முரசொலி நாளேட்டின் இன்றைய (26-08-2021) தலையங்கம் வருமாறு:
ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கொடியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக 150ஆண்டுகளுக்கு முன்பே போராடியது தமிழ்நாடுதான் என்றும் தமிழகத்தின் இந்தப் பங்களிப்பை முழுமையாக தொகுத்து தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும் என்றும் அறிவித்தார்கள். இதனைப் பாராட்டி ‘துக்ளக்’ இதழ் எழுதி இருக்கிறது. சிரிப்பிலேயே விஷமச் சிரிப்பு என்று உண்டு. அதைப் போல, பாராட்டிலேயே புகழ்வது போல பழித்தலும் உண்டு. அப்படித்தான் புகழ்வது போலப் பழித்திருக்கிறார் குருமூர்த்தி.
முதல்வரின் இந்த அறிவிப்பைக் குறிப்பிட்டுவிட்டு, ‘இது நம் நாடு சுதந்திரம் பெறுவதை எதிர்த்த திராவிட இயக்கங்களின் சிந்தனையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அது தமிழகத்துக்கும், பாரத நாட்டுக்கும் நல்லது. அதற்காக முதலில் ஸ்டாலினை நாம் பாராட்டுகிறோம்’ என்று விஷமத்தைக் கக்கி இருக்கிறார் குருமூர்த்தி. அதாவது திராவிட இயக்கம் இந்தியா சுதந்திரம் பெறுவதை எதிர்த்த கட்சி என்பதைச் சொல்லவேண்டும் என்பதற்காக வலியப்போய் முதலமைச்சரைப் பாராட்டி இருக்கிறது ‘துக்ளக்’.
எதைச் சொன்னாலும் தந்தை பெரியாரை, பேரறிஞர் அண்ணாவை, தமிழினத் தலைவர் கலைஞரை, திராவிட இயக்கத்தைக் குறைசொல்லாமல் அவர்களுக்கு கண் அடையாது. அத்தகைய அரிப்பு, ஆரியத்தன்மையாளர்களுக்கு எப்போதும் உண்டு.
பெரியார் தலைமையிலான திராவிட இயக்கத்தின் நோக்கம் என்பது அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல; சமூக விடுதலை, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும். சுயராஜ்யமா? சுயமரியாதையா? என்றால் சுயமரியாதைதான் முக்கியம் என்ற இயக்கம்தான் திராவிட இயக்கம். பிரிட்டிஷாரிடம் இருந்து அரசியல் சுதந்திரம் பெற்ற பிறகு, அந்த ஆட்சியை நடத்தப் போகிறவர்கள் யார்? இன்னொரு ஆதிக்கவாதிகள் கையில் அதிகாரம்போவது எப்படி சுயராஜ்யம் ஆகும் என்று கேட்டார் பெரியார். அதற்காகபிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர் அல்ல அவர்.
பெரியாரின் அரசியல் வாழ்க்கையே காங்கிரஸ் கட்சியில்தான் தொடங்கியது. 1917 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த பெரியார், அக்கட்சியின் தமிழ்நாடு செயலாளராகவும், தலைவராகவும் இருந்தார். கதர்போர்டு தலைவராக இருந்தார். நாடு முழுவதும் கதர் கடைகளை திறந்தவர் அவர். 1921இல் மகாத்மா காந்தி, அவரது ஈரோடு வீட்டுக்கு வந்து தங்கி இருக்கிறார். தனது மைத்துனர் இராமசாமியின் மகளுக்கு ‘காந்தி’ என்று 1922இல் பேர் வைத்தவர் பெரியார். அநேகமாக தமிழ்நாட்டில் காந்தி பெயர் வைக்கப்பட்ட முதல் பெண் அவராகத்தான் இருக்க முடியும். ‘கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என்பது என் கையில் இல்லை, ஈரோட்டில் இரண்டு பெண்களின் கையில் இருக்கிறது’ என்றவர் காந்தி.
காங்கிரசில் இருந்து விலகிய பிறகும், ‘இந்த ஆட்சி முறை ஏன் ஒழியவேண்டும்?’ என்று தலையங்கம் தீட்டியதற்காக ஒன்பது மாதம் சிறையில் இருந்தவர் பெரியார். 1940, 42 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தந்தை பெரியாரைச் சந்தித்து சென்னை மாகாணத்தில் ஆட்சியை நீங்கள் அமைக்கவேண்டும் என்று இந்திய வைஸ்ராய் கேட்டார். பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித்துவத் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தியாவை பூரணவிடுதலை அடையச் செய்வது’ என்பதுதான் 1932 சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை லட்சியமாக அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 1944 சேலம் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள், பிரிட்டிஷ் அரசால் தரப்பட்ட அனைத்து பட்டங்களையும் திரும்ப அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். திராவிட மக்களின் கருத்தைக் கேட்காமல் ஒருசாராரிடம் மட்டும் ஆட்சியை பிரிட்டிஷார் ஒப்படைத்ததைக் கண்டித்துத்தான் ஆகஸ்ட் 15 ஆம் நாளைத் துக்க நாள் என்றார் பெரியார். இல்லை அது சுதந்திரநாள்தான் என்றார் பேரறிஞர் அண்ணா. இந்த வரலாறு எதுவும் தெரியாமல், அல்லது தெரிந்தும் மறைக்கவே ‘துக்ளக்’ முயற்சிக்கிறது. குருமூர்த்தி தனது குருமார்களான ‘மன்னிப்பு திலகங்கள்’ மண்டியிட்டுக் கிடந்த வரலாற்றை வாரம் தோறும் எழுதவேண்டியதுதானே!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முழுப் பேச்சையும் படித்திருந்தால் குருமூர்த்தி இப்படி எழுதியிருக்க மாட்டார். சீன படையெடுப்பின் போது நாட்டுக்காக அண்ணா நின்றதும், பாகிஸ்தான் போரின் போது நாடு காக்க முதல்வர் கலைஞர் நின்றதையும் முதல்வர் சுட்டிக்காட்டி இருந்தார் அந்த உரையில். நாடு காக்க போரிட்ட மானமறவர்களின் தீரத்தைப் போற்றும்வகையில் திராவிட முன்னேற்றக் கழக அரசால் 1967 முதல் இன்று வரை செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் பட்டியல்போட்டார்கள்.
பரலி சு. நெல்லையப்பராக இருந்தாலும் நாமக்கல் கவிஞராக இருந்தாலும் அவர்களைப் போற்றியது கழக அரசு. இன்றும் வ.உ.சி. புகழைப் போற்றுவது கழக அரசு. அதை எல்லாம் மறைப்பதற்காக, திராவிட இயக்கங்கள் சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்தது போல பொய் வரலாறு புனைவது சிலரது புறக்கடை வழக்கம். இப்படித்தான் சில நாட்களுக்கு முன்னால், ஜாலியன் வாலாபாக் படுகொலையை நீதிக்கட்சி ஆட்சி கண்டிக்கவில்லை என்று ‘தினமணி’யில் வைத்தியநாதன் எழுதினார். ‘அப்போது நீதிக்கட்சி ஆட்சிக்கே வரவில்லை' என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மறுத்தார். உடனே மன்னிப்புக் கேட்டுவிட்டார் வைத்தியநாதன். இது வழக்கமானதுதான்!
மத்திய சட்டசபையில் மாவீரன் பகத்சிங், பதுகேஷ்வர் தத் ஆகிய இருவரும் குண்டு வீசியபோது, ‘முழுமூடச் சிகாமணிகள்’ என்று பட்டம்தந்தது அன்றைய ஆனந்தவிகடன். ‘உலக மக்களுக்கு உண்மையான சமத்துவத்தைக் காட்டியவர் பகத்சிங்’ என்று 1931இல் எழுதியது பெரியாரின் ‘குடிஅரசு’. எனவே, ‘துக்ளக்’ தனது வெங்காய வரலாறுகளை வேறு பக்கமாய் போய் உரிக்கலாம்!