முரசொலி தலையங்கம்

“முதல் காரணமே இப்படியிருக்க, என்னதான் பேசுவார் அண்ணாமலை?” : முரசொலி தலையங்கம்

நீட் தேர்வை ஆதரிப்பவர்களின் சிந்தனை, ‘எல்லாரும் மருத்துவம் படிக்க வந்துவிடக் கூடாது' என்பதாக இருக்கிறது. இந்த சனாதன நோக்கத்துக்கு எதிராகவே நீட்டை எதிர்க்கிறோம்” என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

“முதல் காரணமே இப்படியிருக்க, என்னதான் பேசுவார் அண்ணாமலை?” : முரசொலி தலையங்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 20,2021) தலையங்கம் வருமாறு:

‘நீட் தேர்வை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்போகிறேன்' என்று உறுதி எடுத்திருக்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. அவர் என்ன பேசுவார் என்று நாமும் பார்க்கத் தயாராக இருக்கிறோம்!

இந்த அறிவிப்பைச் செய்தபோது அவர் சமூகநீதியைப் பற்றியும் பேசிஇருக்கிறார். நீட் இல்லாத போது அரசுப் பள்ளி மாணவர்கள் 19 பேர் தான் மருத்துவம் படிக்க முடிந்தது. ஆனால் கடந்த ஆண்டு 400 பேர் சேர்ந்தார்கள். இதுதான் உண்மையான சமூகநீதி என்றும் அவர் சொல்லி இருக்கிறார். கடந்த ஆண்டு எதனால் இத்தனை பேர் உள்ளே நுழைய முடிந்தது என்பதை அண்ணாமலை அறியமாட்டார். ஏனென்றால் அவர் அப்போது அரசியலில் நுழையவில்லை. பா.ஜ.க.வில் சேரவில்லை.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காட்டை வழங்கியதால் மட்டுமே இத்தனை மாணவர்கள் உள்ளேநுழைய முடிந்தது. தமிழ்நாட்டில் நான்கு ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் கொஞ்சம் வாய்ப்பு கடந்த ஆண்டு கிடைத்தது.

2014 ஆம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்தது. அதன்பிறகுதான் மருத்துவக் கல்வியில் நீட் என்ற நுழைவுத் தேர்வு புகுந்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமான அழுத்தம் கொடுத்து வந்தன. அதன்படி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு மதிக்கவில்லை. திருப்பி அனுப்பியது. இப்படி திருப்பி அனுப்பிவிட்டார்கள் என்பதையே எடப்பாடி அரசு யாருக்கும் சொல்லாமல் மறைத்துவிட்டது. மீண்டும் ஒரு தீர்மானம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தையும் பா.ஜ.க அரசு மதிக்கவில்லை. திருப்பி அனுப்பியது. அதையும் நாட்டு மக்களுக்குச் சொல்லாமல் எடப்பாடி அரசு மறைத்துவிட்டது. இதற்கு மத்தியில் 13 மாணவ, மாணவியர் தற்கொலை செய்துகொண்டார்கள்.

2017 - 18, 2018 - 19, 2019 - 20 ஆகிய மூன்று கல்வி ஆண்டிலும் அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டது. ‘தி.மு.க.வின் ஆட்சி - கலைஞரின் ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வை விலக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று 13.9.2020 அன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து 15.9.2020 அன்று அவசர அவசரமாக அரசுப் பள்ளி மாணவர்க்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு என்ற மசோதாவை அன்றைய அ.தி.மு.க அரசு கொண்டு வந்தது. நீதிபதி கலையரசன் ஆணையம் 10 சதவிகித இடஒதுக்கீடு தரச் சொன்னது. ஆனால் அ.தி.மு.க அரசு வழங்கியது 7.5 சதவிகிதம்தான்.

இந்த மசோதாவை செப்டம்பர் 15 ஆம் தேதி நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவிட்டு, அது பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் இருந்தது அ.தி.மு.க அரசு. அக்டோபர் 21 அன்று தி.மு.க தலைவர், ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். நான்கு வாரம் அவகாசம் கேட்டார் ஆளுநர். காலஅவகாசம் தேவை என்று ஆளுநர் கேட்டதையும் அ.தி.மு.க அரசு மறைத்தது. கால அவகாசம் தர முடியாது என்று சொல்லி தி.மு.க போராட்டம் நடத்தியது. ஆளுநரின் அனுமதியே தேவையில்லை, அரசாணை போதும் என்று தி.மு.க எம்.பி. வில்சன் சொன்னபிறகு அரசாணை வெளியிட்டது அரசு. ஆளுநரும் சம்மதித்தார். இதனால்தான் அன்று அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்பட்டது. இதுதான் ‘சமூகநீதி' நிலைநாட்டப்பட்ட வரலாறு. இது தெரியாமல், நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகம் நுழைந்தார்கள் என்று அண்ணாமலை பேசுவதில் அரை சத உண்மை கூட இல்லை.

“முதல் காரணமே இப்படியிருக்க, என்னதான் பேசுவார் அண்ணாமலை?” : முரசொலி தலையங்கம்

அதாவது அண்ணாமலை சொன்ன முதல் ஆதாரமே இந்தளவுக்கு பல்லிளிக்கும்போது அடுத்து அவர் என்னதான் பேசுவார் என்று பார்ப்போமே?

நீட் தேர்வை எதிர்க்கக் காரணம், அது எல்லாவகையிலும் மிக மோசமான தேர்வு முறை என்பதால்தான். இந்த நாட்டில் பல்வேறு கல்விமுறைகள் இருக்கிறது. பாடத் திட்ட முறைகள் இருக்கிறது. அதில் ஒரே ஒரு பாடத்திட்டமுறையில் படித்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத வசதியாக கேள்விகள் கேட்கப்படுகிறது. இது அறிவுத் துரோகம் என்பதால் எதிர்க்கிறோம்!

இந்தத் தேர்வில் பங்கெடுத்து மிகச் சாதாரணமான கடைசி தேர்ச்சி மதிப்பெண்ணை பெற வேண்டுமானாலும் பல லட்சங்கள் செலவு செய்து பயிற்சி மையங்களில் பயிற்சி எடுக்க வேண்டும். இது அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் சாத்தியமா? இல்லை. இந்த பொருளாதாரச் சுரண்டலை நீட் தேர்வு முறை செய்கிறது. அதனால் எதிர்க்கிறோம்!

இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் இந்த தேர்வுக்காக தயாரானவர்கள்தான் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும், அவர்களே அதிகம் சேர்கிறார்கள் என்பது மிகமிக மோசமான வாய்ப்பு மறுப்பாகும். எல்லோராலும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஒதுக்கி தயாராக முடியுமா? முடியாது. இந்த வாய்ப்பு மறுப்பு சமத்துவத்துக்கு எதிரானது!

பன்னிரெண்டு ஆண்டுகள் கற்ற கல்வியை மதிக்காமல், ஒரே ஒரு வினாத்தாள் மூலமாக ஒரு மாணவனின் அறிவைச் சோதித்து விடுவோம் என்பது பொறுப்பற்ற தன்மை என்பதால் எதிர்க்கிறோம்!

நீட் தேர்வை ஆதரிப்பவர்களின் சிந்தனை என்பது, ‘எல்லாரும் மருத்துவம் படிக்க வந்துவிடக் கூடாது' என்பதாக இருக்கிறது. இந்த சனாதன - வர்ணாசிரம நோக்கத்துக்கு எதிராகவே நீட் தேர்வை எதிர்க்கவேண்டியதாக உள்ளது!

இப்படி இருக்கும் போது நீட் தேர்வை ஜனநாயக சக்திகளால் மட்டுமல்ல, சிந்திக்கும் மனிதர்களால் கூட ஆதரிக்க முடியாது!

banner

Related Stories

Related Stories