நெருக்கடிகள் சூழ்ந்து நிற்கும் போதுதான் தலைவர்கள் உயர்ந்து தெரிவார்கள்! இதோ... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார்! இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சித் தத்துவத்தின் தலைவராக! மாநிலங்களின் சுயாட்சி முதல்வராக!
நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெரும் சட்டமுன்வடிவை ஆளுநர் பிப்ரவரி 1ஆம் தேதி திருப்பி அனுப்புகிறார். 8 ஆம் தேதி மாலையில் அதே ஆளுநர்க்கு அந்த சட்டமுன்வடிவு மீண்டும் தயாரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. என்ன வேகம், இந்த வேகம்! என்ன விவேகம், இந்த விவேகம்! என்ன வீரம், இந்த வீரம்!
திருப்பி அனுப்பினால் - திருப்பி அனுப்புவோம் - என்பதுதான் அஞ்சாமை. துணிவுடைமை! அத்தகைய குறள் நெறியின் வாழும் எடுத்துக்காட்டாக இருக்கிறார் நம் முதல்வர்!
‘நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார்’ என்ற செய்தி சிலரை மகிழ்ச்சி அடைய வைத்தது. அந்தச் சிலர் காலம் காலமாக தமிழ்க்குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக்காம்புகள் என்பது அனைவருக்கும் தெரியும். திருப்பி அனுப்பியதன் மூலம் அதிகாரக் குவியலை வீழ்த்தும் கோடரியாக மாறியிருக்கிறார் முதல்வர்.
ஏதோ ஒரு சட்டமுன்வடிவைக் கொண்டு வந்தோம் - ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்ற நிர்வாக நடைமுறை நிகழ்ச்சியாக இல்லாமல் இதனை மாநில சுயாட்சியாகவும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் முதல்வர் கணித்ததுதான் அவர் எந்தப் பரம்பரைக்காரர் என்பதைத் தெளிவுபடுத்தியது.
அவரே தனது சட்டமன்ற உரையில் ‘திராவிட லெனின்’ என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்ட நீதிக்கட்சித் தலைவர் டி.எம்.நாயரையும், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களையும், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களையும் குறிப்பிட்டார்கள். அந்தப் பரம்பரையில் வந்தவராக உயர்ந்து நின்றார் மு.க.ஸ்டாலின்.
‘நமக்கு உடனடியாகத் தேவைப்படும் அரசியல் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் சென்னை விக்டோரியா அரங்கில் 1917 ஆம் ஆண்டு பேசினார் டி.எம்.நாயர் அவர்கள். அவரது சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைந்தது இன்றைய முதல்வரின் பேச்சு.
மாநிலங்களை நிர்வாகத்துக்கு வசதியாக மாற்ற வேண்டும் என்றும், மொழி அடிப்படையில் மாகாணங்களைப் பிரிக்க வேண்டும் என்றும், இந்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்றும், பல உரிமைகள் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அன்று முழங்கினார் டி.எம்.நாயர்.
Federal system (கூட்டாட்சி முறை), Self government ( மாநில சுயாட்சி) என்ற சொற்களை அன்று அவர் பயன்படுத்தினார். அதுதான் 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாகாணத் தத்துவமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத்தான் அனைவர்க்கும் புரியும் மொழியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கேட்டார்கள்.
‘ஆட்டி வைப்பவர்கள் அங்கே! ஆடும் பதுமைகள் இங்கே!’ ‘எசமானர்கள் அங்கே! ஏவலர்கள் இங்கே!’ ‘டில்லியின் பாவாடை நாடாவில் ஊசலாடுவதற்காக மாநிலங்கள்?’ ‘டில்லியில் தான் அறிவாற்றல், அரியணையில் அமர்ந்திருக்கிறதா?’ என்று கேட்டார் அண்ணா. ‘அதிகாரம் இல்லாத முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கிறேனே தம்பி’ - என்று முதல்வர் அண்ணா அன்று வருந்தினார். ‘காஞ்சி’ இதழில் அவர் எழுதிய அரசியல் உயிலாக அந்தக்கட்டுரை அமைந்திருந்தது.
அந்த வருத்தமிகு சொற்களைத்தான் முழக்கமாக முன்னெடுத்தார் தமிழினத் தலைவர் கலைஞர். திருச்சி மாநாட்டில் ‘மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கமாக ஆக்கினார் கலைஞர். மாநில சுயாட்சித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1974 ஆம் ஆண்டு நிறைவேற்றி இந்தியாவுக்கே வழிகாட்டினார். இதோ இவர்களது கொள்கை வாரிசான தலைவர் - இன்றைய முதல்வர் அவர்கள் - டிம்.எம்.நாயரின் குரலை, அண்ணாவின் குரலை, கலைஞரின் குரலை தனது ஒற்றைக் குரலாக ஒலித்துள்ளார்.
ஜனநாயகம் - மக்களாட்சியின் மாண்பு - கூட்டாட்சித் தத்துவம் - கல்வி உரிமை ஆகிய நான்கையும் சேர்த்து ஒலித்திருக்கிறார் முதல்வர். ‘பல்வேறு, இனம், மொழி, கலாச்சாரப் பண்பாடுகள் கொண்ட இந்தியப் பெருநாட்டை உண்மையில் காக்கும் உன்னதமான தத்துவம் என்பது கூட்டாட்சித் தத்துவம் தான். அந்தக் கூட்டாட்சித் தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக நாம் கூடியிருக்கிறோம்’ என்று சொன்னதுதான் மிகமிக முக்கியமானது.
“இந்தியத்துணைக் கண்டத்தில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமான - வழிகாட்டியான - தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவை - நிறுத்தி வைக்க முடியும் - உதாசீனப்படுத்த முடியும் என்றால் - இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் மாநிலங்களின் கதி என்ன?
அரசியல் சட்டம் வகுத்துத்தந்துள்ள ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு எங்கே போகும்? பல்வேறு இனம், மொழி, கலாச்சாரப் பண்பாடு கொண்ட மக்களின் நிலைமை என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் கொள்கை முடிவை, வெறும் நியமனப் பதவியில் அமர்ந்திருக்கும் ஓர் ஆளுநர் மதிக்காமல் திருப்பி அனுப்புவது மக்களாட்சித் தத்துவத்துக்கே எதிரானது அல்லவா? பிறகு எந்த நம்பிக்கையில் மக்கள் வாக்களிப்பார்கள்? யாரை நம்பி வாக்களிப்பார்கள்? என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி ஆகும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடு. அதனைச் சிதைக்கலாமா? இவற்றை எல்லாம் சிந்திக்கத்தெரிந்தவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பி இருக்கும் பெரும் முழக்கம் என்பது தமிழக எல்லையோடு முடிந்து விடக்கூடிய முழக்கம் அல்ல. இந்தியா முழுமைக்கும் எடுக்கப்பட வேண்டிய முழக்கம் ஆகும்.
சமூகநீதியையும் - கூட்டாட்சித் தத்துவத்தையும் இந்தியா முழுமைக்கும் பரவலாக்கும் ஒற்றை நம்பிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திகழ்கிறார். காலம், நெருக்கடியான நேரத்தில் தலைவர்களை உருவாக்குகிறது. அடையாளம் காட்டுகிறது. வார்ப்பிக்கிறது. வளர்த்தெடுக்கிறது!