ரஃபேல் ஒப்பந்தத்தின் விசாரணையை மீண்டும் தொடங்கிவிட்டது பிரான்ஸ். எனவே, இதுவரை அமுக்கப்பட்டு இருந்த ஊழல் ரஃபேல் மீண்டும் உயரப்பறக்கத் தொடங்கிவிட்டது!பிரான்ஸ் நாட்டின் ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பா.ஜ.க அரசு ஒப்பந்தம் போட்டது.
இதன் மொத்த மதிப்பு 59 ஆயிரம் கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதியன்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும் இதில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரசு கட்சி குற்றம்சாட்டியது. எங்களது ஆட்சி காலத்தில் ஒரு விமானத்தை 526 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்குத்தான் ஒப்பந்தம் போட்டோம்.
ஆனால் பா.ஜ.க ஆட்சி ஒரு விமானத்தை 1670 கோடி ரூபாய்க்கு வாங்கப் போவதாக ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால் பலனடைந்தவர்கள் யார் என்று காங்கிரசு கட்சி கேள்வி எழுப்பியது. இதனை பா.ஜ.க. அரசும் மறுத்தது. டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமும் மறுத்தது.
பிரான்ஸைச் சேர்ந்த புலனாய்வு இணைய தளமான மீடியா பார்ட் சார்பில், கடந்த ஏப்ரல் மாதம் ஒரு செய்தி பரப்பப்பட்டது. ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியத் தரகர் ஒருவருக்கு 8.8 கோடி ரூபாய் (இந்திய மதிப்பு) லஞ்சமாகத் தரப்பட்டது என்று சொல்லப்பட்டது. அதையும் பா.ஜ.க அரசு மறுத்தது.
இந்தச் சூழலில் பிரான்ஸ் அரசிடம், பொருளாதாரக் குற்றங்களை விசாரிக்கும் ஷேர்பா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமும் புகார் அளித்தது. மீடியா பார்ட், ஷேர்பா ஆகிய இருவரது புகாரை வைத்து இப்போது பிரான்ஸ் அரசு முறையான விசாரணையை கடந்த ஜூன் 14 ஆம் தேதி தொடங்கிவிட்டதாகச் செய்தி வெளியாகி உள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தேசிய நிதி விசாரணை அதிகாரி அலுவலகம் என்ற அமைப்பு இந்த விசாரணையைத் தொடங்கி இருக்கிறது. எனவே அடுத்தடுத்து பல அதிர்ச்சியான தகவல் கள் பிரான்ஸில் இருந்து வெளியாகலாம்.
மீண்டும் இதனை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. “பிரான்ஸ் அரசு விசாரணையைத் தொடங்கி இருப்பதால் இதுவரை நாங்கள் சொன்னது சரியானது என்பது நிரூபணம் ஆகிறது. இந்த விவகாரம் தேசியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்புடையது.
எனவே நேர்மையான - சுதந்திரமான விசாரணையான நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை அவசியம் தேவை. இது இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல. நாட்டின் பிரச்சினை. நாடாளுமன்ற கூட்டுக்குழுவால்தான் அனைத்து ஆவணங்களையும் கேட்டுப் பெற முடியும். உச்ச நீதிமன்றத்துக்கோ, ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கோ கூட இந்த அதிகாரம் இல்லை” என்று காங்கிரசு கட்சி சொல்லி இருக்கிறது.
இதனை பா.ஜ.க நிராகரித்துள்ளது. “விசாரணை நடத்துவதாலேயே ஊழல் நடந்ததாகச் சொல்ல முடியாது. மக்களிடம் தேவையில்லாத வதந்திகளை காங்கிரசு பரப்பி வருகிறது. இதன் மூலமாக நாட்டை காங்கிரசு வலுவிழக்கச் செய்கிறது” என்று அக்கட்சி சொல்லி இருக்கிறது. தங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால், உடனே நாட்டுக்கு வந்த ஆபத்தாக மடை மாற்றம் செய்வது இவர்களது வழக்கமான வாடிக்கைதான்.
அதைத்தான் இந்த ரஃபேல் விவகாரத்திலும் செய்கிறது பா.ஜ.க. ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்துக்கு அதிக விலை ஏன் கொடுக்கப்பட்டது? அப்படி கூடுதல் விலை கொடுக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? ‘டஸால்ட்’ நிறுவனத்தின் இந்திய முதலீட்டாளர்களாக சிலரை நியமிக்க நிர்பந்தங்கள் தரப்பட்டதா? உலகளாவிய மிகப்பெரிய நிறுவனம், இங்கு இந்திய முதலீட்டாளரை தேட வேண்டிய அவசியம் என்ன? அந்த இந்திய முதலீட்டாளருக்கும் பா.ஜ.க அரசுக்கும் தொடர்பு உண்டா? அந்த இந்திய முதலீட்டாளருக்கு மிகமிக அளவுக்கு மீறிய பங்குகளை டஸால்ட் தருவதற்கு நிர்பந்திக்கப்பட்டதா? அது மனப்பூர்வமாக இல்லாமல் தரப்பட்டது என்று பிரான்ஸ் பத்திரிக்கைகள் எழுதுவது உண்மையா?
இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களைச் செய்வதற்கு முதலில் ஒப்பந்தம் போட்டிருந்த பொதுத்துறை நிறுவனமான ஏரோநாட்டிகல் எதனால் புறக்கணிக்கப்பட்டது? பொதுத்துறை நிறுவனத்துக்கு கொடுத்திருந்தால் அரசு பணம், அரசுக்கே மீண்டும் திரும்ப வந்திருக்குமே? தங்களுக்கு அழுத்தம் இருந்தது என்று பிரான்ஸ் அதிபர் சொன்னதன் பின்னணி என்ன? தங்களுக்கு வேறு வாய்ப்புகள் தரப்படவில்லை என்றும் அவர் சொன்னது எதனால்? - இவ்வளவு சந்தேகங்கள் இதில் இருக்கின்றன.
இவை அனைத்துக்குமான முழு உண்மை வெளியில் வருமா எனத் தெரியாது. ஆனால் வர வேண்டும் என்பது நாட்டு மக்களின் எண்ணமாகும்! மக்களின் முன்னால் ரஃபேல் ஊழல் விசாரணை நடக்கத் தொடங்கி இருக்கிறது. பிரான்ஸ் அரசு நடத்தும் விசாரணையைப் போலவே, ஒன்றிய அரசும் (தன்மீது குற்றம் இல்லை என்றால்!) நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை நடத்த வேண்டும். குற்றம் நடக்கவில்லை என்றால் விசாரணையில் தாங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதுதான் நேர்மையான அரசுக்கு அழகு!