முரசொலி தலையங்கம்

“முழு ஊடரங்கு அமலில் இருப்பதாகவே நினைத்து ‘நமக்கு நாமே காவல்’ என்பதுபோல் செயல்பட்ட வேண்டும்” : முரசொலி!

‘முழு ஊடரங்கு அமலில் இருப்பதாகவே நினைத்து’ கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றினால்தான் கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

“முழு ஊடரங்கு அமலில் இருப்பதாகவே நினைத்து ‘நமக்கு நாமே காவல்’ என்பதுபோல் செயல்பட்ட வேண்டும்” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 27,2021) தலையங்கம் வருமாறு:

கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கியதால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பட்டது. பரவல் குறைந்தது. இதனால் கட்டுப்பாட்டு வழிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தளர்வுகளை சலுகைகளாக மக்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. ‘முழு ஊடரங்கு அமலில் இருப்பதாகவே நினைத்து’ கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றினால்தான் கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அதாவது மக்கள் நமக்கு நாமே காவல் என்பதைப் போலச் செயல்பட்டாக வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இதுதொடர்பான அறிவுறுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “கொரோனா நோய்த்தொற்று ஆங்காங்கே மெதுவாய் உயர்ந்து வருவதால் பணியிடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது அவசியம்” என்று அது எச்சரிக்கை செய்துள்ளது.

“தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையில் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு இருந்தது. பொது முடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், நோய்த் தொற்றின் தாக்கம் வெகுவாகக் குறைந்தது. இந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், ஆங்காங்கே மெதுவாக நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், குறிப்பாக பணியிடங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்” என்று சொல்லி இருக்கிறது அரசுக் குறிப்பு.

“காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், உடல் வலி, மணம் மற்றும் சுவை இழப்பு போன்ற கொரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கிறதா என பணியாளர்களிடம் தினமும் கேட்க வேண்டும்.

 கடந்த ஒரு வாரத்தில் பணியாளர்களின் வீடுகளில் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகளோ அல்லது கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகளோ இருந்ததா என அறிய வேண்டும்.

 தினமும் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.

 பணியாற்றும்போது அனைத்து ஊழியர்களும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

 கண்காணிப்பு கேமிராக்கள் மூலமாக ஊழியர்கள் முகக் கவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதை அடிக்கடி அறிய வேண்டும்.

 யாரேனும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் உடனடியாக பணியிடத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

 பணிச்சூழல் காரணமாக முகக்கவசம் அணிய முடியாத நிலை ஏற்பட்டால், முகத்தை மறைக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த அறிவுறுத்தலாம்.

 பணியாளர்களுக்கு இடையே இரண்டு மீட்டர் இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

 இவ்வாறு இடைவெளி விட முடியாத சூழலில் பிளாஸ்டிக் தடுப்புகளை ஊழியர்களுக்கு இடையே பயன்படுத்தலாம்.

 நுழைவு வாயில், முக்கியமான இடங்களில் கிருமிநாசினிகளை வைக்க வேண்டும்.

 கைகளை அடிக்கடி கழுவும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

 உணவு,தேநீர் அருந்தும் இடங்களில் அதிகமானோர் கூடாமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

 சிறு, சிறு குழுக்களாக அமைத்து தேநீர், உணவு அருந்த அனுமதிக்க வேண்டும்.

 ஆயிரம் சதுர அடிக்குக் குறைவான பணியிடங்களாக இருந்தால் பணியாளர்களின் எண்ணிக்கை 300-க்குக் குறைவாக இருக்க வேண்டும் - என்பது போன்ற பல்வேறு அறிவுரைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்துள்ளது. இவை எல்லாம் கட்டுப்பாடுகள் அல்ல.

மக்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள். இதனை முறையாகப் பின்பற்றினாலே போதும் கொரோனாவுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கலாம். எல்லாமே தன்னில் இருந்து தொடங்க வேண்டும் என்பார்கள். அது நல்ல குணங்களாக இருந்தாலும் சரி, சீர்திருத்தங்களாக இருந்தாலும் சரி. அதனைச் சொல்வதற்கு முன்னால், சொல்பவர் அதனைச் செய்து காட்ட வேண்டும் என்பார்கள். அத்தகைய முன்னுதாரணம் உள்ள மனிதர்களாக நாம் அனைவரும் இருந்தாக வேண்டும்.

ஏனென்றால் கொரோனா கொடியது. அதற்கு கண் இல்லை. யார் எவர் என்று பார்த்துத் தொற்றுவது இல்லை. சிக்கியவர்களை அது சிதைக்கிறது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் எச்சரிக்கை உணர்வோடு இருந்தாக வேண்டும். மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை அரசு செய்து தருகிறது. எந்த சூழலிலும் எந்த அலையையும் தாங்கும் வல்லமை கொண்டதாக தி.மு.க. அரசு இருக்கிறது.

தடுப்பூசி போடுவதை பேரியக்கமாகவே நடத்தி வருகிறது. போதுமான அளவுக்கு தடுப்பூசிகளை ஒன்றிய அரசு தரவில்லை என்றாலும், கொடுத்ததை முழுமையாக போட்டுள்ளது. வீணாக்கவில்லை. அதனினும் கூடுதலாக தடுப்பூசிகளைப் பெற்றுச் செலுத்தி வருகிறது அரசு. தனியார் மருத்துவமனைகளிலும் இலவச கொரோனா தடுப்பூசியை செலுத்த ஏற்பாடு செய்துள்ளது அரசு.

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி மூலமாக இலவசமாக தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியை போடும் திட்டத்தை அரசு செயல்படுத்தத் தொடங்கி உள்ளது. தடுப்பூசி தான் தடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறது அரசு. இப்படி புறத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் அரசு முழுமையாக தன்னை ஈடுபடுத்தி உள்ளது. அகத்தில் தன்னைத் தானே காக்கும் பொறுப்பும் கடமையும் பொதுமக்களுக்கு உள்ளது. அகமும் புறமும் சீராகச் செயல்பட்டால் கொரோனாவின் எந்த அலையையும் வெல்லலாம்!

banner

Related Stories

Related Stories