நாவலர் நெடுஞ்செழியனார்க்கு நான்கு நற்செயல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்துள்ளார்கள்!
* நாவலர் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடி உள்ளார்.
* நாவலர்க்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
* நாவலர் எழுதிய அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.
* நாவலர் நூற்றாண்டு நிறைவு மலர் வெளியிடப்பட்டுள்ளது.
திசைதோறும் திராவிடக் கொள்கைகளை இளந்தாடிப் பருவம் முதல் பரப்பி வந்த அந்த அரிமா நிகர் ஆளுமைக்கு உண்மையான திராவிட இயக்க ஆட்சி செய்துள்ள மாபெரும் மரியாதை இது!
இறக்கும் போது அவர் மாற்று இயக்கத்தில் இருந்தார். ஆனால் திராவிடச் சிந்தனையில் மாற்றுக்குறையாதவராக மறைந்தார் என்பதால் அவருக்கான மரியாதையை திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கியது. 2020 ஆம் ஆண்டு அவருக்கான நூற்றாண்டு விழாவை அ.தி.மு.க.வோ, அப்போது ஆட்சியில் இருந்த பழனிசாமியோ கொண்டாடி இருக்க வேண்டும்.
பழனிசாமிக்கு நாவலரை எங்கே தெரியப் போகிறது. அவருக்கு தெரிந்தது சசிகலாவின் கால்கள் மட்டும்தான் என்பதை அ.தி.மு.க.வினரே அறிவார்கள். அதனால் நாவலர் அவர் சிந்தனையில் இல்லை. ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மறக்கவில்லை நாவலரை!
அப்போதே நாவலர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினார். தி.மு.க. தலைமைக் கழகத்தில் நாவலர் படம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டக் கழகங்களிலும் நாவலர் மதிக்கப்பட்டார். ‘முரசொலி' சார்பில் நாவலர் நூற்றாண்டு சிறப்புக் கட்டுரைகள் வெளியானது. அதன்பிறகுதான் பழனிசாமிக்கு ‘நாவலரே' தெரியவந்தார். ‘ஓ! அவரா? பச்சை சால்வை போட்டிருப்பாரே? அவரா?' என்று அறிந்து கொண்டு அவரும் படம் வைத்து பூ போட்டார்.
சிலை வைக்கப் போவதாக அனைவர் காதிலும் பூ வைத்தார். அரசாங்கம் மனது வைத்தால் ஒரு மாதத்தில் சிலை வைக்கலாம். ஆனால் கடைசி வரைக்கும் அதைச் செய்யவில்லை பழனிசாமி. இதோ, இப்போது நாவலர்க்கு சிலை வைக்கப்படுகிறது. நாவலர் எந்தக்கட்சியில் இருந்தார் என்பது முக்கியமல்ல, எந்தக் கொள்கையை நாட்டில் விதைத்தார், எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தார் என்பது முக்கியம். அதனால் தான் தி.மு.க அவரது நூற்றாண்டின் தொடக்க விழாவைக் கொண்டாடியது.
இன்று ஆட்சியில் அமர்ந்த நிலையில் நூற்றாண்டின் நிறைவு விழாவையும் கொண்டாடுகிறது. “தலைவர் கலைஞர் வகுத்துக் காத்த அரசியல் நாகரீகமும், திராவிட இயக்க வரலாற்றில் தனக்கெனத் தகுதி மிக்கதோர் இடமும் கொண்ட நாவலர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை திராவிட முன்னேற்றக் கழகம் வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம் என்ற உறவிலும் உரிமையிலும் சிறப்புடன் கொண்டாடி மகிழ்கிறது” என்று ‘முரசொலி'யில் (11.7.2020) எழுதினார் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அந்த அரசியல் நாகரீகம்தான், அரசு இயலிலும் தொடர்வதன் அடையாளமாக விழா நடந்துள்ளது.
நாவலர் என்பது திராவிடக் கொள்கைத் தலைமையின் அடையாளம். ‘அய்யா நான் எம்.ஏ. படித்திருக்கிறேன், எனக்கு சம்பளம் வேண்டாம், சோறு மட்டும் போடுங்கள்' என்று தந்தை பெரியாரிடம் சொல்லி இயக்கத்தில் சேர்ந்தவர். “நாவலரும், நாவலர் போன்று என்னிடம் வேலைக்கு என்று சேர்ந்தவர்களும் என்னிடம் வேலை எதுவும் பழகவில்லை, எனக்கே கற்றுத் தரும் அளவுக்கு அவர்கள் இருந்தார்கள். எனக்கே பாடம் கற்றுத்தரும் அளவுக்கு தகுதி படைத்தவர்களாக இருந்தார்கள்” என்று பெரியாரிடம் ஒருவர் பாராட்டு வாங்குவது என்பது சாதாரணமா?
தன்னால் உருவாக்கப்பட்ட நாவலரைப் பார்த்து, “நீங்கள் இடுகின்ற ஆணைகளை ஏற்று நடத்து வதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லி இருக்கிறார் என்றால் அது சாதாரணமா? நாவலரும் - கலைஞருக்குமான தொடக்க கால நட்பு அனைவரும் அறிந்தது. பிரிந்திருந்த காலத்தில் எத்தனை நட்புடன் இருந்திருக்கிறார்கள் என்பதை அரசு வெளியிட்ட மலரில் பேராசி ரியர் நாகநாதன் அவர்கள் எழுதிய கட்டுரை மூலமாக அறியலாம்.
1980 ஆம் ஆண்டுகளில் தி.மு.க. - அ.தி.மு.க. இணைப்புக்கான பேச்சு வார்த்தையை பிஜூ பட் நாயக் எடுத்தார். தலைவர் கலைஞருக்கும் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆருக்குமான பேச்சுவார்த்தையை அவர் நடத்தினார். அப்போது எம்.ஜி.ஆருடன் இருந்தவர் நாவலர். இந்த விவகாரத்தில் நாவலர் கருத்து என்ன என்று அறிந்து கொள்ள கலைஞர் அவர்கள் விரும்பி, நாகநாதனை அனுப்பி வைக்கிறார்கள். ‘இந்த இணைப்பு பல குழப்பங்களை ஏற்படுத்தும்' என்று அப்போது நாவலர் சொன்னதாகவும் - ‘நாவலர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்' என்று தலைவர் கலைஞர் சொன்னதாகவும் பேராசிரியர் நாகநாதன் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
2000 ஆம் ஆண்டில் குமரி முனையில் வள்ளுவர்க்கு வானுயர சிலை அமைத்தார் முதல்வர் கலைஞர். அதில் நாவலர் உரையாற்ற வேண்டும் என்று கலைஞர் விரும்புகிறார். நாகநாதனை அழைத்து நாவலரிடம் சொல்லச் சொல்கிறார். இவர் செல்வதற்கு முன்னதாகவே நாவலரிடம் கலைஞரும் பேசி இருக்கிறார். ‘தி.மு.க.வில் இருந்து நான் விலகியது ஒரு விபத்து போன்றது. மீண்டும் தி.மு.க.வுக்கு வருவது சரியாக அமையாது' என்று நாவலர் சொல்லி இருக்கிறார். இதுதான் கோபப் பிரிவுக்கும் கொள்கை நட்புக்குமான வேறுபாடு!
நாவலர் மறைந்தார் என்ற செய்தி கேட்டதும், முதல்வர் கலைஞரை அவர் வீடு நோக்கிச் செல்ல வைத்ததும் - நாவலருக்கு நூற்றாண்டு விழாவாச்சே, ‘அவர் அ.தி.மு.க.வில் இருந்து மறைந்தாலும் தி.மு.க. கொண்டாடலாம்' என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முடிவெடுத்ததற்கும் பின்னால் இருப்பது நயத்தக நாகரீகம். நாடு எதிர்பார்க்கும் நாகரீக அரசியலின் ஆட்சி இயலின் அடையாளமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாவலர் ‘உயரத்துக்கு' எழுந்துநிற்கிறார். நாவலர் புகழ் வாழ்க!