முரசொலி நாளேட்டின் இன்றைய (பிப்.05 2022) தலையங்கம் வருமாறு:
இந்திய நாடாளுமன்றத்தில் நின்று கொண்டு தமிழ்நாட்டின் தனிச்சிறப்பைஉணர்ச்சி பொங்க உரையாற்றி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவரான ராகுல் காந்தி அவர்கள். இதற்காகவே தமிழ்நாட்டு மக்கள் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவருக்கு நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ராகுல் ஆற்றிய உரை என்பதுஇரண்டு விதங்களில் முக்கியமானது. ஒன்று, நம்முடைய தமிழ்நாட்டை மிகச்சரியாக அடையாளம் கண்டுள்ளார் என்பது! மற்றொன்று, அவர் உருவாக்க நினைக்கும் இந்தியா என்பதுஎத்தகையதாக இருக்கும் என்பது! இந்த இரண்டுமே மிகச்சிறந்த பார்வை உள்ளவராக ராகுல் காந்தியை அடையாளம் காட்டுகின்றன.
குடியரசுத் தலைவரின் உரையைப் போலவே சம்பிரதாயமாக இல்லாமல், சரமாரியான சரவெடியை ராகுல் காந்தி கொளுத்திப் போட்டார்.
“தற்போது இரண்டு வகையான இந்தியா-க்கள் உள்ளன. ஒரே இந்தியா வாக தற்போது இல்லை. ஒரு இந்தியா பெரும் செல்வந்தர்களுக்கானது, மிகவும் அதிகாரம் படைத்தவர்களுக்கானது, வேலையே தேவையற்றவர்களுக்கானது, குடிநீர் இணைப்போ, மின் இணைப்போ தேவையற்றவர்களுக்கானது. ஆனால், இவர்களே நாட்டின் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். மற்றொரு இந்தியாவும் உள்ளது. அதுதான் சாதாரண மக்களுக்கானது” என்று, சமத்துவக் குரலை ஒலித்த ராகுல் காந்தி, அடுத்ததாக கூட்டாட்சித் தத்துவத்தை முன்னெடுத்தார்.
“அரசியல் சட்டத்தில் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா ஒரே தேசம் என அதில் குறிப்பிடப்படவில்லை. அனைவருக்கும் ஒரே உரிமை தான் உள்ளது. இதன் அர்த்தம் பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மூலம் ஒன்றுபடுவதாகும். இது ஒரு மன்னர் ஆட்சி அல்ல.உங்களது மனப் போக்கை (ஒன்றிய அரசு) மாற்றிக் கொள்ளவில்லை எனில் இந்தியா முழுவதும் உங்களால் ஆளமுடியாது” என்று, பா.ஜ.க.வின் மன்னராட்சிமனோபாவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார் ராகுல் காந்தி. ‘இந்தியாவின்
மொழிகளை, கலாச்சாரங்களை அடக்கி ஆளலாம் என நீங்கள் கருதுகிறீர்கள். அதை விட்டுவிடுங்கள்’என்றும் சொல்லி இருக்கிறார் ராகுல்.
“இந்தியாவை ஒரு கொம்பைக் கொண்டு ஆளமுடியும் என சிலர்கருதுகிறார்கள். கொம்பைக் கொண்டு ஆட்சி நடத்த முயன்ற போதெல்லாம்கொம்புகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. 1947ஆம் ஆண்டுடன் மன்னராட்சிக்கு காங்கிரசு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது” என்று சொல்லி இருக்கிறார் ராகுல். இதையெல்லாம் தொகுத்துப் பார்க்கும் போது, பல்வேறுதேசிய இனங்களின் மொழி, இனம், பண்பாட்டை உள்ளடக்கிய ஒரு ஆட்சி முறையை ராகுல் முன்மொழிவது தெளிவாகத் தெரிகிறது; புரிகிறது.
தமிழ்நாடு குறித்து ராகுல் தெளிவான பார்வையுடன் இருப்பதை அவர் பல முறை வெளிப்படுத்தி இருக்கிறார். அதையே இப்போதும் வெளிப்படுத்தி உள்ளார். “தமிழ்நாட்டை உங்களது வாழ்நாளில் எப்போதும், ஒருபோதும் ஆளவே முடியாது. தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ்நாடு குறித்த பார்வை அவர்களின்இதயத்தில் உள்ளது. தமிழ்மொழி அவர்களின் இதயத்தில் உள்ளது. இந்தியாவைப் பற்றிய சரியான பார்வையும் அவர்களுக்கு உள்ளது. இந்தியா என்பது பலவித மலர்கள் அடங்கிய பூக்கூடையைப் போன்றது.
இதுவே நமது பலம். தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் உங்களிடம் கோரிக்கை வைக்க வருகின்றனர். ‘நீட் வேண்டாம், வேண்டாம்’ என அவர்கள் கூறுகின்றனர். ஆனால், ‘வெளியே போங்கள்' என நீங்கள் கூறுகிறீர்கள். உங்களுக்கான திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு இடமில்லை.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பி.ஜே.பி.யும் நாட்டின் அடிப்படைகளுடன் விளையாடுகின்றனர். இதன் மூலம், நாட்டின் அடித்தளத்தை அவர்கள் பலவீனப்படுத்துகின்றனர். மக்களுக்கிடையேயான உறவுகளை அவர்கள் பலவீனப்படுத்துகின்றனர். மாநில மொழிகளை அவர்கள் பலவீனப்படுத்து கின்றனர். இதன்மூலம் நாட்டையே அவர்கள் பலவீனப்படுத்துகின்றனர்.” -என்ற ராகுலின் குரல் என்பது, ஒட்டு மொத்தமாக இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வேண்டிய குரலாக இருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலின்போது சேலத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, அப்போதும் தனது கருத்தை அழுத்தமாக வைத்தார்.
“தமிழ்நாட்டுக்குள் இந்தியாவும், இந்தியாவுக்குள் தமிழ்நாடும் இருப்பதாகவே நான் கருதுகிறேன். எந்த மொழியும் உணர்வும் சமநிலையில் இருக்க வேண்டும். இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களில் பலதரப்பட்ட மொழி, மதம், இனம், பண்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைந்து உருவாவது ஆகும். எந்த ஒரு மொழியோ, பண்பாடோ, சிந்தனையோ மற்றதைவிட உயர்ந் தது அல்ல. தமிழ் மொழி மீது தொடுக்கப்படும் தாக்குதலை இந்தியாவின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கிறேன். காரணம், தமிழ்நாட்டையோ மேற்கு வங்கத்தையோ மதிக்காத இந்தியா இருக்க முடியாது. தமிழ்ச் சிந்தனையை மதிப்பதைப் போல மற்ற சிந்தனைகளையும் மதிக்கிறேன்.
எந்த உறவும் சமநிலையில் இருக்க வேண்டும். அன்பும், மரியாதையும் ஒருவருக்கொருவர் செலுத்த வேண்டும். ஒற்றைச் சிந்தனைக்கு இந்தியாவைத் தள்ள முடியாது. ஒற்றைச் சிந்தனையை ஒத்துக்கொள்ள முடியாது என்பதால் தான் இங்கு வந்துள்ளேன்” -இதுதான் ராகுல் காந்தியின் சேலம் பேச்சின் உள்ளடக்கம். இதையே இந்திய நாடாளுமன்றத்திலும் ஒலித்துள்ளார் ராகுல் காந்தி.
பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் தமிழகத்தில் விதைத்ததை - நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழகத்தில் உருவாக்கி வைத்துள்ள சிந்தனையை இந்திய நாடாளுமன்றத்தில்ஒலித்ததன் மூலம், இந்தியா முழுமைக்கும் திராவிட இயக்கத்தின்அடிப்படைக் கொள்கைகளை விதைக்கும் கொள்கைத் தூதுவராக ராகுல் காந்தி வளர்ந்து வருகிறார்.
வாழ்த்துகள் ராகுல்!