முரசொலி தலையங்கம்

“காந்தியைக் கொன்ற கூட்டத்துக்கு காந்தியத்தைக் கொலை செய்ய முடியவில்லை” : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!

காந்தியைக் கொன்ற கூட்டத்துக்கு காந்தியத்தைக் கொலை செய்ய முடியவில்லை.

“காந்தியைக் கொன்ற கூட்டத்துக்கு காந்தியத்தைக் கொலை செய்ய  முடியவில்லை” : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (பிப்.01 2022) தலையங்கம் வருமாறு:

இருந்த காந்தி அவர்கள் காந்தி.

இறந்த காந்தி நம் காந்தி” - என்று சொன்னார் தந்தை பெரியார்.

“அரசியலில் நான்தான் மதத்தைக் கலந்தேன். அதற்கான தண்டனையை நான்தான் அனுபவித்தாக வேண்டும்” என்று சொன்னவர் காந்தி. அவர்உயிரோடு இருக்கும்போதே, மதத்துடன் அரசியல் கலக்கப்பட்டு விட்டது. அதனை அவரே நேரடியாக உணர்ந்தார். அதனால்தான் இறுதிக் காலத்தில் மனம் நொந்து இத்தகைய கருத்துகளைச் சொன்னார்.

“நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதமும் அரசும் பிரிந்தே இருக்கும். என் மதத்தின் மீது சூளுரைத்தே சொல்கிறேன். என் மதத்திற்காக நான் உயிர்துறக்கவும் தயார். ஆனால் அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று நிமிர்ந்து சொன்னவர் உத்தமர் காந்தி!

காந்தியடிகள் இறக்கும்வரை மனத்தால் மத எண்ணங்கள் நிரம்பியவராகத்தான் இறந்தார். இராமர் தனது எண்ணத்தில் குடியிருப்பவராகவே நினைத்தார். தனக்கென ஒரு இராமனை அவரே உருவாக்கி வணங்கி வந்தார். ‘உங்கள் இராமன் வேறு, எனது இராமன் வேறு' என்றும் சொல்லி வந்தார். ஆனால் இறுதியில் மதவாதச் சிந்தனை கொண்ட ஒரு கூட்டத்தின் பிரதிநிதியான கோட்சேவால் காந்தி கொல்லப்பட்டார். தனக்கான மரணம் இப்படித்தான் நடக்கும், இன்னாரால்தான் நடக்கும் என்பதை காந்தியடிகள் தனது தொலைநோக்குச் சிந்தனையால் அறிந்திருந்தார். உணர்ந்திருந்தார்.

நான்கு வர்ணத்தை ஏற்றுக் கொண்டவர் தான் காந்தி. ஆனால் அந்த நான்கு வர்ணத்துக்குள் ஏற்றத் தாழ்வு கிடையாது என்று சொல்லிக் கொண்டார். தனது மதத்தில் ஐந்தாவது வர்ணம் இல்லைஎன்றார். தகுதியால் வேறுபடுத்தும் ஜாதியை தீயதே என்றார். ஜாதியைவிட தீண்டாமையை அதிகமாக எதிர்த்தார். தீண்டாமை வாழ்வதைவிட இந்த மதம் சாவதை நான் விரும்புகிறேன்” என்று அறிவித்தார். தனது இந்து மதம் வேறு, உங்கள் இந்து மதம் வேறு என்று அறிவித்தார்.

‘உண்மையைவிட உயர்ந்த கடவுள் கிடையாது. அந்த உண்மையை உணரும் வழி அன்பு அல்லது அறப்போராட்டமே' என வலியுறுத்தி வந்தார். ‘என்னுடைய மதம் குறுகிய கோட்பாடு கொண்டதல்ல. இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம், ஜொராஷ்டிர மதம் ஆகியவற்றில் உள்ள எல்லாச் சிறப்புகளையும் உள்ளடக்கியது' என்றார். ‘அனைத்துக் கடவுள்களின் பெயர்களும் வேறாக இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் ஒரே பண்பை அடிப்படையாகக் கொண்டதே’ என்றவர் அவர்.

காந்தி ஒரு தலைவர் மட்டுமல்ல; தத்துவம். அவரது சிந்தனைகள் 90 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. உலகப்பரப்பில் உள்ள அத்தனை குறித்தும் அவர் தனது சொந்தக் கருத்தைச் சொல்லி இருக்கிறார். “புத்தகங்களிலிருந்து மேற்கோள்காட்டாமல் எங்கு உண்மை வாழ்ந்து கொண்டிருந்ததோ அங்கிருந்து மக்கள் மொழியிலேயே பேசினார். இக்காரணத்திற்காக இந்திய மக்களால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் மகாத்மா. அவரின்றி வேறு யாரால் இந்தியர் அனைவரையும் தனது சதையாகவும், இரத்தமாகவும் நேசிக்க முடியும்?” என்று கேட்டவர் கவி இரவீந்திரநாத் தாகூர். அப்படி மக்களை நேசித்தவர் காந்தி. அதனாலேயே, கொல்லப்பட்டு 75 ஆண்டுகள் ஆனபிறகும் அவர் மக்களால் நினைக்கப்படுகிறார்.

காந்தியைக் கொன்ற கூட்டத்துக்கு காந்தியத்தைக் கொலை செய்ய முடியவில்லை. வழக்கம்போல காந்தியின் சிலையை அவமானப்படுத்துவதும், காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைப்பதுமாக தங்களது இதயங்களை தாங்களே சுட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

“பரம ஏழைகளாக இருப்பவர்கள் ‘இது எனது நாடு’ என்று என்றைக்கு நினைக்கிறார்களோ, எதனுடைய உருவாக்கங்களில் அவர்களது குரல் ஓங்கியிருக்கிறதோ, எந்த ஒரு இந்தியாவில் உயர்வகுப்பினர். தாழ்த்தப்பட்டவர் என மக்களுக்குள் வேறுபாடு இருக்காதோ, எந்த ஒரு நாட்டில் எல்லா வகுப்பினரும் நல்லிணக்கத்துடன் வாழ்வார்களோ, அத்தகைய இந்தியாவில் தீண்டாமை சாபம் இராது. குடி மற்றும் போதை மருந்துகள் இராது. பெண்கள்,

ஆண்களுக்குச் சமமாக உரிமைகளைக் கொண்டிருப்பர். மற்ற உலகப்பகுதிகளுடன் நல்லுறவு கொண்டிருப்போம் என்பதால் சிறு அளவிலான ராணுவம் வைத்திருப்போம். மௌனம் காக்கும் பல லட்சம் மக்களின் நலன்களுக்கு முரண்படாதவை அனைத்தும் முழுமையாக மதிக்கப்படும். இதுதான் நான் கனவு காணும் இந்தியா” என்ற கனவு கண்டார் உத்தமர் காந்தி. அவர் மறைந்து 75 ஆண்டுகளைக் கடந்துள்ளோம். இந்தக் கனவுகளில் இருந்து முன்னோக்கிச் சென்றுள்ளோமா? பின்னோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோமா?

ஒற்றை மதத் தேசியவாதத்தை அவர் ஏற்கவில்லை. “ஒரு மதம், ஒரு தேசம், ஒரே அர்த்தம் கொண்டதாக எந்த நாட்டிலும் இருந்ததில்லை. இந்தியாவிலும் அவ்வாறு இருந்திருக்கவில்லை" என்று தெளிவாகச் சொன்னவர் அவர். காந்தியின் அடையாளம் என்பது உண்மை பேசுதல், வன்முறை தவிர்த்தல், அசைவம் சாப்பிடாதது என்று கற்றுத் தரப்படுகிறது. உண்மையில்; காந்தியின் அடையாளம்என்பது மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, அனைவரையும் அரவணைத்தல், அனைவரையும் சமமாக நடத்துதல், ஜாதி - தீண்டாமை ஒழிப்பு - ஆகியவைதான்.

இவற்றை முன்னெடுப்பதே காந்திக்குச் செய்யும் உண்மையான தொண்டு ஆகும். அதுதான் உண்மையான காந்தியின் வழி ஆகும்!

இந்து - இசுலாமியர் நல்லிணக்கத்துக்காக இறுதி முப்பது ஆண்டுகளும் அவர் அதிகமாகப் பேசினார். அதில்தான் உண்மையான காந்தி வாழ்கிறார். இந்தியாவே சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இருந்தபோது மதக்கலவரம் நடந்த நவகாளியில் அவர் கால்கள் நடந்து கொண்டு இருந்தன. அரசு என்பதும், அதிகாரம் என்பதும் மக்களை அமைதிப்படுத்துவதிலும், சக மனிதனுடன் அன்பு செலுத்துவதிலும் தான் இருக்கிறது என்பதை உணர்த்திய நாட்கள் அவை.

“உங்கள் வாழ்க்கைச் செய்தி எது?'' என்று காந்தியிடம் கேட்கப்பட்டது. “எனது வாழ்க்கை தான், நான் வழங்கும் செய்தி” என்றார் அவர். கோட்சேக்களின் சிந்தனைகள் வேரறுக்கப்பட வேண்டும் என்பதே அவரது வாழ்க்கை சொல்லும் செய்தி!

banner

Related Stories

Related Stories