முரசொலி தலையங்கம்

“ரத்தவாரிசு மட்டுமல்ல,கொள்கை கோட்பாடுகளுக்கும் மொழி இனத்துக்குமான வாரிசு முதல்வர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி

“கலைஞரே மாபெரும் நூலகம். அந்த மாபெரும் நூலகத்தின் பெயரை, மாபெரும் நூலகத்துக்குச் சூட்டி இருக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” எனப் பாராட்டியுள்ளது முரசொலி நாளேடு.

“ரத்தவாரிசு மட்டுமல்ல,கொள்கை கோட்பாடுகளுக்கும் மொழி இனத்துக்குமான வாரிசு முதல்வர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (ஜனவரி 13, 2022) வருமாறு:

திராவிடம் எதையும் இடிக்காது, கட்டவே செய்யும் என்பதற்கு உதாரணம்தான் மதுரையில் எழும்ப இருக்கும், ‘கலைஞர் நினைவு நூலகம்’! கலைஞரே மாபெரும் நூலகம். அந்த மாபெரும் நூலகத்தின் பெயரை, மாபெரும் நூலகத்துக்குச் சூட்டி இருக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பேரறிஞர்களுக்கு எல்லாம் பேரறிஞராக இருந்தவர் பேரறிஞர் அண்ணா. அவரது பெயரால் தலைநகர் சென்னையில் நூலகம் அமைத்தார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். இப்போது இதோ, தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் பெயரால் சங்கம் வளர்த்த தமிழ் மண்ணாம் மதுரையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் அமைக்க நேற்றைய தினம் அடிக்கல் நாட்டி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

ரத்த வாரிசு மட்டுமல்ல, அரசியல் வாரிசு மட்டுமல்ல, கொள்கை கோட்பாடுகளுக்கும் மொழி இனத்துக்குமான உண்மையான வாரிசாக அடையாளம் பெற்று நிற்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

புதினங்களா? வெள்ளிக்கிழமை, சுருளிமலை, வான்கோழி, புதையல்-

வரலாற்றுப் புதினங்களா? ரோமாபுரிப்பாண்டியன், பொன்னர் சங்கர், பாயும்புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம்-

உரை ஓவியங்களா? குறளோவியமும் சங்கத்தமிழும்-

கட்டுரைகளா? உணர்ச்சி மாலை, விடுதலைக்கிளர்ச்சி, பூந்தோட்டமும் இனமுழக்கமும், யாரால்? யாரால்? யாரால்?

கடிதங்களா? எத்தனை நூறு கடிதங்கள்- பல பத்துத் தொகுதிகளாக வெளிவரத் தயாராகிவருகிறது!

சிறுகதைகளா? கிழவன் கனவு, பிள்ளையோ பிள்ளை, 16 கதையினிலே, பழக்கூடை-

கவிதையா? கவிதையல்ல, கவியரங்கக் கவிதைகள், வாழ்வெனும் பாதையிலே-

தன்வரலாறா? நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறது நெஞ்சுக்கு நீதி-

பொன்மொழிகளா? சிறையில் பூத்த சின்ன மலர்கள், நவமணிகள், சிந்தனை ஆழி-

நாடகமா? மணிமகுடம், தூக்குமேடை, உதயசூரியன், பரதாயணம் - இப்படி, தானே நூலாய் வாழ்ந்தார் கலைஞர். பேனாவில் மை அல்ல, ரத்தம் ஊற்றி எழுதியவர். வியர்வை விட்டு எழுதியவர். அதனால்தான் கடைசிவரை அவரது எழுதுகோல் சாயாமல் இருந்தது.

பள்ளிப்படிப்பை முழுமையாக முடித்தவரல்ல. கல்லூரியைத் தொட்டவரல்ல. ஆனால் பல்கலைக்கழகங்களில் பெரும் பட்டங்கள் பெற்றவர்களை விட, கல்லூரிகளில் கணக்கற்ற ஆண்டுகள் பெரும் ஆசனங்களில் அமர்ந்தவர்களை விட அதிகமாக அவரால் எப்படி எழுதித் தள்ள முடிந்தது? அந்த சூட்சுமத்தைக் கண்டுபிடித்துச் சொன்னவர் பேரறிஞர் அண்ணாதான்.

‘மிகச்சிறு வயதிலேயே நாட்டுக்குச் சொல்ல வேண்டும் என்ற சிந்தனைகள் கலைஞர் கருணாநிதிக்கு அதிகமாக ஊறிக் கொண்டே இருந்தது’ என்றார் அண்ணா. கலைஞரின் வெற்றிச்சூத்திரம் இதுதான். அதைக் கண்டுபிடித்த சூத்திரதாரி அண்ணா தான்.

மிகச்சிறுவயதிலேயே நாட்டுக்குச் சொல்வதற்கான சிந்தனைகள் கலைஞரிடம் ஊறியதால் அவருக்கு தமிழ் கை கொடுத்ததால் புத்தகங்களை எழுதித் தள்ளினார். புத்தகமாகவே வாழ்ந்தார். இப்போது மதுரையில் புத்தகங்களைத் தாங்கிய கட்டடமாக உயர்ந்து நிற்கப் போகிறார்.

“கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைசிறந்து விளங்குவதற்குக் காரணம், அவர் திருக்குறளைப் படித்திருப்பதனால்தான். குறள் நெறிப்படி வாழ்வதால்தான் சிறந்து விளங்குகிறார்” என்று எழுதினார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்.

“செந்தமிழ் நாடு செய்தவப் பயனாய்

முத்தமிழ் போற்ற முத்து வேலரும்

அஞ்சுகம் அம்மையும் அன்பின் ஈன்ற

நற்றமிழ் செல்வ! நாடாள் பாவல!” - என்று பாராட்டினார் இலக்கிய அரிமா இலக்குவனார்!

‘தமிழ்ச் சமுதாயத்தின் தனிநிதி அனையவன்

தமிழார் வத்தில் தன்னிகர் இல்லோன்

தமிழ்த் தொண்டாற்றலில் தலைமை சான்றோன்

தமிழ்க் கவி படைத்திடும் புலமை நலத்தோன்’- என்றார் மு.வரதராசனார்.

இப்படி தமிழ்ப் புலவர்களால் பாராட்டப்பட்ட பெரும்புலவர் தான் கலைஞர். அவர் பெயரால் நூலகம் அமைவது, அதுவும் மதுரையில் அமைவது பொருத்தமானது.

சென்னையில் எத்தனையோ பெரும் நூலகங்கள், ஆய்வகங்கள் உள்ளன. இங்கு ஒரு புத்தகத்தை தேடிக் கண்டடைய எத்தனையோ ஆவணக் காப்பகம் போன்ற நூலகங்கள் உள்ளன. ஆனால் மதுரையில் அப்படி இல்லை.

பல்கலைக்கழக நூலகம், கல்லூரி நூலகங்கள், காந்தி மியூசியம் நூலகம் ஆகியவை இருக்கிறது. ஆனால் அனைத்துப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, போட்டித் தேர்வுக்குப்படிக்கும் மாணவ, மாணவியர் பயன்பாட்டுக்காக என பெரிய நூலகம் இல்லை. அந்த மாபெரும் குறையை இந்த நூலகம் போக்கும். இத்தகைய போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்கள், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய தேவை உள்ளது. அந்தத் தேவையை இனி மதுரையே நிறைவு செய்யும்.

“2.70 ஏக்கர் நிலத்தில் - 2,13,288 சதுர அடி கட்டடப் பரப்பில் - 8 தளங்களுடன் அமையப் போகிறது” என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

தேவையான நூல்கள், மின் நூல்கள், இணையவழி பருவ இதழ்கள், ஆகியவை வாங்க 10 கோடி ரூபாயும், தொழில்நுட்பச் சாதனங்கள் வாங்குவதற்கு 5 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்ய இருக்கிறார்கள். காலத்தால் அழிக்க முடியாத அறிவுக்கருவூலமாக, ‘கலைஞர் நினைவு நூலகம்’ அமையப் போகிறது.

“கலைஞர் பெயரை எந்தத் திட்டத்துக்கு வைத்தால் பொருத்தமானது?” என்று பட்டிமன்றம் வைத்தால், அனைத்துத் திட்டத்துக்கும் பொருத்தமானவர்தான் அவர். அதில் விஞ்சி நிற்பது என்பது நூலகத்துக்கு அவர் பெயரைச் சூட்டுவதுதான்.

அதைவிட முக்கியமானது- எதற்கு அவர் பெயரைச் சூட்டினால் அவர் மகிழ்ச்சி அடைவார் என்றால் நூலகத்துக்கு தன் பெயரைச் சூட்டினால்தான் அவர் அதிக மகிழ்ச்சியை அடைவார்.

அந்த மாபெரும் மகிழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்துள்ளார்கள்! மகிழ்ச்சி!

banner

Related Stories

Related Stories