முரசொலி தலையங்கம்

பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லாம் தேசபக்தி இல்லாதவர்கள் அல்ல: எது தேசபக்தி? - பதிலடி கொடுத்த முரசொலி!

தமிழ்நாட்டு மக்களின் தேசபக்தியை இருட்டு உள்ளங்களால் உணர முடியாது!

பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லாம் தேசபக்தி இல்லாதவர்கள் அல்ல: எது தேசபக்தி? - பதிலடி கொடுத்த முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் சிலர் ‘தேசபக்தி' வகுப்பு எடுப்பதையே பிழைப்பாக வைத்திருப்பார்கள். ‘தமிழ்நாட்டில் எவருக்கும் தேசபக்தி இல்லை' என்றும், ‘தி.மு.க.வுக்கு தேசபக்தி இல்லை' என்றும், ‘கடந்த ஐம்பது ஆண்டுகளாக தேசபக்தியே போய்விட்டது' என்றும் புலம்பிப் புலம்பியே அவர்கள் தொண்டை புண்ணாகிவருகிறது!

எது தேசபக்தி என்பது தான் பிரச்சினையே தவிர! தேசபக்தி என்பது பிரச்சினைக்குரியது அல்ல! முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான செய்தி அறிந்ததும், தன்னுடைய அனைத்துப் பணிகளையும் ஒத்தி வைத்து விட்டு குன்னூர் பறந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதுதான் உண்மையான தேசபக்தி. இதனை மனச்சாட்சி உள்ள யாரும் மறுக்க மாட்டார்கள்.

சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது 1962 ஆம் ஆண்டு, ‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டு, ‘இந்திய நாட்டின் பாதுகாப்பே முக்கியம்’ என்று அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்!

1971 ஆம் ஆண்டு இந்தியாவை பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்புக்கு கண்டனத் தீர்மானம் போட்டவர் முதல்வர் கலைஞர் அவர்கள்!

1972 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின் போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறு கோடி ரூபாய் நிதி வழங்கியவர் முதல்வர் கலைஞர் அவர்கள். அன்றைய தினம் அனைத்து மாநிலங்களும் வழங்கிய தொகை மொத்தம் 25 கோடி. அதில் 6 கோடியை வழங்கியது தி.மு.க. அரசு!

அந்தப் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நிதியும் நிலமும் வழங்கிய அரசு கலைஞரின் அரசு!

1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கிய அரசு முதல்வர் கலைஞரின் அரசு! எனவே தி.மு.க.வின் தேசபக்தி என்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்டது தான்.

1971 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்தபோதும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தான் நடந்து கொண்டு இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக கலைஞர் அவர்கள் இருந்தார். போர் தொடங்கியபோது அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்காக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சென்றிருந்தார். போர் தொடங்கியது என்பதைக் கேள்விப்பட்டதும் உடனடியாக தமிழ்நாடு திரும்பினார். கலைவாணர் அரங்கில் அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வரவேற்பு விழா என்ற பெயரை மாற்றி, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் கண்டனக் கூட்டம்' என்று போட்டு நடத்தச் சொன்னார்.

பாகிஸ்தான் படையெடுப்புக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினார் முதல்வர் கலைஞர். அந்த அடிப்படையில்தான் இன்றைய முதலமைச்சரும் செயல்பட்டு வருகிறார் என்பதை உணர்த்தின குன்னூர் காட்சிகள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லியிலிருந்து கோவை வந்திருந்தார் முப்படைப் தலைமைத் தளபதி பிபின் ராவத். அவர் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து IAF Mi-17V5 ரக ஹெலிகாப்டரில் வெலிங்டன் புறப்பட்டார். அவர் காரில் பயணம் செய்வதாக இருந்தால் அதற்கான முழுப்பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்தும் இருந்தது. ஹெலிகாப்டர் பயணத்தை அவர் தேர்வு செய்தார்.

ஆனால், வெலிங்டன் செல்லும் வழியில் இந்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தி மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார். பின்னர், நீலகிரி மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்த அவர், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனைத் தொடர்பு கொண்டு, விபத்து நடைபெற்ற இடத்திற்கு உடனே விரைய அறிவுறுத்தினார்.

மீட்புப் பணிகள் முடிவடையும்வரை 5 நிமிடங்களுக்கு ஒரு முறை வனத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்த முதலமைச்சர் அவர்கள், உடனடியாக விமானத்தில் கோவைக்குச் சென்றார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக குன்னூர் சென்றடைந்தார். வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்ற அவர், ராணுவ அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். அன்று இரவு குன்னூரிலேயே தங்கி இருந்தார். மறுநாள் காலையில் உடல்களை டெல்லிக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். உத்தரவுகள் பிறப்பித்தார்.

மறுநாள் காலையில் வெலிங்டன் ராணுவ மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்டவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அஞ்சலி செலுத்தினார். பின்னர் 13 பேரின் உடல்களை கோவை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், மேற்கொள்ளவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் பிறகு தான் கோவையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தார் முதலமைச்சர்.

முதலமைச்சரின் இந்த துரிதமான செயலை கட்சிக்கு அப்பாற்பட்ட பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள். இதுதான் உண்மையான தேசபக்தி!

பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லாம் தேசபக்தி இல்லாதவர்கள் அல்ல. எது தேசபக்தி தெரியுமா?

பதின்மூன்று உடல்களைத் தாங்கிய ஆம்புலன்ஸ் வண்டி வந்த பாதைகளில் எல்லாம் திரண்டிருந்த பொதுமக்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியும், மலர்களைத் தூவியும் மரியாதை செலுத்தினார்கள் அல்லவா? அதுதான் உண்மையான தேசபக்தி!

அதிக ராணுவ வீரர்களைக் கொண்ட கம்மவான் பேட்டை கிராமத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்களும், முன்னாள் ராணுவ வீரர்களும் பள்ளி மாணவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள் அல்லவா... அதுதான் உண்மையான தேசபக்தி!

இப்படி தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும், நகரங்களிலும் நடந்துள்ளது. நீலகிரி மாவட்டக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதுதான் தேசபக்தி. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசு வைத்தான்பட்டி அரசுப் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளார்கள். இதுதான் தேசபக்தி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கருப்புச் சால்வை அணிந்து வந்து மலர்வளையம் வைத்தார். அதுதான் தேசபக்தி!

தமிழ்நாட்டு மக்களின் தேசபக்தியை இருட்டு உள்ளங்களால் உணர முடியாது!

banner

Related Stories

Related Stories