முரசொலி தலையங்கம்

IAS விவகாரம் : ”மம்தாவின் செயலால் பாடாய் பட்டுக்கிடக்கும் ஒன்றிய பாஜக அரசு” - முரசொலி தலையங்கம் சாடல்!

மேற்கு வங்கத்தின் பந்தோபாத்யா போல அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் பந்தாட நினைக்கிறார்கள். இது இந்திய நிர்வாகத்தையே சிதைத்துவிடும் என முரசொலி நாளேடு தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

IAS விவகாரம் : ”மம்தாவின் செயலால் பாடாய் பட்டுக்கிடக்கும் ஒன்றிய பாஜக அரசு” - முரசொலி தலையங்கம் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தினம் ஏதாவது திடுக்கிடும் காரியத்தைச் செய்வது ஒன்றிய பா.ஜ.க. அரசின் பழக்கமான வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அலைக்கழிக்கும் காரியங்களைச் செய்யத் தொடங்கி இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி - ஒரு அடிமை தேசத்தை ஆட்சி செய்ய பிரிட்டிஷ் அதிகாரிகளை பயமுறுத்தி வைத்திருந்தது போன்ற காரியத்தை - இன்றைய பா.ஜ.க. அரசும் செய்யத் தொடங்கி இருப்பதன் வெளிப்பாடுதான் இந்திய ஆட்சிப்பணி விதிகளில் செய்யப்பட இருக்கும் திருத்தங்கள் ஆகும்.

இதனை, இந்தியக் கூட்டாட்சி தத்துவத்துக்கும் மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்று மிகச் சரியாக விமர்சித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழ்நிலைக்கு இந்தத் திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் - ஒன்றிய அரசின் வசம் அதிகாரக் குவிப்பிற்கு வழிவகுக்கும் எனவும் அவர் சொல்லி இருக்கிறார். மாநில அரசு முழுக்க முழுக்க தன்னுடைய நிர்வாகத் தேவைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைச் சார்ந்துள்ளது என்பதை முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு அனுப்ப வற்புறுத்துவது, ஏற்கனவே போதுமான எண்ணிக்கைக் குறைபாடுள்ள நிலையில் நிர்வாகத்தில் ஒரு தொய்வு நிலையை ஏற்படுத்தி விடும் என்றும் சொல்லி இருக்கிறார் முதல்வர். இந்திய ஆட்சிப் பணி விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாறுதல்களை கைவிடுமாறும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் நிர்வாக கட்டமைப்பு குறித்து நமது முன்னோர்கள் அளித்துள்ள உயரிய சிந்தனையான கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தேசத்தை முன்னெடுத்துச் செல்ல, மாநில அரசுகளோடு கலந்தாலோசனை செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் இந்திய பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

இதுபோல் பல்வேறு மாநில முதல்வர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள். தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பீகார், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய நிர்வாகப் பணிகளில் மத்திய அரசு பணிகள் தொடர்பான விதிகள் மற்றும் உரிமைகள் ஐ.ஏ.எஸ். (கேடர்) விதிகள் - 1954-ன் கீழ் உள்ள விதி 6 (1)ல்இடம் பெற்றுள்ளது. இந்த விதி கேடர் விதிகளில் 1969-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. ஒரு கேடர் அதிகாரி அவர் பணியாற்றும் மாநில அரசின் சம்மதத்துடனும் ஒன்றிய அரசின் சம்மதத்துடனும் ஒன்றிய அரசு அல்லது மற்ற மாநில அரசின் கீழ் இருக்கும் சேவைகளிலோ, நிறுவனத்தின் கீழோ, தனிநபர்கள் அமைப்பின் கீழோ அல்லது சங்கத்தின் கீழோ பணி அமர்த்தப்படலாம். இந்த அதிகாரம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒன்றிய அரசு மற்றும் மற்ற மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதில் மாநில அரசின் ஒப்புதலுடன் என்பதை முழுமையாக நீக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மாநில அரசுகளின் ஒப்புதலின்றி ஒன்றிய அரசின் பணிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமிக்கும் மசோதாவை ஒன்றிய அரசு வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யும் முடிவில் இருக்கிறது. சம்பந்தப்பட்ட அலுவலரின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய அரசின் பணிக்கு மாற்ற முடியும். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதாம். ஒன்றிய அரசில் அதிகாரிகள் குறைவாக இருக்கிறார்கள் என்றால் அதிகாரிகளை அதிகமாக எடுக்க வேண்டுமே தவிர, மாநிலத்தில் உள்ள அதிகாரிகளைக் கடன் வாங்குவார்களா? அல்லது கடத்திச் செல்வார்களா? அதைத்தான் ஒன்றிய அரசு செய்யப் போகிறது.

ஜனவரி 1, 2021 நிலவரப்படி, நாட்டில் உள்ள சுமார் 5,200 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 458 பேர் மத்திய அரசுப் பணிகளில் உள்ளனர். டிசம்பர் மாதம் 20-ம் தேதி அன்று ஒன்றிய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை பல்வேறு மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் பல்வேறு மாநில/கூட்டுப் பணியாளர்கள் ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தேவையான அதிகாரிகளை வழங்கவில்லை. இதனால் ஒன்றிய அரசு பணிகளுக்கு தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கை மத்தியில் போதுமானதாக இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு காரணமாக மேற்கு வங்க மாநில நிலைமைகள் சொல்லப்படுகிறது. மேற்கு வங்கத்தில் புயல் ஆய்வுப் பணிக்காகச் சென்றார் பிரதமர் மோடி. அப்போது முதல்வர் மம்தாவும், தலைமைச் செயலாளர் பந்தோபாத்யாவும் செல்லவில்லை. முதல்வர் புறக்கணித்தார். அதனால் தலைமைச் செயலாளரும் செல்லவில்லை.

உடனே தலைமைச் செயலாளரை ஒன்றிய அரசுப் பணிக்கு மாற்றினார்கள். அவரை விடுவிக்க மறுத்தார் மம்தா. முதல்வரின் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார். எனவே பந்தோபாத்யா மீது நடவடிக்கை எடுத்தது ஒன்றிய அரசு. அதற்கு எதிராக அவர் நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு போட்டார். இதற்கு எதிராக ஒன்றிய அரசுக்கும் அவருக்கும் சட்டமோதல் நடந்தது. இறுதியாக நடவடிக்கையை ரத்து செய்தது பா.ஜ.க. அரசு. இப்படி பந்தோபாத்யா போல அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் பந்தாட நினைக்கிறார்கள்! இது இந்திய நிர்வாகத்தையே சிதைத்துவிடும். மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நேரடியாக டெல்லி கட்டுப்படுத்தும். மதுரை கலெக்டரை பிரிட்டிஷ் ஆட்சிக்காக இங்கிலாந்தில் இருந்த இந்தியா மந்திரி கட்டுப்படுத்தியதைப் போல ஆகிவிடும். மாநிலத்தின் பலத்தைக் குறைப்பதாக நினைத்து ஒன்றிய அரசை பலவீனப்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். சாப்பிடும் போது குரங்கை நினைக்காதே என்றால், சாப்பிட்ட நேரம் முழுக்க குரங்கையே நினைப்பது போல - ஒரு மம்தா நினைப்பு பாடாய் படுத்துகிறது பா.ஜ.க.வை.

banner

Related Stories

Related Stories