அறிக்கையை முழுமையா படிங்க".. முரசொலி தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (பிப்.11 2022) தலையங்கம் வருமாறு:

‘நீட்’ தேர்வு நல்லதுதான் என்று அடம்பிடிக்கும் சிலர் அது குறித்து புதிதுபுதிதாகச் சில கேள்விகளை எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவை அனைத்துக்குமான பதில் இதற்கென தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவின் அறிக்கையிலேயே இருக்கிறது.

‘நீட்’ தேர்வுதான் ஏழை எளிய மக்களுக்குச் சாதகமானது என்றும் - அதில் தான் அரசுப் பள்ளி மாணவர்களால் உள்ளே நுழைய முடிகிறது என்றும் - இது சமூக நீதிக்கு ஆதரவான தேர்வு என்றும் ஆளுநர் ரவியும் சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவினர் பரிசீலிக்கவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

சுமார் ஒரு லட்சம் பேர் வரைக்கும் கருத்துப் பெற்று 120 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இவை அனைத்துக்குமான பதில்கள் முழுமையாக இருக்கிறது. ‘நீட்’ தேர்வை ஆதரிக்கும் குழுவினர் இந்த அறிக்கையை முழுமையாக வாசிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில நிலப்பரப்பில் 89.5 விழுக்காடு அளவுக்கு ஊரகப்பகுதியாக அடையாளப்படுத்தப்படுகிறது. மொத்த மக்கள் தொகையில் 52 விழுக்காடு மக்கள் ஊரகப் பகுதிகளில் வாழ்கின்றனர். (2011 மக்கள் தொகை கணக்கின்படி)

அறிக்கையின் அட்டவணை 7.23இல் - 2010 முதல் 2017க்கு இடையிலான கல்வியாண்டுகளில் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த சராசரியாக 61.45 சதவீத மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப்பெற்றுள்ளனர். ஆனால் ‘நீட்’ தேர்வு அமலான பிறகு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்ற ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் அளவு சராசரியாக 50.81 சதவீதமாகச் சுருங்கியுள்ளது. அதைப் போலவே சுயநிதிக் கல்லூரிகளில் சேரும் ஊரகப் பகுதி மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ‘நீட்’ தேர்வுக்கு முன் சராசரியாக 65 விழுக்காடு இடங்களைப் பூர்த்தி செய்து வந்த தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை, 2020-21 இல் 43.13 விழுக்காடாகச் சரிந்துவிட்டது. அதேவேளையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சராசரியாக 0.11 சதவிகிதம் இடத்தை மட்டுமே நிரப்பி வந்த சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் 2020-21 காலகட்டத்தில் 26.83 சதவீதமாக அதிகரித்துள்ளது. (அட்டவணை 7.16)

பெற்றோர் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் 10.45 சதவீதம் சரிந்துள்ளது. (அட்டவணை 7.52 (அட்டவணை 7.29)

ஊரக மாணவர்களை மருத்துவக் கல்விக்கு நுழைய விடாமல் தடுப்பதோடு அங்கு பயிற்சி மருத்துவர்களாகப் பயிலும் இளநிலை மாணவர்களுக்கான முதுநிலைச் சிறப்புத் தகுதிப்பாட்டினையும் ரத்து செய்து கிராமப்புறச் சுகாதாரச் சேவையினைப் பெரும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது ‘நீட்’ நுழைவுத் தேர்வு.

முதல் தலைமுறைப் பட்டதாரிகள் சேர்க்கை வீதம் 9.74 விழுக்காடாகச் சரிவைக் கண்டுள்ளது. (அட்டவணை 7.52) (அட்டவணை 7.26)

நடப்புக் கல்வியாண்டில் 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற முதன்முறைத் தேர்வர்களைவிட மீண்டும் மீண்டும் பயிற்சி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மறுதேர்வர்கள் அதிகமானோர் தேர்ச்சி பெறுகின்றனர். (அட்டவணை 7.38)

‘நீட்’ தேர்வுக்கு முந்தைய காலத்தில், மறு தேர்வர்களின் சராசரி சேர்க்கை விகிதம் 8.12 விழுக்காடு என்பதாக இருந்தது, இறுதியில், ‘நீட்’ தேர்வுக்குப் பிறகு, 2020-21 வாக்கில், அது 71.42 விழுக்காடு ஆக ஆனது (அட்டவணை 7.38 மற்றும் எண் 7.23).

முதல் முறை தேர்வர்களின் (நடப்பு மாணவர்கள்), ‘நீட்’ தேர்வுக்கு முந்தைய காலத்தின் சராசரி சேர்க்கை விகிதம் 91.87 விழுக்காடு என்பதிலிருந்து, 2020-21 இல் 28.58 விழுக்காடு என்பதாகக் குறைந்துள்ளது.

பெற்றோர் சராசரி ஆண்டு வருமானம் குறைவாக இருப்பதாலும், பயிற்சி வகுப்புகளுக்கான தொகையை செலுத்த முடியாதவர்களாக உள்ளனர். பயிற்சி வகுப்புகளைச் சார்ந்துள்ள ‘நீட்’ போன்ற நுழைவுத் தேர்வுகள், வறியவர்களுக்கு எதிரான, அணுக முடியாதவர்களுக்கு எதிரான அணுகல் உள்ளவர்களுக்குமே பயனளிப்பதாக உள்ளது;

பொதுப் போட்டி ஒதுக்கீட்டை பகுப்பாய்வு செய்வதானது, பி.சி./எம்.பி.சி./ எஸ்.சி./எஸ்.சி.ஏ./எஸ்.டி. பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் இடங்களை சராசரியாக எவ்வளவு இழந்துள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது. ‘நீட்’ தேர்வுக்கு முன்னதாக மற்றும் பின்னதாக என்று பார்க்கையில், (பி.சி.) பிரிவினர் 3 சதவிகிதம், (எம்.பி.சி.) பிரிவினர் 5 சதவிகிதம், (எஸ்.சி.) பிரிவினர் 1.6 சதவிகிதம் மற்றும் (எஸ்.சி.ஏ.) பிரிவினர் 0.2 சதவிகிதம் என்று இடங்களை இழந்துள்ளனர் (அட்டவணை 7.35 மற்றும் எண் 7.22). பொதுப் போட்டியில், எஸ்.டி. பிரிவினர் எந்தப் பங்கையும் பெறவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இந்த வேறுபாடுகளின் புள்ளியியல் முக்கியத்துவம், அட்டவணை 7.36. இல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலுள்ள பகுப்பாய்வு, அவர்கள் தொடர்பான ஒதுக்கீட்டிற்குள் மற்றும் பொதுப் போட்டியில் அவர்களுடையப் பங்கு என்று பார்க்கையில், பிற்படுத்தப்பட்ட மற்றும் சமூகத்தில் பின்தங்கியப் பிரிவினர், ‘நீட்’ தேர்வால் பாதிக்கப் பட்டிருப்பதை நிரூபிக்கிறது.

இத்தகைய அநீதித் தேர்வு ஒழுங்காக நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை. தேர்வாளர்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உதவுதல் மற்றும் ஏதேனும் நபருடன் தேர்வின்போது தொடர்புகொள்ள அல்லது உரையாட முயல்வது போன்ற முறைகேடுகள், ‘நீட்’ தேர்வில் வழக்கமான நடைமுறை களாக மாறியுள்ளன. தேர்வெழுத மாற்று நபர்களை பயன்படுத்துதல், ‘நீட்’ மதிப்பெண்ணில் திருத்தம், இரட்டைக் குடியிருப்பு முறையைப் பயன்படுத்துதல், போலி எச்.எஸ்.சி. சான்றிதழைப் பயன்படுத்துதல், நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவது, தேர்வு அமைப்பாளருக்கு லஞ்சம்கொடுப்பது உள்ளிட்ட ‘நீட்’ தேர்வு தொடர்பாக பல்வேறு வகையான மோசடிகளை, பல செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன.

இத்தகைய மோசடித் தேர்வைத்தான் சிலர் ஆதரிக்கிறார்கள். இதனை ஒன்றிய அரசும், ஆளுநரும் ஆதரிப்பதுதான் வேதனைக்குரியது.

banner

Related Stories

Related Stories