முரசொலி தலையங்கம்

“யார் முகத்துல கரி?” : பெரிய பொய் சொல்லி வகையாகச் சிக்கிக்கொண்ட தங்கமணி - முரசொலி சாடல்!

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் தங்கமணி ‘கிணத்தைக் காணோம்’ என்பதைப் போல காமெடி செய்ய முயற்சிப்பதாக முரசொலி நாளேடு தலையங்கத்தில் சாடியுள்ளது.

“யார் முகத்துல கரி?” : பெரிய பொய் சொல்லி வகையாகச் சிக்கிக்கொண்ட தங்கமணி - முரசொலி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (24-08-2021) தலையங்கம் வருமாறு:

நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் நாட்டு மக்கள் முகத்தில் கரி பூச நினைக்கிறார் முன்னாள் அமைச்சர் தங்கமணி. ‘கிணத்தைக் காணோம்’ என்பதைப் போல காமெடி செய்ய முயற்சிக்கிறார் தங்கமணி!

தேங்காய் திருட மரத்தில் ஏறிய ஒருவன் மாட்டிக் கொண்டான். ‘மாங்காய் பறிக்கப் போனேன்’ என்றான். ‘தென்ன மரத்துல மாங்காய் எப்படி இருக்கும்?’ என்று திருப்பிக் கேட்டதும், ‘அதுனாலதான் இறங்கிட்டு இருக்கேன்’ என்றானாம். அதுபோன்ற பதிலாகத்தான் இருக்கிறது தங்கமணி சொல்வது எல்லாம்! ‘நிலக்கரியைக் காணோம்’ என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளிக்கிறார். உடனே தங்கமணி சொல்கிறார், ‘நாங்கதான் அதைக் கண்டுபிடித்தோம்’ என்று!

இங்கே பிரச்சினை, ‘நிலக்கரி எங்கே?’ என்பதுதான். அதற்கு தங்கமணியால் பதில் சொல்ல இயலவில்லை!

“நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்படி சரிபார்க்கப்பட்டதில், வட சென்னை மின் நிலையத்தில் மட்டும், 2.38 லட்சம் டன் நிலக்கரி, பதிவேட்டில் உள்ளதற்கும், களத்தில் உள்ள இருப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. மேலும், 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல், பதிவேட்டில் மட்டும் உள்ளது. இந்த சரிபார்ப்பு பணிகளை, இயக்குனர் உற்பத்தி, இயக்குனர் வினியோகம், தலைமை நிதி அலுவலர் குழு, 6ஆம் தேதியும், 9ஆம் தேதியும் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை என்று தகவல் பெறப்பட்டுள்ளது. இது, முதல் கட்ட ஆய்வு” என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

2.38 லட்சம் டன் என்பது மிகப்பெரிய அளவு. சுமார் 85 கோடி மதிப்பிலானது. இது வட சென்னை நிலவரம் மட்டும்தான். இதே போல் தூத்துக்குடி, மேட்டூரிலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அவையும் வெளியான பிறகு தான் முழு உண்மைகள் வெளியாகும்.

2021 மார்ச் 31 வரையிலான கணக்கெடுப்பு மூலமாகத்தான் இந்தத் தகவல் வெளியில் வந்துள்ளது. இருப்பு, பதிவேடு ஆகிய இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். வடசென்னையில் அப்படி இல்லை. அதைத் தான் அமைச்சர் வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டியவர் அ.தி.மு.க. ஆட்சியில் மின் துறை அமைச்சராக இருந்த தங்கமணி. நிலக்கரியை சரியாகத் தான் வைத்துவிட்டுப் போனோம் என்று தங்கமணி சொல்லி இருக்க வேண்டும். அப்படி அவரால் சொல்லமுடியவில்லை. அதனால் பெரிய பொய்யைத் தேர்ந்தெடுத்தார். ‘நான்தான் அதைக் கண்டுபிடித்தேன்’ என்கிறார் தங்கமணி.

“அ.தி.மு.க அரசு ஏற்கனவே எடுத்த கணக்கைத்தான் தாங்கள் கண்டுபிடித்ததைப் போல அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு வந்தநேரத்தில் நாங்கள் ஆய்வு செய்தோம். அப்போதே நிலக்கரி குறைந்திருந்த விவகாரம் தெரிய வந்தது. முந்தைய ஆட்சியிலேயே 2.38 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லை எனக் கணக்கெடுத்தோம்” என்று சொல்லி இருக்கிறார் தங்கமணி. இவர்கள் ஆட்சியின்போது கண்டுபிடித்தார்கள் என்றால் அதற்கு என்ன ஆதாரம்? அதை தங்கமணி காட்ட வேண்டாமா?

வடசென்னை அனல் மின்நிலையத்தில் நிலக்கரி இருப்பு குறைந்திருப்பதாக தகவல் கிடைத்ததும் இன்றைய தி.மு.க அரசுதான் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைக்கிறது. அக்குழு 6ஆம் தேதியும், 9ஆம் தேதியும் ஆய்வு செய்கிறது. 2.38 லட்சம் டன் நிலக்கரி குறைந்திருப்பதாக அந்தக் குழுதான் சொல்கிறது. தங்கமணி குழு அமைத்தார் என்றால் எந்த தேதியில் அமைத்தார்? அக்குழுவில் இடம் பெற்றவர்கள் யார்? அவர்கள் கொடுத்த அறிக்கை எங்கே? அதற்கு ஆதாரத்துடன் பதில் தர வேண்டாமா?

எம்.ஆர்.விஜயபாஸ்கரும், எஸ்.பி.வேலுமணியும் லஞ்ச ஒழிப்புத்துறையில் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார்கள். குடிசை மாற்று வாரிய கட்டுமான ஊழலில் பன்னீர்செல்வத்தின் பிம்பம் நொறுங்கிக் கொண்டுஇருக்கிறது. அடுத்ததாக நிலக்கரியில் சிக்குகிறார் தங்கமணி. இப்படி ஒவ்வொரு விக்கெட்டாக வீழ்ந்துபடத் தொடங்கி உள்ளது.

மின் வாரியத்துக்கு ரூ.1.57 லட்சம் கோடி கடன் வைத்து விட்டுப்போயிருக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு வட்டி கட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்பது மாத காலமாக எந்த பராமரிப்புப் பணியும் நடக்கவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டன. அதைக்கூடச் செய்யாமல் மின் மிகைமாநிலம் என்ற போலிப் பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டு இருந்தார்கள். புதிய மின் திட்டம் எதையும் தொடங்காமல், இருந்த மின் திட்டத்தையும் முறைப்படி முழுமையாகச் செயல்படுத்தாமல் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதில்தான் தங்கமணி குறியாக இருந்தார். 2013 முதல் 2028 ஆம் ஆண்டு வரைக்குமான 15 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்தம் போட்டஒன்றே போதும் தங்கமணியின் உண்மையான நோக்கம் என்ன என்பதை தெரியப்படுத்தி விடும். 2028 வரைக்கும் அரசு எதுவும் செய்யாது என்பதுதானே இதன் உள்ளர்த்தம்? இரண்டு மடங்கு விலை தரப்பட்டும் உள்ளது.

காற்றாலை மின்சார ஊழல், தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் ஊழல், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்வதில் ஊழல், மின் வாரியத்துக்கு உதிரி பாகங்கள் வாங்குவதில் ஊழல் என்று பல்வேறு புகார்கள் அன்றைய அமைச்சர் தங்கமணி மீது குவிந்தது. ஆளுநரைச் சந்தித்து தி.மு.க சார்பில் ஊழல் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதில் மின்வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி, தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் புகார் தரப்பட்டது. இதோ இப்போது நிலக்கரியையே காணோம்!

மக்கள் முகத்தில் கரி பூச நினைக்கிறார் தங்கமணி. அவர் முகத்தில்தான் முழுக் கரியும் பூசப்பட்டுள்ளது.

    banner

    Related Stories

    Related Stories